கலாம் மணிமண்டபம் ஒருமைப்பாட்டின் அடையாளம்: வெங்கய்ய நாயுடு புகழாரம்

ராமேசுவரத்தில் கட்டப்பட்டுள்ளது குடியரசு முன்னாள் தலைவர் அப்துல் கலாமின் மணிமண்டபம் மட்டுமல்ல, இந்திய ஒருமைப்பாட்டின் அடையாளமும்தான்
கலாம் மணிமண்டபம் ஒருமைப்பாட்டின் அடையாளம்: வெங்கய்ய நாயுடு புகழாரம்

ராமேசுவரத்தில் கட்டப்பட்டுள்ளது குடியரசு முன்னாள் தலைவர் அப்துல் கலாமின் மணிமண்டபம் மட்டுமல்ல, இந்திய ஒருமைப்பாட்டின் அடையாளமும்தான் என்று பாஜக மூத்த தலைவர் வெங்கய்ய நாயுடு கூறினார்.
ராமேசுவரத்தில் கலாம் மணிமண்டபம் திறப்பு விழாவில் கலந்து கொண்டு அவர் பேசியது:
முதல்வர் ஜெயலலிதா உயிரோடு இருந்தால் இன்னும் பிரம்மாண்ட நிகழ்வாக திறப்பு விழா அமைந்திருக்கும்.
அப்துல் கலாம் ஒரு விஞ்ஞானி மட்டுமல்ல. மனிதநேயமிக்கவராகவும், தாய் நாட்டையும், மொழியையும் நேசிப்பவராகவும் திகழ்ந்தார். நாட்டை வளர்ச்சிப் பாதையில் கொண்டு செல்ல வேண்டும் என்ற ஒற்றைக் குறிக்கோள் அர்ப்பணிப்புடன் செயலாற்றினார். தனது வாழ்க்கையை கர்ம யோகியாகவே வாழ்ந்தார். அவர் இறந்தாலும், ஒவ்வொரு இந்தியரின் இதயத்திலும் வாழ்ந்து கொண்டிருக்கிறார்.
அவருக்காக அமைக்கப்பட்டுள்ள இந்த மணிமண்டபம் ஒரு நினைவுச் சின்னம் மட்டுமல்ல. இந்தியாவின் ஒருமைப்பாட்டின் சின்னமாகும். தில்லியில் உள்ள மகாத்மா காந்தியின் நினைவிடத்துக்கு அடுத்து ஜாதி, மத வேறுபாடின்றி அனைவரும் சென்றுவரக் கூடிய இடமாக கலாம் மணிமண்டபம் இருக்கும். வரும் தலைமுறைக்கு இந்த மணிமண்டபம் பாடமாக இருக்கும்.
கலாம் கண்ட கனவுகளை மத்திய அரசு செயல்படுத்திக் கொண்டிருக்கிறது. அதோடு, ஒவ்வொருவரும் நாட்டின் வளர்ச்சிக்காக தங்களது தனிப்பட்ட பங்களிப்பைக் கொடுக்க வேண்டும். இதுவே கலாமிற்கு நாம் செலுத்த கூடிய அஞ்சலியாகும் என்றார்.
மத்திய இணைஅமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் பேசியது:
குடியரசு முன்னாள் தலைவர் கலாமின் பணிகளுக்குப் பெருமை சேர்க்கும் வகையில் மணிமண்டபம் அமைக்கப்பட்டிருக்கிறது. தமிழகத்தின் வளர்ச்சிக்கும், தமிழ் மொழியின் வளர்ச்சிக்கும் மத்திய அரசு தொடர்ந்து பல திட்டங்களை செயல்படுத்தி வருகிறது என்றார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com