சிவில் சர்வீசஸ் தேர்வு முடிவு வெளியீடு: கர்நாடக ஐஆர்எஸ் அதிகாரி கே.ஆர்.நந்தினி முதலிடம்

சிவில் சர்வீசஸ் தேர்வில், கர்நாடக மாநிலம், கோலாரைச் சேர்ந்த இந்திய வருவாய்த்துறை அதிகாரி (ஐஆர்எஸ்) கே.ஆர். நந்தினி முதலிடத்தைப் பிடித்துள்ளார்.
கே.ஆர்.நந்தினி
கே.ஆர்.நந்தினி

சிவில் சர்வீசஸ் தேர்வில், கர்நாடக மாநிலம், கோலாரைச் சேர்ந்த இந்திய வருவாய்த்துறை அதிகாரி (ஐஆர்எஸ்) கே.ஆர். நந்தினி முதலிடத்தைப் பிடித்துள்ளார்.
ஐஏஎஸ், ஐபிஎஸ், ஐஎஃப்எஸ் உள்ளிட்ட பல்வேறு குடிமைப் பணியிடங்களை நிரப்புவதற்காக, மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையத்தால் (யுபிஎஸ்சி) கடந்த ஆண்டு நடத்தப்பட்ட சிவில் சர்வீசஸ் தேர்வு முடிவுகள் புதன்கிழமை வெளியிடப்பட்டன. இதில் கர்நாடகத்தைச் சேர்ந்த ஐஆர்எஸ் அதிகாரி நந்தினி (26) முதல் இடத்தைப் பிடித்துள்ளார். ராஜஸ்தான் மாநிலம், பிலானியைச் சேர்ந்த அன்மோல் ஷேர் சிங் பேடி என்பவர் 2-ஆவது இடத்தைப் பிடித்துள்ளார்.
சிவில் சர்வீசஸ் தேர்வில் நந்தினி கலந்து கொள்வது இது 4-ஆவது முறையாகும். கடந்த 2014-ஆம் ஆண்டு சிவில் சர்வீசஸ் தேர்வில் கலந்து கொண்டு தேர்ச்சி பெற்ற அவருக்கு இந்திய வருவாய்த் துறை ஒதுக்கப்பட்டது. அதன்படி, தற்போது அவர், ஹரியாணா மாநிலம், ஃபரீதாபாதில் போதை மருந்து, கலால், சுங்கத்துறை தேசிய அகாதெமியில் தற்போது பயிற்சி பெற்று வருகிறார்.
சிவில் சர்வீசஸ் தேர்வில் முதலாவதாக வந்திருப்பது குறித்து நந்தினி கூறுகையில், 'ஐஏஎஸ் அதிகாரி ஆவதே எப்போதும் எனது விருப்பமாக இருந்தது' என்றார்.
நந்தினியையும் சேர்த்து, சிவில் சர்வீசஸ் தேர்வில் பெண்களே கடந்த 3 ஆண்டுகளும் தொடர்ந்து முதலிடத்தைப் பிடித்து சாதனை புரிந்துள்ளனர். இதற்கு முன்பு, தில்லியைச் சேர்ந்த ஐரா சிங்கால், தினா தபி ஆகியோர் முறையே 2014, 2015-ஆம் ஆண்டுகளில் நடைபெற்ற தேர்வுகளில் முதலாவதாக வந்துள்ளனர்.
முதல் 25 இடங்களைப் பிடித்தவர்களில், 18 பேர் ஆடவர்கள்; 7 பேர் பெண்கள் ஆவர்.
மத்திய அரசு பணிகளில் காலியாக இருந்த 1209 பணியிடங்களை நிரப்புவதற்கு யுபிஎஸ்சி அமைப்பால் கடந்த 2016-ஆம் ஆண்டு சீவில் சர்வீசஸ் தேர்வு நடத்தப்பட்டது. இதில் தற்போது தேர்ச்சி பெற்றிருக்கும் நபர்களில், 1,099 பேருக்கு (846 ஆடவர்கள், 253 பெண்கள்) பல்வேறு துறைகளில் பணியில் அமர்த்துவதற்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளது. அவர்களில் 44 மாற்றுத் திறனாளிகளும் அடங்குவர். இதுதவிர்த்து, 220 பேர் காத்திருப்போர் பட்டியலில் வைக்கப்பட்டுள்ளனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com