பதவியேற்பு விழா துளிகள்...

குடியரசுத் தலைவர் ராம் நாத் கோவிந்த் பதவியேற்பு விழாவில் பங்கேற்பதற்காக நாடாளுமன்ற மைய மண்டபத்துக்கு பிரதமர் மோடி

* குடியரசுத் தலைவர் ராம் நாத் கோவிந்த் பதவியேற்பு விழாவில் பங்கேற்பதற்காக நாடாளுமன்ற மைய மண்டபத்துக்கு பிரதமர் மோடி வந்தபோது, பாஜக எம்.பி.க்களும், மத்திய அமைச்சர்களும் மேஜையை தட்டி வரவேற்றனர்.
* விழா முடிந்து புறப்பட்டபோது, பிரதமர் மோடியும் மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜியும் பரஸ்பரம் வணக்கம் தெரிவித்துக் கொண்டனர்.
பின்னர், இருவரும் சிறிது நேரம் பேசினர். அதேவேளையில், பிகார் முதல்வர் நிதீஷ் குமாரும், அதே மாநிலத்தைச் சேர்ந்த முன்னாள் மக்களவைத் தலைவர் மீரா குமாரும் அருகருகே அமர்ந்திருந்தபோதும் இருவரும் எதுவும் பேசிக் கொள்ளவில்லை.
* மக்களவையில் அமளியில் ஈடுபட்டதற்காக அவையில் இருந்து 5 நாள்களுக்கு இடைநீக்கம் செய்யப்பட்டுள்ள எம்.கே.ராகவன், கௌரவ் கோகோய் உள்ளிட்ட 4 காங்கிரஸ் எம்.பி.களுடன் பின் வரிசையில் ராகுல் அமர்ந்திருந்தார். இதேபோல, தனது கட்சி எம்.பி.க்களுடன் மேற்கு வங்க முதல்வர் மம்தாவும் பின்வரிசையில் அமர்ந்திருந்ததை காண முடிந்தது. ஆனால், மற்ற மாநில முதல்வர்கள் முன்வரிசையில் அமர்ந்திருந்தனர்.
* தில்லி முதல்வர் கேஜரிவால், விழா மண்டபத்துக்குள் நுழைந்ததும் அவரை திரிணமூல் காங்கிரஸ் எம்.பி. டெரிக் ஓ பிரையன் வரவேற்று அழைத்துச் சென்றார். பின்னர், மம்தாவின் அருகே சென்று அமர்ந்த கேஜரிவால், அவருடன் நீண்ட நேரம் பேசிக் கொண்டிருந்தார்.
* பிரதமர் மோடியுடன் முன்னாள் குடியரசுத் தலைவர் பிரதீபா பாட்டீலும், முன்னாள் பிரதமர் ஹெச்.டி.தேவெகௌடாவும் முன்வரிசையில் அமர்ந்திருந்தனர். இதில், பிரதீபா பாட்டில், ராம்நாத் கோவிந்த் பதவியேற்ற பின்னர்தான் விழா மண்டபத்துக்கே வந்தார். இதனால், அனைவரும்
திகைப்படைந்தனர்.
* பாஜக தேசியத் தலைவர் அமித் ஷா, மூத்த தலைவர்கள் எல்.கே.அத்வானி, முரளி மனோகர் ஜோஷி ஆகியோருடன் அமர்ந்திருந்தார்.
* பாஜகவின் துணை குடியரசுத் தலைவர் வேட்பாளருமான வெங்கய்ய நாயுடு, தனது அருகே அமர்ந்திருந்த காங்கிரஸ் தலைவர் சோனியாவுடன் அவ்வப்போது பேசிக் கொண்டிருந்தார்.
* உச்ச நீதிமன்ற நீதிபதிகள், 2, 3-ஆவது வரிசைகளில் அமர்ந்திருந்தனர். விழா முடிந்ததும் அவர்களுடன் பிரதமர் மோடி சிறிது நேரம் உரையாடினார்.
* முப்படைகளின் தளபதிகள், தமிழக ஆளுநர் (பொறுப்பு) வித்யாசாகர் பல்வேறு மாநிலங்களின் ஆளுநர்கள், பல்வேறு மாநில முதல்வர்கள் விழாவை அலங்கரித்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com