'ஸ்டென்ட்' உபகரணத்துக்கு அதிக விலை கூடாது: மருத்துவமனைகளுக்கு மத்திய அரசு அறிவுறுத்தல்

இரத்தக் குழாய்களில் பொருத்தப்படும் 'ஸ்டென்ட்' உபகரணத்துக்கு அதிகப்படியான விலை நிர்ணயிக்கக் கூடாது என்று மருத்துவமனைகளுக்கு மத்திய சுகாதாரத் துறை அமைச்சகம்

இரத்தக் குழாய்களில் பொருத்தப்படும் 'ஸ்டென்ட்' உபகரணத்துக்கு அதிகப்படியான விலை நிர்ணயிக்கக் கூடாது என்று மருத்துவமனைகளுக்கு மத்திய சுகாதாரத் துறை அமைச்சகம் அறிவுறுத்தியுள்ளது.
இதுதொடர்பாக கடந்த சில மாதங்களுக்கு முன்பு மத்திய அரசு வெளியிட்டுள்ள அறிவிக்கையை பின்பற்ற வேண்டும் என்றும் வலியுறுத்தப்பட்டுள்ளது.
மருத்துவத் துறையில் உயிர் காக்கும் முக்கிய உபகரணங்களில் ஒன்றாக 'ஸ்டென்ட்' கருதப்படுகிறது. அடைப்புகளால் தடைபட்ட இரத்த ஓட்டத்தை மீண்டும் சீராக்குவதற்காக இவை இரத்தக் குழாய்களில் பொருத்தப்படுகின்றன. இந்த உபகரணங்களுக்கான விலை மீது எந்தக் கட்டுப்பாடும் இல்லாதபோது, அவற்றைப் பொருத்துவதற்காக பல லட்சக்கணக்கான ரூபாயை தனியார் மருத்துவமனை நிர்வாகங்கள் நோயாளிகளிடம் வசூலித்தன.
இந்நிலையில் மத்திய மருந்தகத் துறை சார்பில் கடந்த பிப்ரவரி மாதம் ஓர் அறிவிப்பு வெளியானது. 'ஸ்டென்ட்' உபகரணங்களுக்கான விலை 85 சதவீதம் குறைக்கப்பட்டுள்ளதாக அதில் தெரிவிக்கப்பட்டிருந்தது. அதன்படி, சாதாரண 'ஸ்டென்ட்' விலை ரூ.7,260 எனவும், மருந்து நிரப்பப்பட்ட 'ஸ்டென்ட்' உபகரணம் ரூ.29,600 எனவும் நிர்ணயிக்கப்பட்டது. இதுதொடர்பாக மத்திய சுகாதாரத் துறை அமைச்சகம் சார்பில் அறிவிக்கையும் வெளியிடப்பட்டது. இருப்பினும், அதை கடைப்பிடிக்காமல் இன்றளவும் 'ஸ்டென்ட்' உபகரணத்துக்கு அதிகத் தொகையை தனியார் மருத்துவமனைகள் வசூலித்து வருவதாகத் தெரிகிறது.
இந்நிலையில், இதுதொடர்பாக ஜம்மு - காஷ்மீர் உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடுக்கப்பட்டது.
அதனை விசாரித்த நீதிமன்றம், இதுகுறித்த அறிவுறுத்தல்களை மருத்துவமனைகளுக்கு வழங்குமாறு மத்திய அரசுக்கு உத்தரவிட்டது. அதன்படி, 'ஸ்டென்ட்' உபகரணத்துக்கு அதிக விலை நிர்ணயிக்கக் கூடாது என்று மத்திய சுகாதாரத் துறை அமைச்சகம் மருத்துவமனைகளுக்கு அறிவுறுத்தியுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com