காங்கிரஸ் எம்.பி.க்கள் இடைநீக்கம்: நாடாளுமன்ற வளாகத்தில் எதிர்க்கட்சிகள் ஆர்ப்பாட்டம்

காங்கிரஸ் எம்.பி.க்கள் 6 பேர் மக்களவையில் இருந்து இடைநீக்கம் செய்யப்பட்டதைக் கண்டித்து எதிர்க்கட்சிகளைச் சேர்ந்த உறுப்பினர்கள் நாடாளுமன்ற வளாகத்தில் செவ்வாய்க்கிழமை ஆர்ப்பாட்டத்தில்
நாடாளுமன்ற வளாகத்தில் செவ்வாய்க்கிழமை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தி, மத்திய முன்னாள் அமைச்சர் ஜோதிராதித்ய சிந்தியா உள்ளிட்டோர்.
நாடாளுமன்ற வளாகத்தில் செவ்வாய்க்கிழமை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தி, மத்திய முன்னாள் அமைச்சர் ஜோதிராதித்ய சிந்தியா உள்ளிட்டோர்.

காங்கிரஸ் எம்.பி.க்கள் 6 பேர் மக்களவையில் இருந்து இடைநீக்கம் செய்யப்பட்டதைக் கண்டித்து எதிர்க்கட்சிகளைச் சேர்ந்த உறுப்பினர்கள் நாடாளுமன்ற வளாகத்தில் செவ்வாய்க்கிழமை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
மக்களவைத் தலைவர் சுமித்ரா மகாஜன் மற்றும் பிரதமர் மோடி ஆகியோருக்கு எதிராக அப்போது அவர்கள் முழக்கங்களை எழுப்பினர். மேலும், இடைநீக்க உத்தரவை உடனடியாகத் திரும்பப் பெற வேண்டும் என்றும் அவர்கள் வலியுறுத்தினர்.
மக்களவை அலுவல்கள் திங்கள்கிழமை நடைபெற்ற போது தலித்துகள் மற்றும் முஸ்லிம்களுக்கு எதிரான வன்முறைச் சம்பவங்களை முன்னிறுத்தி காங்கிரஸ் உறுப்பினர்கள் கடும் அமளியில் ஈடுபட்டனர். அதில் உச்சகட்டமாக மக்களவைத் தலைவரை நோக்கி காகிதங்களை கிழித்து அவர்கள் வீசினர். இதையடுத்து அவையின் மாண்புக்கு குந்தகம் விளைவித்ததாகக் கூறி காங்கிரஸ் எம்.பி.க்கள் கெளரவ் கோகோய், சுஷ்மிதா தேவ், ரஞ்சித் ரஞ்சன், ஆதிர் ரஞ்சன் செளத்ரி, கே.சுரேஷ், எம்.கே.ராகவன் ஆகியோரை 5 நாள்கள் இடைநீக்கம் செய்வதாக சுமித்ரா மகாஜன் அறிவித்தார்.
இந்நிலையில், அந்த நடவடிக்கையைக் கண்டித்து காங்கிரஸ், இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், திரிணமூல் காங்கிரஸ் உள்பட பல்வேறு கட்சிகளைச் சேர்ந்த எம்.பி.க்கள் நாடாளுமன்ற வளாகத்தில் அமைந்துள்ள மகாத்மா காந்தி சிலை முன்பு செவ்வாய்க்கிழமை ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
அப்போது மத்திய பாஜக அரசின் செயல்பாடுகளை விமர்சித்து அவர்கள் முழக்கங்களை எழுப்பினர். இதில் காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தி, மூத்த தலைவர்கள் குலாம் நபி ஆசாத், மல்லிகார்ஜுன கார்கே, ஐக்கிய ஜனதா தள மூத்த தலைவர் சரத் யாதவ், கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்த டி.ராஜா, தேசியவாத காங்கிரஸ் எம்.பி. சுப்ரியா சுலே உள்பட பலர் கலந்து கொண்டனர்.
நாடாளுமன்றத்துக்கு உள்ளேயும் இந்தப் பிரச்னையை எழுப்பப் போவதாகத் தெரிவித்த அவர்கள், காங்கிரஸ் எம்.பி.க்கள் மீது எடுக்கப்பட்ட ஒழுங்கு நடவடிக்கையைத் திரும்பப் பெற வேண்டும் என்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com