மொசூலில் கடத்தப்பட்ட இந்தியர்களின் நிலை என்ன?: இராக் வெளியுறவு அமைச்சர் பதில்

இராக்கில் உள்ள மொசூல் நகரில் மூன்றாண்டுகளுக்கு முன்பு கடத்தப்பட்ட இந்தியர்கள் உயிருடன் இருக்கிறார்களா, இல்லையா என்பது குறித்து தெரியவில்லை என்று அந்நாட்டு வெளியுறவுத் துறை

இராக்கில் உள்ள மொசூல் நகரில் மூன்றாண்டுகளுக்கு முன்பு கடத்தப்பட்ட இந்தியர்கள் உயிருடன் இருக்கிறார்களா, இல்லையா என்பது குறித்து தெரியவில்லை என்று அந்நாட்டு வெளியுறவுத் துறை அமைச்சர் இப்ராஹிம் அல் ஜாஃபரி தெரிவித்துள்ளார்.
இராக்கின் பல்வேறு பகுதிகளை ஐ.எஸ். பயங்கரவாதிகள் கடந்த 2014-ஆம் ஆண்டு கைப்பற்றத் தொடங்கினர். அந்த சமயத்தில், இராக்கின் மொசூல் நகரை பயங்கரவாதிகள் கைப்பற்றியபோது, அங்கு வசித்து வந்த இந்தியர்கள் 39 பேர் மாயமாகினர். பின்னர், அவர்கள் கடத்தப்பட்டதாக தகவல்கள் வெளியாயின.
அதனைத் தொடர்ந்து, கடத்தப்பட்ட இந்தியர்களை மீட்க நடவடிக்கை எடுக்குமாறு இராக் அரசிடம் இந்தியா வலியுறுத்தியது. எனினும், அந்த சமயத்தில் இராக் ராணுவத்தினருக்கும், ஐ.எஸ். பயங்கரவாதிகளுக்கும் இடையே சண்டை நடைபெற்று கொண்டிருந்ததால், இந்த விவகாரத்தை முன்னெடுத்துச் செல்ல முடியவில்லை.
இந்தச் சூழலில், இராக்கில் ஐ.எஸ். பயங்கரவாதிகளின் ஆதிக்கம் படிப்படியாக குறையத் தொடங்கியது. மேலும், அங்கு அவர்களின் கட்டுப்பாட்டில் இருந்த பல நகரங்களை ராணுவத்தினர் மீட்கத் தொடங்கினர். அந்த வகையில், சில நாள்களுக்கு முன்பு மொசூல் நகரையும் இராக் ராணுவம் கைப்பற்றியதாக தெரிவிக்கப்பட்டது.
இதையடுத்து, கடத்தப்பட்ட இந்தியர்களின் நிலையை அறிந்துகொள்வதற்காக மத்திய வெளியுறவுத் துறை இணையமைச்சர் வி.கே. சிங் அண்மையில் இராக்கின் மொசூல் நகருக்குச் சென்றார். ஆனால், கடத்தப்பட்டவர்கள் குறித்து எந்த தகவல்களும் அவருக்கு கிடைக்கப் பெறவில்லை.
கடத்தப்பட்டவர்கள் நிலை? இந்நிலையில், இராக் வெளியுறவுத் துறை அமைச்சர் இப்ராஹிம் அல் ஜாஃபரி 5 நாள் சுற்றுப்பயணமாக இந்தியாவுக்கு திங்கள்கிழமை வந்தார். பின்னர் அவர், தில்லியில் வெளியுறவுத் துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜை சந்தித்துப் பேசினார். அப்போது, இருநாடுகளுக்கு இடையேயான வர்த்தகம், பாதுகாப்பு உள்ளிட்ட பல்வேறு விவகாரங்கள் குறித்து இருவரும் பேச்சுவார்த்தை நடத்தினர்.
இந்தச் சந்திப்புக்குப் பின்னர், இப்ராஹிம் அல் ஜாஃபரி செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவரிடம் மொசூல் நகரில் இந்தியர்கள் கடத்தப்பட்ட விவகாரம் குறித்து செய்தியாளர்கள் கேள்வியெழுப்பினர். அதற்கு பதிலளித்து அவர் கூறியதாவது:
மொசூல் நகரில் கடத்தப்பட்ட இந்தியர்கள் உயிருடன் இருக்கிறார்களா, இல்லையா என்பது குறித்து தெரியவில்லை. அவர்கள் உயிருடன் இருப்பதற்கான எந்த உறுதியான ஆதாரங்களும் இராக் அரசிடம் இல்லை. எனினும், அவர்களைப் பற்றிய தகவல்களை அறிவதற்கு இராக் அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது என இப்ராஹிம் அல் ஜாஃபரி கூறினார்.
முன்னதாக, இராக்கில் கடத்தப்பட்ட இந்தியர்களின் உறவினர்கள் மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜை கடந்த வாரம் சந்தித்து பேசியது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com