விவசாயக் கடன் தள்ளுபடி விவகாரம்: மகாராஷ்டிர பாஜக அரசுக்கு உத்தவ் தாக்கரே எச்சரிக்கை

விவசாயக் கடன் தள்ளுபடி விவகாரம்: மகாராஷ்டிர பாஜக அரசுக்கு உத்தவ் தாக்கரே எச்சரிக்கை

விவசாயக் கடன் தள்ளுபடி திட்டத்தை முறையாக செயல்படுத்தவில்லையெனில், மகாராஷ்டிரத்தை ஆளும் பாஜக அரசை மக்கள் மத்தியில் அம்பலப்படுத்துவோம் என்று கூட்டணிக் கட்சியான சிவசேனையின்

விவசாயக் கடன் தள்ளுபடி திட்டத்தை முறையாக செயல்படுத்தவில்லையெனில், மகாராஷ்டிரத்தை ஆளும் பாஜக அரசை மக்கள் மத்தியில் அம்பலப்படுத்துவோம் என்று கூட்டணிக் கட்சியான சிவசேனையின் தலைவர் உத்தவ் தாக்கரே எச்சரிக்கை விடுத்துள்ளார்.
இதுதொடர்பாக சிவசேனையின் அதிகாரப்பூர்வ நாளேடான சாம்னாவுக்கு அளித்துள்ள பேட்டியில், அவர் தெரிவித்திருப்பதாவது:
தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத் பவார், மத்திய வேளாண் துறை அமைச்சராக முன்பு பதவி வகித்தபோது, விவசாயக் கடனை தள்ளுபடி செய்ய வேண்டும் என்று சிவசேனைதான் முதலில் வலியுறுத்தியது. அதிக அளவில் விவசாயிகள் தற்கொலை செய்யும் சம்பவங்கள் நடைபெறும் மாநிலங்களில், துரதிருஷ்டவசமாக மகாராஷ்டிரம் முதலாமிடத்தில் உள்ளது. மகாராஷ்டிரம் முதலிடம் வகிக்க வேண்டிய இடம் இதுவல்ல. எனவே கடன் இல்லாமல் விவசாயிகள் சுதந்திரமாக இருக்க வேண்டும் என்பதே எனது விருப்பமாகும்.
மகாராஷ்டிரத்தில் விவசாயக் கடன் தள்ளுபடி தொடர்பான திட்டம் அறிவிக்கப்பட்டு ஒரு மாதத்துக்கும் மேலாகிவிட்டது. ஆனால், இதுவரையில் 2,500 விவசாயிகள்தான் அதனால் பயனடைந்துள்ளனர். விவசாயக் கடன் தள்ளுபடி தொடர்பான அறிவிப்பை மாநில அரசு வெளியிட்ட பிறகும், அதுதொடர்பாக வங்கிகளுக்கு தெளிவான அறிவுறுத்தல்கள் இதுவரையிலும் அளிக்கப்படவில்லை.
மகாராஷ்டிரத்தில் 36 லட்சம் விவசாயிகளின் கடன்கள் தள்ளுபடி செய்யப்படும் என்றும், இந்தத் திட்டத்தால் 89 லட்சம் விவசாயிகள் பயனடைவார்கள் என்றும் மாநில அரசு தெரிவித்துள்ளது. அதன்படி, கடன் தள்ளுபடி செய்யப்பட்ட 36 லட்சம் விவசாயிகளின் பெயரையும் மாநில சட்டப் பேரவையில் அரசு வெளியிட வேண்டும்.
விவசாயக் கடன் தள்ளுபடி தொடர்பான திட்டத்தை முறையாக அமல்படுத்துவதில் மகாராஷ்டிர அரசு தோல்வியடையும்பட்சத்தில், அரசை மக்கள் மத்தியில் அம்பலப்படுத்துவதற்கு சிவசேனை சிறிதும் தயங்காது.
விவசாயக் கடன் தள்ளுபடி திட்டம் செயல்படுத்தப்படும் வரையில், விவசாயிகளுக்கு நிதியுதவியாக ரூ.10 ஆயிரத்தை அரசு அளிக்க வேண்டும். விவசாயிகளுக்கு விதைகள், உரங்கள் வாங்குவதற்கு அந்த நிதி உதவிகரமாக இருக்கும் என்று அந்த பேட்டியில் உத்தவ் தாக்கரே குறிப்பிட்டுள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com