பெங்களூர் சிறையில் சிறப்பு சலுகைகள் வழங்கப்பட்டதா? சசிகலா மறுப்பு

பெங்களூரில் உள்ள பரப்பரன அக்ரஹாரா மத்திய சிறையில் தனக்கு சிறப்பு சலுகைகள் வழங்கப்பட்டதாக எழுந்த குற்றச்சாட்டுகளை அதிமுக அம்மா அணிப் பொதுச் செயலர் சசிகலா மறுப்பு தெரிவித்துள்ளார்.
பெங்களூர் சிறையில் சிறப்பு சலுகைகள் வழங்கப்பட்டதா? சசிகலா மறுப்பு


பெங்களூர்: பெங்களூரில் உள்ள பரப்பன அக்ரஹாரா மத்திய சிறையில் தனக்கு சிறப்பு சலுகைகள் வழங்கப்பட்டதாக எழுந்த குற்றச்சாட்டுகளை அதிமுக அம்மா அணிப் பொதுச் செயலர் சசிகலா மறுத்துள்ளார்.

பெங்களூர் சிறையில் சசிகலாவுக்கு சலுகைகள் வழங்கப்படுவதாக முன்னாள் சிறைத்துறை டிஐஜி ரூபா அளித்த புகார் குறித்து விசாரணை நடத்த அமைக்கப்பட்ட ஓய்வு பெற்ற ஐஏஎஸ் அதிகாரி தலைமையிலான குழுவினர் நேற்று சசிகலாவிடம் விசாரணை நடத்தினர்.

அந்த விசாரணையின் போது, பெங்களூர் சிறையில் தனக்கு எந்தவிதமான சலுகையும் வழங்கப்படவில்லை என்றும், சிறையில் இருந்த இரண்டு பெண் கைதிகள், என் மீது கொண்ட அன்பினால், எனக்கு சிறு சிறு உதவிகள் செய்தனர் என்றும் சசிகலா கூறியுள்ளார்.

மேலும், எனக்கு தனி சமையலறை அமைத்துக் கொடுக்கப்பட்டதாகவும், 5 அறைகள் ஒதுக்கப்பட்டதாகவும் கூறப்படும் குற்றச்சாட்டுகளில் உண்மையில்லை என்றும் தெரிவித்துள்ளார். இந்த தகவல்கள், தமிழ் நாளிதழ் ஒன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வழக்கின் பின்னணி: கர்நாடக சிறைத் துறை டிஐஜியாக இருந்த டி.ரூபா, பெங்களூரு, பரப்பன அக்ரஹாராவில் உள்ள மத்திய சிறையில் நடைபெறும் பல்வேறு சட்ட விதிமீறல்கள், முறைகேடுகள் குறித்து கர்நாடக மாநில காவல் துறை தலைவர் (டிஜிபி) ஆர்.கே.தத்தா மற்றும் ஊழல் தடுப்புப் படையிடம் புகார் மனு அளித்தார்.

அந்த அறிக்கையில், சொத்துக் குவிப்பு வழக்கில் பரப்பன அக்ரஹாரா மத்திய சிறையில் உள்ள சசிகலாவிடம் ரூ.2 கோடி லஞ்சம் பெற்றுக் கொண்டு, கர்நாடக சிறைத் துறை டிஜிபியும், மூத்த ஐ.பி.எஸ். அதிகாரியுமான எச்.என்.சத்தியநாராயண ராவ் சிறப்பு சலுகைகளை வழங்கி வருவதாகக் குற்றஞ்சாட்டினார்.

மேலும், சசிகலாவுக்கு தனியாக சமையல் அறை வசதி செய்து கொடுத்துள்ளதோடு, சமையலுக்கு சக கைதிகள் உதவி செய்ய அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் அந்த மனுவில் குறிப்பிட்டுள்ளார். இந்த விவகாரம் பெரும் சர்ச்சைக்கு காரணமாகியுள்ளது.

தன் மீதான குற்றச்சாட்டை முழுமையாக மறுத்துள்ள சிறைத் துறை டிஜிபி எச்.என்.சத்தியநாராயணா, " தன் மீது டிஐஜி டி.ரூபா அளித்துள்ள புகார் அடிப்படை ஆதாரமற்றது. மத்திய சிறையில் ஏதாவது குறைபாடு இருந்தால் அதுகுறித்து என்னிடம் விவாதித்திருக்க வேண்டும். அதைவிடுத்து, ஊடகங்களில் இதுகுறித்து பேசியது சரியல்ல. என்மீதான குற்றச்சாட்டுகளுக்கு எவ்வித ஆதாரத்தையும் அவர் வெளியிடவில்லை.

எனினும், இதுகுறித்து விசாரணை நடத்தினால், அதற்கு ஒத்துழைக்க நான் தயாராக இருக்கிறேன். சசிகலாவுக்கு எவ்வித சிறப்பு சலுகைகளையும் நான் வழங்கவில்லை. மேலும், சசிகலாவிடம் இருந்து நான் எந்த பணத்தையும் பெறவில்லை' என்றார்.

இதனிடையே, தனது புகார் மனுவில் கூறப்பட்டுள்ள குற்றச்சாட்டுகள் குறித்து அலுவலக ரீதியான விசாரணை நடத்த வேண்டும் என்று குறிப்பிட்டுள்ள டிஐஜி டி.ரூபா, " பரப்பன அக்ரஹாராவில் உள்ள மத்திய சிறையில் உள்ள சட்ட விதிமீறல்களை வெளியிட்டுள்ளேன் . இதுகுறித்து துறை ரீதியான விசாரணை நடத்த வேண்டும்.

நான் குறிப்பிட்டுள்ள 9 குற்றச்சாட்டுகளில் 1-2 குற்றச்சாட்டுகள் கேள்விப்பட்டதாகும். மற்ற குற்றச்சாட்டுகள் அனைத்தும் உண்மையானவையாகும்' என்றார்.

இதையடுத்து சிறையில் சிறப்பு சலுகைகளைப் பெற சிறைத் துறை டிஜிபி எச்.என்.சத்தியநாராயணாவுக்கு, அதிமுக பொதுச் செயலாளர் சசிகலா ரூ.2 கோடி லஞ்சம் கொடுத்ததாகக் கூறப்படுவது உள்ளிட்ட டி.ரூபாவின் அனைத்து குற்றச்சாட்டுகள் குறித்து உயர்நிலை விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளதாக கர்நாடக முதல்வர் சித்தராமையா தெரிவித்தார்.

இதுதொடர்பான விசாரணை அறிக்கையை உடனடியாக தாக்கல் செய்யுமாறு காவல் துறை உயரதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளதாகவும், அந்த அறிக்கை கிடைத்ததும் தவறிழைத்தவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் தெரிவித்திருந்தார்.

ஓய்வு பெற்ற ஐஏஎஸ் அதிகாரி தலைமையிலான விசாரணைக் குழுவினர் குற்றம்சாட்டப்பட்டவர்களிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com