அமளியில் ஈடுபட்ட 6 காங்கிரஸ் எம்.பி.க்கள் மக்களவையிலிருந்து 5 நாள்களுக்கு இடைநீக்கம்: சுமித்ரா மகாஜன் நடவடிக்கை

வன்முறைக் கும்பல்களால் சிலர் அடித்துக் கொல்லப்பட்டது தொடர்பான பிரச்னையை எழுப்பி மக்களவையில் அமளியில் ஈடுபட்ட காங்கிரஸ் எம்.பி.க்கள் 6 பேரை அவைத் தலைவர்
5 நாள்களுக்கு இடை நீக்கம் செய்யப்பட்ட காங்கிரஸ் எம்.பி.க்கள் ரஞ்சித் ரஞ்சன், சுஷ்மிதா தேவ், அதிர் ரஞ்சன் சௌத்ரி (மேல்வரிசை-இடமிருந்து), கௌரவ் கோகோய், கே. சுரேஷ், எம்.கே. ராகவன் ஆகியோர்
5 நாள்களுக்கு இடை நீக்கம் செய்யப்பட்ட காங்கிரஸ் எம்.பி.க்கள் ரஞ்சித் ரஞ்சன், சுஷ்மிதா தேவ், அதிர் ரஞ்சன் சௌத்ரி (மேல்வரிசை-இடமிருந்து), கௌரவ் கோகோய், கே. சுரேஷ், எம்.கே. ராகவன் ஆகியோர்

வன்முறைக் கும்பல்களால் சிலர் அடித்துக் கொல்லப்பட்டது தொடர்பான பிரச்னையை எழுப்பி மக்களவையில் அமளியில் ஈடுபட்ட காங்கிரஸ் எம்.பி.க்கள் 6 பேரை அவைத் தலைவர் சுமித்ரா மகாஜன் திங்கள்கிழமை 5 நாள்களுக்கு இடைநீக்கம் செய்தார்.
தலித்துகள் மற்றும் முஸ்லிம்களுக்கு எதிராக இழைக்கப்படும் வன்கொடுமைகள் குறித்த விவகாரத்தை மக்களவை காங்கிரஸ் எம்.பி.க்கள் குழுத் தலைவர் மல்லிகார்ஜுன கார்கேவும், சில காங்கிரஸ் எம்.பி.க்களும் மக்களவையில் திங்கள்கிழமை எழுப்பினர்.
அவர்கள் இது பற்றிப் பேசுவதற்கு அவைத் தலைவர் சுமித்ரா மகாஜன் அனுமதி அளித்தார்.
அதேபோல், இந்த விவகாரம் தொடர்பாக விவாதம் நடத்துவதற்கு நாடாளுமன்ற விவகாரத்துறை அமைச்சர் அனந்தகுமாரும் ஒப்புக் கொண்டனர்.
எனினும், காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த சில எம்.பி.க்கள் அவையின் மையப்பகுதிக்குச் சென்று கோஷங்களை எழுப்பி அமளியில் ஈடுபட்டனர். மேலும், மக்களவை செயலகத்தில் உள்ள ஊழியர்களின் மேஜையில் இருந்து எடுத்து வந்திருந்த காகிதங்களை அந்த எம்.பி.க்கள் அவையில் கிழித்தெறிந்தனர். இதையடுத்து அவையை சில மணிநேரங்களுக்கு சுமித்ரா மகாஜன் ஒத்திவைத்தார்.
அதன் பின், அவை மதியம் 2 மணிக்கு மீண்டும் கூடியது. அப்போது, காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த கௌரவ் கோகோய், கே.சுரேஷ், அதீர் ரஞ்சன் சௌத்ரி, ரஞ்சித் ரஞ்சன், சுஷ்மிதா தேவ், எம்.பி.ராகவன் ஆகியோர் பொறுப்பற்ற வகையில் நடந்து கொண்டதாகவும், அவைத் தலைவர் பதவியின் கண்ணியத்தைச் சீர்குலைத்ததாகவும் சுமித்ரா மகாஜன் தெரிவித்தார். இந்த 6 எம்.பி.க்களையும் அடுத்த 5 தினங்களுக்கு அவையில் இருந்து இடைநீக்கம் செய்வதாகவும் அவர் அறிவித்தார்.
இந்த அறிவிப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து, காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த பெரும்பாலான எம்.பி.க்கள் அவையின் மையப் பகுதிக்குச் சென்று அமளியில் ஈடுபட்டனர்.
அக்கட்சியைச் சேர்ந்த கே.சி.வேணுகோபால் கூறுகையில், அனைத்து காங்கிரஸ் எம்.பி.க்களையும் அவைத் தலைவர் இடைநீக்கம் செய்ய வேண்டும் என்று ஆவேசத்துடன் குறிப்பிட்டார். அப்போது காங்கிரஸ் தலைவர் சோனியாவும் அவையில் இருந்தார்.
சிறிய ஒத்திவைப்புக்குப் பின் அவை 2.30 மணிக்கு மீண்டும் கூடியது. அப்போது 6 எம்.பி.க்களின் இடைநீக்கத்தைக் கண்டித்து காங்கிரஸ் எம்.பி.க்களுடன் இணைந்து இடதுசாரி எம்.பி.க்களும் எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால் ஏற்பட்ட அமளியைத் தொடர்ந்து அவையை துணைத் தலைவர் எம்.தம்பிதுரை நாள் முழுவதும் ஒத்திவைத்தார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com