பாஜகவின் குடியரசு துணைத் தலைவர் வேட்பாளர் வெங்கய்ய நாயுடு மீது நில மோசடி குற்றச்சாட்டு

பாஜகவின் குடியரசு துணைத் தலைவர் வேட்பாளர் வெங்கய்ய நாயுடுவும், அவரது குடும்பத்தினரும் நில மோசடி உள்பட பல்வேறு முறைகேடுகளில் ஈடுபட்டதாக காங்கிரஸ் குற்றம்சாட்டியுள்ளது.
பாஜகவின் குடியரசு துணைத் தலைவர் வேட்பாளர் வெங்கய்ய நாயுடு மீது நில மோசடி குற்றச்சாட்டு

பாஜகவின் குடியரசு துணைத் தலைவர் வேட்பாளர் வெங்கய்ய நாயுடுவும், அவரது குடும்பத்தினரும் நில மோசடி உள்பட பல்வேறு முறைகேடுகளில் ஈடுபட்டதாக காங்கிரஸ் குற்றம்சாட்டியுள்ளது.
தில்லியில் செய்தியாளர்களிடம் திங்கள்கிழமை பேசிய காங்கிரஸ் மூத்த தலைவர் ஜெய்ராம் ரமேஷ் இது தொடர்பாக கூறியதாவது:
அரசு நிர்வாகத்தில் வெளிப்படைத்தன்மை, நேர்மை குறித்து வெங்கய்ய நாயுடு தொடர்ந்து பேசி வருகிறார். ஆனால், அவரது சொந்த மாநிலமான ஆந்திரத்தின் நெல்லூர் மாவட்டத்தில் வெங்கய்ய நாயுடுவும் அவரது குடும்பத்தினரும் நில மோசடியில் ஈடுபட்டுள்ளனர்.
ஏழைகளுக்கும், நிலமற்றவர்களுக்கும் ஒதுக்கப்பட்ட நிலத்தை வெங்கய்ய நாயுடுவும், அவரது குடும்பத்தினரும் மோசடியாகக் கைப்பற்றினர். பின்னர் பொதுமக்கள் தொடர்ந்து நடத்திய போராட்டம், அரசியல் நெருக்கடி காரணமாக அந்த நிலத்தை திருப்பி அளிக்க வேண்டிய நிலை வெங்கய்ய நாயுடுவுக்கு ஏற்பட்டது.
மேலும், ஹைதராபாதில் வெங்கய்ய நாயுடுவின் மகள் நடத்தி வரும் அமைப்புக்கு ரூ.2 கோடி வரை ஆதாயம் கிடைக்கும் வகையில் தெலங்கானா மாநில அரசு ரகசிய உத்தரவு பிறப்பித்துள்ளது. இது தவிர வெங்கய்ய நாயுடுவின் மகன், தெலங்கானா முதல்வரின் மகன் ஆகியோர் நடத்தி வரும் மோட்டார் வாகன விற்பனையகத்தில் இருந்து கடந்த 2014-ஆம் ஆண்டில் ரூ.271 கோடி மதிப்பில் தெலங்கானா மாநில போலீஸாருக்குத் தேவையான வாகனங்கள் வாங்கப்பட்டுள்ளன. இதற்கு பகிரங்கமாக எவ்வித ஒப்பந்தப்புள்ளியும் கோரப்படவில்லை.
வெங்கய்ய நாயுடு தலைவராக இருந்த ஒரு தொண்டு நிறுவனத்துக்கு மத்தியப் பிரதேச அரசு ஒதுக்கிய 20 ஏக்கர் நிலத்தை ரத்து செய்து கடந்த 2011-ஆம் ஆண்டில் உச்ச நீதிமன்றம் ஓர் உத்தரவைப் பிறப்பித்தது. இது தொடர்பாக வெங்கய்ய நாயுடு பதிலளிக்க வேண்டும். இந்தக் குற்றச்சாட்டுகளுக்கு நியாயமாக பதிலளிக்க வேண்டிய பொறுப்பு பாஜகவுக்கும் உள்ளது.
ஏனெனில், நாட்டின் மிக உயரிய பதவிகளில் ஒன்றான குடியரசு துணைத் தலைவர் பதவிக்கு அவரை பாஜக முன்னிறுத்தியுள்ளது. பொது வாழ்வில் தூய்மை குறித்துப் பேசி வரும் வெங்கய்ய நாயுடு முதலில் தன் மீதான குற்றச்சாட்டுகளுக்கு முறையாக பதிலளிக்க வேண்டும் என்றார் அவர்.
இது குறித்து வெங்கய்ய நாயுடு கூறியதாவது:
இந்தக் குற்றச்சாட்டுகள் அனைத்தும் முன்பே கூறப்பட்டவைதான். அவை அனைத்துக்கும் ஏற்கெனவே பதில் அளித்தாகிவிட்டது. இந்த விஷயத்தில் சிலர் நீதிமன்றத்தை அணுகினார்கள். ஆனால், அவர்களது மனுக்களை நீதிமன்றம் தள்ளுபடி செய்துவிட்டது. இந்தக் குற்றச்சாட்டை அவர்கள் இந்தத் குடியரசு துணைத்தலைவர் தேர்தலுடன் நிறுத்திக் கொள்வார்கள் என்று நினைக்கிறேன் என்றார்.
பாஜக மூத்த தலைவரும், நாடாளுமன்ற விவகாரத்துறை அமைச்சருமான அனந்த குமார் இது குறித்து கூறியதாவது:
வெங்கய்ய நாயுடு மீது ஜெய்ராம் ரமேஷ் கூறும் குற்றச்சாட்டுகள் அடிப்படை ஆதாரமற்றவை. எவ்வித ஆதாரமும் இல்லாமல் வெங்கய்ய நாயுடு மீதும் அவரது குடும்பத்தினர் மீதும் குற்றச்சாட்டுகளை அள்ளி வீசுகிறார் என்றார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com