பாரம்பரிய முறைப்படி நடைபெற்ற பதவியேற்பு விழா!

புதிய குடியரசுத் தலைவராக ராம்நாத் கோவிந்த் பதவியேற்ற விழா பாரம்பரிய முறைப்படியும், கோலாகல அணிவகுப்புடனும் நடைபெற்றது.
பாதுகாப்புப் படையினரின் அணிவகுப்பு மரியாதையை ஏற்ற பிறகு, சாரட் வண்டியில் புறப்பட்டுச் செல்லும் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த்.
பாதுகாப்புப் படையினரின் அணிவகுப்பு மரியாதையை ஏற்ற பிறகு, சாரட் வண்டியில் புறப்பட்டுச் செல்லும் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த்.

புதிய குடியரசுத் தலைவராக ராம்நாத் கோவிந்த் பதவியேற்ற விழா பாரம்பரிய முறைப்படியும், கோலாகல அணிவகுப்புடனும் நடைபெற்றது.
நாட்டின் 14-ஆவது குடியரசுத் தலைவர் பதவியேற்பு விழாவுக்கான ஏற்பாடுகள் தில்லியில் செவ்வாய்க்கிழமை காலையில் தொடங்கின. அதன்படி, ராணுவ உயரதிகாரியான அனில் கோஸ்லா சம்பிரதாய முறைப்படி ராம்நாத் கோவிந்தையும், அவரது மனைவி சவிதாவையும் குடியரசுத் தலைவர் மாளிகைக்கு அழைத்தார். அங்கு ராம்நாத் தம்பதியை வரவேற்க குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி காத்திருந்தார். கோவிந்த் தம்பதி அங்கு சென்றடைந்தனர். அங்கிருந்து பிரணாப்பும், ராம்நாத்தும் வீரர்கள் சல்யூட் மரியாதை அளிக்கும் பகுதிக்கு குதிரை வீரர்கள் புடைசூழ அழைத்துச் செல்லப்பட்டனர்.

பதவியேற்பு நிகழ்ச்சிக்குப் பிறகு பிரதமர் நரேந்திர மோடி, பாஜக மூத்த தலைவர் எல்.கே.அத்வானி, பாஜக தேசியத் தலைவர் அமித் ஷா, முன்னாள் குடியரசுத் தலைவர் பிரதிபா பாட்டீல், முன்னாள் பிரதமர்கள் தேவ கெளடா, மன்மோகன் சிங், தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி உள்ளிட்டோரது வாழ்த்துகளை ஏற்றுக் கொண்ட
குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த். உடன் முன்னாள் குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி.


அங்கு பிரணாப் முகர்ஜிக்கு குடியரசுத் தலைவரின் பாதுகாவலர்களும் இதர இந்திய ராணுவத்தின் குதிரைப்படை வீரர்களும் மரியாதை செலுத்தினர்.
அந்த சம்பிரதாய நிகழ்ச்சி நடைபெற்ற சில மணிநேரம் கழித்து பிரணாப் முகர்ஜியை குடியரசுத் தலைவர் மாளிகையில் இருந்து ராம்நாத் கோவிந்த் வெளியே அழைத்து வந்தார். இரு தலைவர்களும் குடியரசுத் தலைவர் மாளிகையில் இருந்து பதவியேற்பு விழா நடைபெறும் நாடாளுமன்றம் நோக்கி கருப்பு நிற காரில் முகர்ஜி வலது புறமும், கோவிந்த் இடது புறமும் அமர்ந்தபடி வந்தனர். அந்தக் காரைப் பின்தொடர்ந்து குடியரசுத் தலைவரின் பாதுகாவலர்கள் சம்பிரதாய வெள்ளை நிறச் சீருடை, நீல நிற தலைப்பாகை அணிந்தபடி ஊர்வலமாக வந்தனர்.
குடியரசுத் தலைவர் மாளிகையில் இருந்து நாடாளுமன்றத்துக்கு வரும் வழியில் 1,000 வீரர்கள் அணிவகுத்து நின்றனர். முப்படைகளையும் சேர்ந்த அந்த வீரர்கள் ஹசார் சலாம் என்ற பெயரிலான ஆயிரம் வணக்கம் என்ற மரியாதையை முப்படைகளின் தலைவரான குடியரசுத் தலைவருக்கு அளித்தனர்.

