வந்தே மாதரம் விவகாரத்தில் சென்னை உயர்நீதிமன்ற தீர்ப்புக்கு பாஜக வரவேற்பு

வந்தே மாதரம் பாடலை கட்டாயம் பாட வேண்டும் என்ற சென்னை உயர் நீதிமன்ற தீர்ப்பை பாரதிய ஜனதா கட்சி செவ்வாய்கிழமை வரவேற்றுள்ளது.
வந்தே மாதரம் விவகாரத்தில் சென்னை உயர்நீதிமன்ற தீர்ப்புக்கு பாஜக வரவேற்பு

வந்தே மாதரம் பாடலை கட்டாயம் பாட வேண்டும் என்ற சென்னை உயர் நீதிமன்ற தீர்ப்புக்கு பாஜக தலைவர்கள் பலர் ஆதரவு தெரிவித்துள்ளனர். 

இது ஒரு நல்ல தீர்ப்பு. பள்ளி, கல்லூரி மற்றும் அலுவலகங்களில் தேசிய கீதமும், தேசிய பாடலும் கட்டாயம் பாட வேண்டும் என்பதால் அனைவரும் இதை மனதார பாடுவதற்கு முயற்சி செய்வார்கள்.

இதனை பாடக்கூடாது என்பதற்கு எவ்வித காரணமும், முகாந்திரமும் மக்களிடம் இல்லை. இந்த வழக்கை எதிர்த்து மேல்முறையீடு செய்வோர் இதுபோன்று தேசிய கீதம் பாடக்கூடாது என்பதற்கு ஒரு சிறந்த உதாரணமாவது அளிக்க வேண்டும் என பாஜக எம்.பி பபூல் சுப்ரியோ தெரிவித்தார்.

தேசிய கீதமும், தேசிய பாடலும் கட்டாயம் பாட வேண்டும் என்ற சென்னை உயர் நீதிமன்ற தீர்ப்பை நான் முழு மனதாக வரவேற்கிறேன். தேசிய கீதத்தின் புனிதத்துவம் காரணமாகவே நமது ராணுவ வீரர்கள் உயிர்தியாகம் செய்யவும் தயாராக உள்ளனர்.

சென்னை உயர் நீதிமன்றத்தின் இந்த தீர்ப்பு நாடு முழுவதும் அமல்படுத்தும் நாளுக்காக நான் காத்திருக்கிறேன் என மற்றொரு பாஜக எம்.பி. சத்யபால் சிங் கூறினார்.

நம் தாய் நாட்டின் மகத்துவம் தெரியாதவர்களும், நாட்டுப்பற்று இல்லாதவர்களும் தான் இதுபோன்று தேசிய கீதம், தேசிய பாடல் பாடுவதற்கு எதிர்ப்பு தெரிவிப்பார்கள்.

இதனைப் பொறுத்தவரையில் ஜாதி, மதம் எதுவும் கிடையாது. நாட்டுப்பற்றுதான் முக்கியம் என பாஜக எம்.பி. மீனாக்ஷி லேகி தெரிவித்தார்.

முன்னதாக, தமிழக பள்ளி, கல்லூரி, அரசு மற்றும் தனியார் அலுவலகங்களில் வந்தே மாதரம் பாடலை கட்டாயம்  பாட வேண்டும் என்று சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.

வாரத்தில் ஒரு நாள் பள்ளி மற்றும் கல்லூரிகளில் திங்கட்கிழமை அல்லது வெள்ளிக்கிழமை வந்தே மாதரம் பாடலை கட்டாயம் பாட வேண்டும். அரசு மற்றும் தனியார் அலுவலகங்களில் மாதம் ஒரு முறை வந்தே மாதரம் பாடலை ஒலிபரப்ப வேண்டும் என்று நீதிபதி எம்.வி.முரளிதரன் உத்தரவிட்டார்.

ஆசிரியர் வாரியம் நடத்திய தேர்வில் வந்தே மாதம் எந்த மொழியில் இயற்றப்பட்டது என்ற கேள்விக்கு வங்கமொழி என பதில் அளித்தும் மதிப்பெண் வழங்கப்படவில்லை என்று வீரமணி என்பவர் தொடர்ந்த வழக்கில் இன்று தீர்ப்பளிக்கப்பட்டது.

அப்போது, அந்த கேள்விக்கு மதிப்பெண் அளித்து, வீரமணிக்கு ஆசிரியர் பணி வழங்கவும் உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இந்த வழக்கு விசாரணையின் போதுதான் வந்தே மாதரம் பாடல் கட்டாயம் இடம்பெற வேண்டும் என்றும் நீதிபதி உத்தரவிட்டார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com