போஃபர்ஸ் பீரங்கி ஊழல் குறித்து மீண்டும் விசாரணை: மக்களவையில் பாஜக வலியுறுத்தல்

மறைந்த முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்திக்கு பெரும் பிரச்னையை ஏற்படுத்திய போஃபர்ஸ் பீரங்கி ஊழல் விவகாரம் குறித்து மீண்டும் முறையான விசாரணை நடத்தப்பட வேண்டும் என்று மக்களவையில்

மறைந்த முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்திக்கு பெரும் பிரச்னையை ஏற்படுத்திய போஃபர்ஸ் பீரங்கி ஊழல் விவகாரம் குறித்து மீண்டும் முறையான விசாரணை நடத்தப்பட வேண்டும் என்று மக்களவையில் பாஜக எம்.பி.க்கள் திங்கள்கிழமை வலியுறுத்தினர்.
மக்களவையில் இந்த விவகாரத்தை பாஜக எம்.பி.க்கள் மீனாட்சி லேகி, நிஷிகாந்த் துபே ஆகியோர் திங்கள்கிழமை எழுப்பினர். அப்போது அவர்கள், போஃபர்ஸ் பீரங்கி ஊழல் விவகாரம் குறித்து மீண்டும் விசாரணை நடத்தப்பட வேண்டும் என்றும், நாட்டு மக்களுக்கு இந்த விவகாரத்தின் அனைத்து பின்னணிகளும் தெரியப்படுத்த வேண்டும் என்றும் குறிப்பிட்டனர்.
இதை நாடாளுமன்ற விவகாரத் துறை அமைச்சர் அனந்த் குமாரும் ஆதரித்தார். அப்போது அவர் பேசியதாவது:
போஃபர்ஸ் ஊழல் விவகாரம் குறித்து ஏராளமான ஆதாரங்களை இந்தியாவிடம் ஸ்வீடன் அரசு அளித்துள்ளது. அதிலிருந்து, இந்த விவகாரத்தில் இதற்கு முன்பு லஞ்சமாக அளிக்கப்பட்டதாகக் கணக்கிடப்பட்ட தொகையைக் காட்டிலும் அதிக தொகை லஞ்சமாக வழங்கப்பட்டிருப்பது தெரிய வருகிறது.
போஃபர்ஸ் ஊழல் குறித்து விசாரணை நடத்திய ஸ்வீடன் நாட்டு மூத்த அதிகாரி, ராஜீவ் காந்திக்கும் இதில் தொடர்பு உண்டு எனத் தெரிவித்துள்ளார்.
ஆதலால், இந்த விவகாரம் குறித்து விரிவான விசாரணை நடத்த வேண்டியது அவசியமாகும் என்றார் அனந்த் குமார்.
போஃபர்ஸ் ஊழல் குறித்து மீண்டும் விசாரணை நடத்த மத்திய அரசு உத்தரவிடுமா? என்று அனந்த் குமாரிடம் கேட்கப்பட்டது. அதற்கு அவர் பதிலளிக்க மறுத்து விட்டார். தேசியப் பாதுகாப்புடன் தொடர்புடைய இந்த விவகாரத்தில் இருந்து காங்கிரஸால் தப்பியோட முடியாது என்று அவர் தெரிவித்தார்.
ஸ்வீடனின் போஃபர்ஸ் ஏபி நிறுவனத்திடம் இருந்து ஹெளயிட்சர் பீரங்கிகள் வாங்குவது தொடர்பாக இந்தியா கடந்த 1986-ஆம் ஆண்டு ஒப்பந்தம் செய்தது.
இந்த விவகாரத்தில், இந்திய அரசியல்வாதிகள் உள்ளிட்டோருக்கு மிகப்பெரிய தொகை லஞ்சமாக அளிக்கப்பட்டதாக குற்றச்சாட்டு எழுந்தது. குறிப்பாக, ராஜீவ் காந்திக்கு இதில் தொடர்பு உண்டு என்று புகார் கூறப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com