குடியரசுத் தலைவர் பதவியிலிருந்து ஓய்வு பெறுவதற்கு முன் நாடாளுமன்றத்தில் தனது பாதுகாவலர்கள் அளித்த மரியாதையை ஏற்றுக் கொண்ட பிரணாப் முகர்ஜி. நாள்: செவ்வாய்க்கிழமை.
குடியரசுத் தலைவர் பதவியிலிருந்து ஓய்வு பெறுவதற்கு முன் நாடாளுமன்றத்தில் தனது பாதுகாவலர்கள் அளித்த மரியாதையை ஏற்றுக் கொண்ட பிரணாப் முகர்ஜி. நாள்: செவ்வாய்க்கிழமை.


இந்த ஊர்வலமானது நாடாளுமன்றத்தின் 5-ஆவது நுழைவாயிலை எட்டியது. அங்கு குடியரசு துணைத் தலைவர் ஹமீது அன்சாரி, மக்களவைத் தலைவர் சுமித்ரா மகாஜன், உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி ஜே.எஸ்.கேஹர் ஆகியோர் பிரணாப்பையும், கோவிந்தையும் வரவேற்றனர். அதைத் தொடர்ந்து இரு தலைவர்களும் நாடாளுமன்ற மைய மண்டபத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டனர்.
அங்கு ராம்நாத் கோவிந்திற்கு தலைமை நீதிபதி ஜே.எஸ்.கேஹர் பதவிப் பிரமாணம் செய்து வைத்தார். பதவியேற்பு நிகழ்ச்சி முடிந்தம், நாடாளுமன்ற மைய மண்டபத்தில் திரண்டிருந்த தலைவர்களை கோவிந்த் சந்தித்தார். அதைத் தொடர்ந்து அவர் குடியரசுத் தலைவரின் காரில் குடியரசுத் தலைவர் மாளிகைக்குப் புறப்பட்டார். இப்போது முகர்ஜி இடது புறமும், கோவிந்த் வலது புறமும் அமர்ந்திருந்தனர்.
இந்த ஊர்வலம் சென்ற ராஜபாதை சாலை முழுவதும் அப்போது பெய்த மழை காரணமாக பளிச்சென்று துடைத்து வைக்கப்பட்டதைப் போன்று காணப்பட்டது. இரு தலைவர்களும் குடியரசுத் தலைவர் மாளிகையை அடைந்தனர். அங்குள்ள பதிவேட்டில் கோவிந்த் கையெழுத்திட்டு, பொறுப்பேற்றுக் கொண்டார்.
அதைத் தொடர்ந்து புதிய குடியரசுத் தலைவரான கோவிந்த், 6 குதிரைகள் பூட்டப்பட்ட கருப்பு நிற சாரட் வண்டியில் குடியரசுத் தலைவர் மாளிகைக்கு வெளியே வந்தார். இந்த சாரட் வண்டியைப் பயன்படுத்தும் நடைமுறையை பிரணாப் முகர்ஜி தனது பதவிக்காலத்தின்போது மீண்டும் கொண்டுவந்தது குறிப்பிடத்தக்கது.
அதைத் தொடர்ந்து அங்கு அளிக்கப்பட்ட அணிவகுப்பு மரியாதையை கோவிந்த் ஏற்றுக் கொண்டார். அதன் பின் மாளிகைக்கு உள்ளே சென்றார். அதைத் தொடர்ந்து பதவியில் இருந்து ஓய்வு பெறும் பிரணாப் முகர்ஜிக்கு கடைசி முறையாக அணிவகுப்பு மரியாதை அளிக்கப்பட்டது.

பதவியேற்பு விழா துளிகள்...

