கருத்தொற்றுமை ஏற்படாவிட்டாலும் தேர்தல் பத்திரங்களை வெளியிடுவதில் உறுதி: மத்திய அரசு திட்டவட்டம்

அரசியல் கட்சிகளிடையே கருத்தொற்றுமை ஏற்படாவிட்டாலும், தேர்தல் பத்திரங்கள் வெளியிடும் திட்டத்தை செயல்படுத்துவதில் உறுதியாக இருப்பதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.
கருத்தொற்றுமை ஏற்படாவிட்டாலும் தேர்தல் பத்திரங்களை வெளியிடுவதில் உறுதி: மத்திய அரசு திட்டவட்டம்

அரசியல் கட்சிகளிடையே கருத்தொற்றுமை ஏற்படாவிட்டாலும், தேர்தல் பத்திரங்கள் வெளியிடும் திட்டத்தை செயல்படுத்துவதில் உறுதியாக இருப்பதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.
தில்லியில் திங்கள்கிழமை நடைபெற்ற வருமான வரி தின நிகழ்ச்சியில் தேர்தல் பத்திரம் தொடர்பாக மத்திய நிதியமைச்சர் ஜேட்லி மீண்டும் பேசினார். அப்போது அவர் கூறியதாவது:
தேர்தல் பத்திரத்தை வெளியிடுவது தொடர்பாக யோசனைகளை தெரிவிக்கும்படி, அரசியல் கட்சிகளிடம் மத்திய அரசு கேட்டிருந்தது. ஆனால், இதுவரையிலும் அரசியல் கட்சிகளிடம் இருந்து மத்திய அரசுக்கு எந்த யோசனைகளும் வரவில்லை. ஒருவேளை, வரும் நாள்களில் அரசியல் கட்சிகளிடம் இருந்து இதுதொடர்பாக யோசனைகள் எதுவும் வரவில்லையென்றாலும் சரி, கருத்து ஒற்றுமை ஏற்படவில்லையென்றாலும் சரி, மத்திய அரசு தனது பொறுப்பை தட்டிக் கழிக்காது.
தேர்தல் பத்திரத்தை நிச்சயம் அரசு வெளியிடும். இதுதொடர்பாக சட்டத்தையும் அரசு கொண்டு வரும் என்றார் அருண் ஜேட்லி.
அரசியல் கட்சிகளுக்கு நன்கொடை அளிப்பதில் புதிய கட்டுப்பாடுகளைக் கொண்டு வருவது தொடர்பாக மத்திய அரசு தீவிர நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. நாடாளுமன்றத்தில் 2017-18ஆம் ஆண்டு பட்ஜெட் தாக்கலின்போது மத்திய நிதியமைச்சர் அருண் ஜேட்லி பேசியபோது, இதுதொடர்பாக பல்வேறு யோசனைகளைத் தெரிவித்தார். அதில் ஒரு யோசனை, தேர்தல் பத்திரம் தொடர்பானது ஆகும். அதாவது, இந்த தேர்தல் பத்திரங்களை வங்கிகள் விற்பனை செய்யும். பத்திரத்தில் நிதி அளிப்பவரின் பெயர் இடம்பெறாது. இருந்தபோதும், முறையாக வரி செலுத்திய பணம்தான், அரசியல் அமைப்புக்கு வருவது உறுதி செய்யப்படும்.
தேர்தல் பத்திரத்தை வெளியிடுவதற்கு ரிசர்வ் வங்கியின் சட்டத்தை திருத்தம் செய்ய வேண்டியுள்ளது. இதுதொடர்பான பணிகளில் மத்திய அரசு ஈடுபட்டிருப்பதாகவும் பட்ஜெட் தாக்கலின்போது ஜேட்லி தெரிவித்திருந்தார்.
இதேபோல், தில்லியில் சனிக்கிழமை நடைபெற்ற பொருளாதார மாநாட்டில் பேசியபோதும், இதை கருத்தை ஜேட்லி முன்வைத்தார்.
அப்போது அவர், கடந்த 70 ஆண்டுகால இந்திய ஜனநாயகம், கண்ணுக்குத் தெரியாத பணத்தினால் இயங்கி வந்ததாகவும், இதை தடுப்பதற்கு மக்கள் பிரதிநிதிகளும், அரசியல் கட்சிகளும், மத்திய, மாநில அரசுகள் மற்றும் தேர்தல் ஆணையமும் தவறி விட்டதாகக் குற்றம்சாட்டியிருந்தார். தேர்தல் பத்திரத்தை வெளியிடுவது தொடர்பாக அரசுக்கு அரசியல் கட்சிகள் தங்களது யோசனைகளை தெரிவிக்கலாம் என்றும் ஜேட்லி கேட்டுக் கொண்டார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com