சீனாவால் இந்தியாவுக்கு தொடர்ந்து அச்சுறுத்தல்: ராணுவ துணைத் தளபதி எச்சரிக்கை

சீனாவால் இந்தியாவுக்கு தொடர்ந்து அச்சுறுத்தல் இருக்கும் என்று இந்திய ராணுவ துணை தலைமைத் தளபதி சரத் சந்த் எச்சரித்துள்ளார்.
சீனாவால் இந்தியாவுக்கு தொடர்ந்து அச்சுறுத்தல்: ராணுவ துணைத் தளபதி எச்சரிக்கை

சீனாவால் இந்தியாவுக்கு தொடர்ந்து அச்சுறுத்தல் இருக்கும் என்று இந்திய ராணுவ துணை தலைமைத் தளபதி சரத் சந்த் எச்சரித்துள்ளார்.
தில்லியில் இந்திய ராணுவம், சிஐஐ அமைப்பின் சார்பில் நடைபெறும் 2 நாள் கருத்தரங்கை செவ்வாய்க்கிழமை தொடங்கிவைத்து சரத் சந்த் பேசியதாவது:
இமயமலையில் நமது அண்டை நாடுகளில் சீனா தனது செல்வாக்கை அதிகரித்து வருகிறது. இந்தியாவை விட சீனாவின் பொருளாதார பலம் 5 மடங்கு அதிகமாகும். அந்நாட்டின் படைபலமும் இந்தியாவை விட மிகவும் அதிகமாகும். இந்தியா-சீனா இடையே இமயமலை இருந்தபோதிலும், வரும் ஆண்டுகளிலும் அந்நாட்டால் இந்தியாவுக்கு அச்சுறுத்தல் தொடரும்.
சீன ராணுவத்துக்கு செலவிடப்படும் தொகையில் வெளிப்படைத்தன்மை கிடையாது. சீன ராணுவத்துக்கு ஒதுக்கப்படும் மிகப்பெரிய தொகை குறித்த விவரம் வெளியே தெரிவிக்கப்படுவதில்லை.
இதுபோன்ற நிலவரத்தை கணக்கில் கொண்டு, தனது பாதுகாப்பு விவகாரத்தில் இந்தியா அதிக கவனம் செலுத்த வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது. நாட்டின் பொருளாதார முன்னேற்றத்துக்கு தேவையான பாதுகாப்பை அளிப்பதற்கான ராணுவ பலம், நமது நாட்டுக்கு இருக்க வேண்டியது அவசியமாகும்.
நாடாளுமன்ற தாக்குதல் சம்பவத்தின் பின்னணியில் இருந்த நமது அண்டை நாட்டை (பாகிஸ்தான்) எல்லைத் தாண்டி சென்று தண்டிக்க விரும்பினாலும், இந்தியா அதுபோல் செய்யவில்லை. பாகிஸ்தான், சிறியளவிலான பொருளாதாரத்தை கொண்ட சிறிய நாடாகும். இதனாலேயே அந்நாடு இந்தியாவுடன் முழு அளவிலான போரில் ஈடுபடாமல், சிறிய அளவிலான மோதலில் மட்டுமே ஈடுபடுகிறது. இது பாகிஸ்தானின் நட்பு நாடான சீனாவுக்கும் பொருந்தும்.
எல்லையில் இருக்கும் பள்ளிகள் மீது பாகிஸ்தான் பீரங்கிக் குண்டுகளை வீசித் தாக்குதல் நடத்துகிறது. இதையடுத்து, பள்ளிகளில் இருக்கும் குழந்தைகளை அப்புறப்படுத்தும் பணியில் ராணுவம் ஈடுபடுகிறது.
நமது சிறார்கள் மீது தாக்குதல் நடத்தி, உயிரிழப்பை ஏற்படுத்தும் அளவுக்கு பாகிஸ்தான் தரம் தாழ்த்துப் போய்விட்டது துரதிருஷ்டவசமானதாகும். அதேநேரத்தில், பாகிஸ்தான் ராணுவத்தைப் போல், இந்திய ராணுவம் தரம்தாழ்ந்து தாக்குதல் நடத்துவதில்லை. பாகிஸ்தானின் அத்துமீறலுக்கு பதிலடி கொடுக்கும்போது கூட, பாகிஸ்தான் ராணுவம், அதன் பதுங்கு குழிகள், பாதுகாப்புச் சார்ந்த கட்டமைப்புகளை குறிவைத்தே இந்திய வீரர்கள் தாக்குதல் நடத்துகின்றனர் என்றார் சந்த்.
இந்திய ராணுவம் இருமுனை போர்களைச் (2 நாடுகளுடன் போரிடுவது) சந்திக்க தயாராக இருப்பதாக ராணுவ தலைமைத் தளபதி விபின் ராவத் அண்மையில் குறிப்பிட்டிருந்தார். இதுகுறித்து கேட்கப்பட்ட கேள்விக்கு சந்த் பதிலளிக்கையில், 'போர் வெறியை தூண்டும் வகையில் ராவத் பேசவில்லை; நாட்டின் பாதுகாப்பு விவகாரத்தில் இந்தியா கூடுதல் கவனம் செலுத்த வேண்டும் என்ற அர்த்தத்திலேயே தெரிவித்தார்' என்றார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com