* குடியரசுத் தலைவர் ராம் நாத் கோவிந்த் பதவியேற்பு விழாவில் பங்கேற்பதற்காக நாடாளுமன்ற மைய மண்டபத்துக்கு பிரதமர் மோடி வந்தபோது, பாஜக எம்.பி.க்களும், மத்திய அமைச்சர்களும் மேஜையை தட்டி வரவேற்றனர்.
* விழா முடிந்து புறப்பட்டபோது, பிரதமர் மோடியும் மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜியும் பரஸ்பரம் வணக்கம் தெரிவித்துக் கொண்டனர்.
பின்னர், இருவரும் சிறிது நேரம் பேசினர். அதேவேளையில், பிகார் முதல்வர் நிதீஷ் குமாரும், அதே மாநிலத்தைச் சேர்ந்த முன்னாள் மக்களவைத் தலைவர் மீரா குமாரும் அருகருகே அமர்ந்திருந்தபோதும் இருவரும் எதுவும் பேசிக் கொள்ளவில்லை.
* மக்களவையில் அமளியில் ஈடுபட்டதற்காக அவையில் இருந்து 5 நாள்களுக்கு இடைநீக்கம் செய்யப்பட்டுள்ள எம்.கே.ராகவன், கௌரவ் கோகோய் உள்ளிட்ட 4 காங்கிரஸ் எம்.பி.களுடன் பின் வரிசையில் ராகுல் அமர்ந்திருந்தார். இதேபோல, தனது கட்சி எம்.பி.க்களுடன் மேற்கு வங்க முதல்வர் மம்தாவும் பின்வரிசையில் அமர்ந்திருந்ததை காண முடிந்தது. ஆனால், மற்ற மாநில முதல்வர்கள் முன்வரிசையில் அமர்ந்திருந்தனர்.
* தில்லி முதல்வர் கேஜரிவால், விழா மண்டபத்துக்குள் நுழைந்ததும் அவரை திரிணமூல் காங்கிரஸ் எம்.பி. டெரிக் ஓ பிரையன் வரவேற்று அழைத்துச் சென்றார். பின்னர், மம்தாவின் அருகே சென்று அமர்ந்த கேஜரிவால், அவருடன் நீண்ட நேரம் பேசிக் கொண்டிருந்தார்.
* பிரதமர் மோடியுடன் முன்னாள் குடியரசுத் தலைவர் பிரதீபா பாட்டீலும், முன்னாள் பிரதமர் ஹெச்.டி.தேவெகௌடாவும் முன்வரிசையில் அமர்ந்திருந்தனர். இதில், பிரதீபா பாட்டில், ராம்நாத் கோவிந்த் பதவியேற்ற பின்னர்தான் விழா மண்டபத்துக்கே வந்தார். இதனால், அனைவரும்
திகைப்படைந்தனர்.
* பாஜக தேசியத் தலைவர் அமித் ஷா, மூத்த தலைவர்கள் எல்.கே.அத்வானி, முரளி மனோகர் ஜோஷி ஆகியோருடன் அமர்ந்திருந்தார்.
* பாஜகவின் துணை குடியரசுத் தலைவர் வேட்பாளருமான வெங்கய்ய நாயுடு, தனது அருகே அமர்ந்திருந்த காங்கிரஸ் தலைவர் சோனியாவுடன் அவ்வப்போது பேசிக் கொண்டிருந்தார்.
* உச்ச நீதிமன்ற நீதிபதிகள், 2, 3-ஆவது வரிசைகளில் அமர்ந்திருந்தனர். விழா முடிந்ததும் அவர்களுடன் பிரதமர் மோடி சிறிது நேரம் உரையாடினார்.
* முப்படைகளின் தளபதிகள், தமிழக ஆளுநர் (பொறுப்பு) வித்யாசாகர் பல்வேறு மாநிலங்களின் ஆளுநர்கள், பல்வேறு மாநில முதல்வர்கள் விழாவை அலங்கரித்தனர்.

நாடாளுமன்றத்தில் நடைபெற்ற பதவியேற்பு விழாவுக்குப் பிறகு, குடியரசுத் தலைவர் மாளிகைக்கு காரில் செல்லும் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த், முன்னாள் குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி ஆகியோரை கொட்டும் மழையில் வழிநடத்திச் செல்லும் பாதுகாவலர்கள்.
நாடாளுமன்றத்தில் நடைபெற்ற பதவியேற்பு விழாவுக்குப் பிறகு, குடியரசுத் தலைவர் மாளிகைக்கு காரில் செல்லும் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த், முன்னாள் குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி ஆகியோரை கொட்டும் மழையில் வழிநடத்திச் செல்லும் பாதுகாவலர்கள்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com