போஃபர்ஸ் ஊழல் வழக்கு: பாதுகாப்பு அமைச்சகத்துக்கு பிஏசி உத்தரவு

போஃபர்ஸ் பீரங்கி ஊழல் வழக்கு விவகாரத்தில் காணாமல் போன கோப்புகளைத் தேடிக் கண்டுபிடித்துத் தரும்படி, பாதுகாப்பு அமைச்சகத்துக்கு நாடாளுமன்ற பொது கணக்குக் குழு (பிஏசி) உத்தரவிட்டுள்ளது.
போஃபர்ஸ் ஊழல் வழக்கு: பாதுகாப்பு அமைச்சகத்துக்கு பிஏசி உத்தரவு

போஃபர்ஸ் பீரங்கி ஊழல் வழக்கு விவகாரத்தில் காணாமல் போன கோப்புகளைத் தேடிக் கண்டுபிடித்துத் தரும்படி, பாதுகாப்பு அமைச்சகத்துக்கு நாடாளுமன்ற பொது கணக்குக் குழு (பிஏசி) உத்தரவிட்டுள்ளது.

ஸ்வீடன் நாட்டின் ஏ.பி. போஃபர்ஸ் நிறுவனத்திடம் இருந்து, இந்திய ராணுவத்துக்கு 400 ஹெளவிட்ஸர் ரக பீரங்கிகளை வாங்க ரூ.1,437 கோடி மதிப்பில் இந்தியா கடந்த 1986}ஆம் ஆண்டில் ஒப்பந்தம் செய்தது. இந்த ஒப்பந்தத்தை பெற, இந்திய அரசியல்வாதிகள் உள்ளிட்டோருக்கு போஃபர்ஸ் நிறுவனத்தால் சுமார் ரூ.64 கோடி ரூபாய் லஞ்சமாக கொடுக்கப்பட்டதாக ஸ்வீடன் நாட்டு வானொலி பரபரப்பு தகவலை வெளியிட்டது. குறிப்பாக, இந்த ஊழலில் அப்போதைய இந்தியப் பிரதமர் ராஜீவ் காந்திக்கு தொடர்பிருப்பதாக புகார் எழுந்தது.
இந்திய அரசியலில் பெரும் பிரச்னையை ஏற்படுத்திய இந்த ஊழல் விவகாரம், போஃபர்ஸ் பீரங்கி ஊழல் என்று அழைக்கப்படுகிறது.
இந்நிலையில், தில்லியில் இந்த மாதத் தொடக்கத்தில், பிஏசி அமைப்பின் துணை குழுக் (பாதுகாப்பு விவகாரம்) கூட்டம் நடைபெற்றது. 6 உறுப்பினர்களைக் கொண்ட இந்த குழுவுக்கு பாஜக எம்.பி. பர்த்ருஹரி மஹதாப் தலைவராக உள்ளார்.
இந்த கூட்டத்தில், போஃபர்ஸ் பீரங்கி ஊழல் விவகாரம் தொடர்பாக சிஏஜி}யால் அளிக்கப்பட்டு நீண்டகாலமாக நிலுவையில் இருக்கும் அறிக்கை குறித்து ஆய்வு செய்யப்பட்டது.
அப்போது, சிஏஜி அறிக்கையில் இடம்பெற்றிருந்த சில குறிப்புகள் அழிக்கப்பட்டு விட்டதாகவும், அதுதொடர்பான கோப்புகள் காணாமல் போய்விட்டதாகவும் பாதுகாப்பு அமைச்சக அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இதைக்கேட்ட பாஜக எம்.பி. மஹதாப், அக்குழு உறுப்பினரும், மற்றொரு பாஜக எம்.பி.யுமான நிஷிகாந்த் துபே ஆகியோர், காணாமல் போனதாக கூறப்படும் கோப்புகளையும், ஒப்பந்தம் தொடர்பான குறிப்புகளையும் பாதுகாப்பு அமைச்சக அதிகாரிகள் தேடிக் கண்டுபிடித்துத் தர வேண்டும் என்று கேட்டுக் கொண்டனர்.
இதையடுத்து, அந்த கோப்புகளையும், குறிப்புகளையும் தேடிக் கண்டுபிடித்து தருவதற்குப் பாதுகாப்பு அமைச்சக அதிகாரிகளும் ஒப்புக் கொண்டனர்.
இதுகுறித்து அக்குழுவின் 2 எம்.பி.க்களை பிடிஐ செய்தியாளர் தொடர்பு கொண்டு கேட்டபோது, தகவலை உறுதி செய்தனர்.
உச்ச நீதிமன்றம் விரைவில் விசாரணை?: போஃபர்ஸ் பீரங்கி ஊழல் விவகாரம் குறித்து உச்ச நீதிமன்றம் விரைவில் விசாரணை நடத்தும் வாய்ப்பு இருப்பதாகத் தெரிகிறது.
பாஜக நிர்வாகியும், மூத்த வழக்குரைஞருமான அஜய் குமார் அகர்வால் என்பவர், இந்த ஊழல் வழக்கில் தில்லி உயர் நீதிமன்றத்தால் கடந்த 2005}ஆம் ஆண்டு பிறப்பிக்கப்பட்ட தீர்ப்பை எதிர்த்து, உச்ச நீதிமன்றத்தில் மனுத் தொடுத்துள்ளார். இதை உச்ச நீதிமன்றமும் விசாரணைக்கு ஏற்றுக் கொண்டது.
அந்த மனு, உச்ச நீதிமன்றத்தில் ஜூலை மாதத்தில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட வேண்டிய வழக்குகளின் பட்டியலில் இடம்பெற்றிருந்தது. ஆனால், எதிர்பார்த்தபடி அந்த மனு விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படவில்லை.
தனிநபர் ரகசியம் காத்தல் விவகாரம் தொடர்பான வழக்கை உச்ச நீதிமன்ற அரசியல் சாசன அமர்வு தற்போது விசாரித்து வருகிறது. அதன்மீதான விசாரணை முடிந்ததும், போஃபர்ஸ் ஊழல் விவகாரம் தொடர்பான வழக்கு விசாரணையை உச்ச நீதிமன்றம் விரைவில் எடுத்துக் கொள்ளலாம் என்று தெரிகிறது. இந்த தகவலை மனுதாரரும், பாஜக நிர்வாகியுமான அஜய் குமார் அகர்வால் தெரிவித்துள்ளார்.
ரேபரேலி மக்களவைத் தொகுதியில் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியை எதிர்த்துப் போட்டியிட்டவர் அகர்வால் என்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com