புதிய குடியரசுத் தலைவருக்கு நீதிபதி கர்ணன் கோரிக்கை மனு

தமக்கு விதிக்கப்பட்ட சிறைத் தண்டனையை ரத்து செய்யுமாறு குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்திடம் ஓய்வுபெற்ற நீதிபதி கர்ணன் சார்பில் கோரிக்கை மனு அளிக்கப்பட்டது.
புதிய குடியரசுத் தலைவருக்கு நீதிபதி கர்ணன் கோரிக்கை மனு

தமக்கு விதிக்கப்பட்ட சிறைத் தண்டனையை ரத்து செய்யுமாறு குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்திடம் ஓய்வுபெற்ற நீதிபதி கர்ணன் சார்பில் கோரிக்கை மனு அளிக்கப்பட்டது.
சென்னை உயர் நீதிமன்றத்தில் நீதிபதியாக பணியாற்றிய சி.எஸ். கர்ணன் தம்முடன் பணிபுரியும் சக நீதிபதிகள் மீது பல்வேறு ஊழல் புகார்களைத் தெரிவித்தார்.
இந்தப் புகார்களை அவர் நேரடியாக ஊடகங்களில் தெரிவித்ததால், அவர் கொல்கத்தா உயர் நீதிமன்றத்துக்கு பணியிடமாற்றம் செய்யப்பட்டார்.
அதன் பின்னர், கொல்கத்தா உயர் நீதிமன்றத்திலும் சக நீதிபதிகளுடன் கர்ணன் மோதல் போக்கை கடைப்பிடித்து வந்தார். இதனால் அவரை உச்ச நீதிமன்றம் கண்டித்தது.
இதனைத் தொடர்ந்து, உச்ச நீதிமன்ற நீதிபதிகள் மீதும் அவர் பல்வேறு குற்றச்சாட்டுகளை சுமத்தினார். இதற்கு கண்டனம் தெரிவித்த உச்ச நீதிமன்றம், கர்ணன் தெரிவிக்கும் குற்றச்சாட்டுகளுக்கு ஆதாரங்களை வழங்குமாறு உத்தரவிட்டது. ஆனால், நீதிமன்றத்தின் உத்தரவுக்கு இணங்கவில்லை.
இதையடுத்து, கர்ணன் மீது தாமாக முன்வந்து நீதிமன்ற அவமதிப்பு வழக்கை உச்ச நீதிமன்றம் தொடர்ந்தது. மேலும், இந்த வழக்கில் அவருக்கு ஆறு மாத சிறைத் தண்டனையையும் உச்ச நீதிமன்றம் விதித்தது.
உச்ச நீதிமன்றத்தின் இந்த உத்தரவை அடுத்து தலைமறைவான நீதிபதி கர்ணனை கொல்கத்தா போலீஸார் கோவையில் கடந்த மாதம் கைது செய்தனர். இதன் தொடர்ச்சியாக, அவர் கொல்கத்தா சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
அதன் பின்னர், தமது சிறைத் தண்டனையை ரத்து செய்யக் கோரி முன்னாள் குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜிக்கு அவர் இரண்டு முறை மனு அளித்தார். ஆனால், அந்த மனுக்கள் நிராகரிக்கப்பட்டன.
இந்நிலையில், தமக்கு விதிக்கப்பட்ட சிறைத் தண்டனையை ரத்து செய்யுமாறு புதிய குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்துக்கு ஓய்வுபெற்ற நீதிபதி கர்ணன் மனு அளித்துள்ளார். கர்ணன் சார்பில் அந்த மனுவை அவரது வழக்குரைஞர் மேத்யூ ஜே. நெடும்பாறா குடியரசுத் தலைவர் அலுவலகத்தில் செவ்வாய்க்கிழமை அளித்தார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com