பசுவை தேசிய விலங்காக அறிவிக்க ராஜஸ்தான் நீதிபதி பரிந்துரை

பசுவை தேசிய விலங்காக மத்திய-மாநில அரசுகள் அறிவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், பசுவைக் கொல்வோருக்கு அளிக்கப்படும் தண்டனையை ஆயுள் தண்டனையாக அதிகரிக்க வேண்டும்
பசுவை தேசிய விலங்காக அறிவிக்க ராஜஸ்தான் நீதிபதி பரிந்துரை

பசுவை தேசிய விலங்காக மத்திய-மாநில அரசுகள் அறிவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், பசுவைக் கொல்வோருக்கு அளிக்கப்படும் தண்டனையை ஆயுள் தண்டனையாக அதிகரிக்க வேண்டும் என்றும் ராஜஸ்தான் மாநில உயர் நீதிமன்ற நீதிபதி மகேஷ் சந்த் சர்மா பரிந்துரை செய்துள்ளார்.
ராஜஸ்தான் மாநிலம், ஜெய்ப்பூரில் அரசால் பராமரிக்கப்பட்டு வரும் கோசாலைகளில் போதிய கவனிப்பின்மை காரணமாக நூற்றுக்கணக்கான பசுக்கள் கடந்த ஆண்டு உயிரிழந்தன. இதுதொடர்பாக ராஜஸ்தான் மாநில உயர் நீதிமன்றத்தில் பொதுநல வழக்குத் தொடுக்கப்பட்டது. இந்த வழக்கில் விசாரணை நிறைவடைந்ததையடுத்து, ராஜஸ்தான் உயர் நீதிமன்ற நீதிபதி மகேஷ் சந்த் சர்மா தீர்ப்பளித்தார். அதில் தெரிவித்திருப்பதாவது:
ஹிந்து நாடான நேபாளத்தில், தேசிய விலங்காகப் பசு அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தியாவும் கால்நடை வளர்ப்பை அடிப்படையாகக் கொண்ட விவசாய நாடாகும். இந்திய அரசமைப்புச் சட்டத்தின் 48 மற்றும் 51ஏ (ஜி) ஆகிய பிரிவுகளில், பசுவுக்கு சட்ட ரீதியில் அங்கீகாரம் பெறுவதற்கான நடவடிக்கையை மாநில அரசுதான் எடுக்க வேண்டும் என்று எதிர்பார்ப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, ராஜஸ்தான் மாநில தலைமைச் செயலரும், அட்வகேட் ஜெனரல் ஆகியோரே பசுவுக்கு சட்டரீதியிலான பாதுகாவலர்களாகிறார்கள் என்று அந்த தீர்ப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.
தீர்ப்பின் தொடர்ச்சியாக, மாநில அரசுக்கு நீதிபதி சர்மா சில யோசனைகளையும் முன்வைத்தார். அதில் அவர், '1995-ஆம் ஆண்டைய ராஜஸ்தான் கால்நடை விலங்குகள் சட்டத்தில் பசுவை கொல்வோருக்கு 3 ஆண்டுகள் சிறைத் தண்டனை அளிக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தத் தண்டனையை ஆயுள் தண்டனையாக அதிகரிக்கும் வகையில், அந்தச் சட்டத்தில் ராஜஸ்தான் அரசு திருத்தம் கொண்டு வர வேண்டுமென எதிர்பார்க்கிறேன்' என்றார்.
இந்த உத்தரவு குறித்து தனியார் தொலைக்காட்சிக்கு நீதிபதி சர்மா அளித்த பேட்டியில், 'எனது உத்தரவுகளை பரிந்துரைகளாகவே பார்க்க வேண்டும்; யாரையும் இது கட்டுப்படுத்தாது. பசுவைக் கொல்வோருக்கு எதிராக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று எனது ஆன்மா தெரிவிக்கிறது. இதே கருத்தைத்தான் உங்களது ஆன்மாவும், அனைவரின் ஆன்மாவும் தெரிவிக்கும் என்று கருதுகிறேன். சட்டத்தின் மூலஆதாரமே மதம்தான். பசுவைக் கொல்வதை விட, கொடிய குற்றம் வேறு எதுவும் கிடையாது. பசு என்பது நமது தாய் போன்றது. பல்வேறு நோய்களில் இருந்தும் பல பேரின் உயிர்களை பசு காத்து வருகிறது' என்றார்.
பசு உள்ளிட்ட கால்நடைகளை இறைச்சிக்காக விற்பனை செய்வதை தடை செய்து, மத்திய அரசு அண்மையில் உத்தரவுகளைப் பிறப்பித்தது. இதற்கு மேற்கு வங்கம், கர்நாடகம், கேரளம் உள்ளிட்ட மாநில அரசுகள் எதிர்ப்புத் தெரிவித்துள்ளன.
மத்திய அரசின் தடை உத்தரவு குறித்து விவாதிப்பதற்கு அனைத்து மாநில முதல்வர்களின் கூட்டத்தை கூட்ட கேரள அரசு முடிவு செய்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com