மகாராஷ்டிரம்: காங்கிரஸ் மூத்த தலைவரின் இருப்பிடங்களில் அமலாக்கத் துறை சோதனை

மகாராஷ்டிர மாநிலம், பாந்த்ராவில் குடிசைப் பகுதிகளை மேம்படுத்த செயல்படுத்தப்பட்ட திட்டத்தில் ரூ.400 கோடி அளவு முறைகேடுகள் நடைபெற்றது தொடர்பாக சட்டவிரோத பணப்பரிவர்த்தனை

மகாராஷ்டிர மாநிலம், பாந்த்ராவில் குடிசைப் பகுதிகளை மேம்படுத்த செயல்படுத்தப்பட்ட திட்டத்தில் ரூ.400 கோடி அளவு முறைகேடுகள் நடைபெற்றது தொடர்பாக சட்டவிரோத பணப்பரிவர்த்தனை சட்டத்தின்கீழ் பதிவு செய்யப்பட்ட வழக்கில், காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் பாபா சித்திக்கிற்கு சொந்தமான இடங்களில் அமலாக்கத் துறை புதன்கிழமை சோதனை நடத்தியது.
மும்பையில் உள்ள 7 இடங்களில் புதன்கிழமை அமலாக்கத் துறை அதிகாரிகளால் சோதனை நடத்தப்பட்டுள்ளது. இதில் பாபா சித்திக்கின் வீடு, ரியல் எஸ்டேட் நிறுவனம், அவருக்கு நெருங்கிய கட்டுமான தொழிலதிபரின் வீடு ஆகியவையும் அடங்கும்.
இதனிடையே, அமலாக்கத் துறையின் இந்நடவடிக்கையை அரசியல் பழிவாங்கும் நடவடிக்கை என்று காங்கிரஸ் கட்சி விமர்சித்துள்ளது. இதுகுறித்து அக்கட்சியின் மாநில செய்தித் தொடர்பாளர் சச்சின் சாவந்த் கூறுகையில், 'எதிர்க்கட்சிகளுக்கு எதிராக புலனாய்வு அமைப்புகளை மத்தியில் உள்ள பாஜக அரசு பயன்படுத்துகிறது' என்று குற்றம்சாட்டினார்.
மகாராஷ்டிரத்தில் முந்தைய காங்கிரஸ் கூட்டணி அரசின் ஆட்சிக்காலத்தில் கடந்த 2004-ஆம் ஆண்டு முதல் 2008-ஆம் ஆண்டு வரையிலும் மாநில உணவு மற்றும் பொது விநியோகத்துறை அமைச்சராக இருந்தவர் பாபா சித்திக். கடந்த 2000-ஆம் ஆண்டு முதல் 2004-ஆம் ஆண்டு வரையிலும் மும்பை வீட்டு வசதி மற்றும் மேம்பாட்டு வாரியத்தின் தலைவராகவும் அவர் இருந்துள்ளார். இந்நிலையில், பாந்த்ரா பகுதியில் இருந்த குடிசைகளை அகற்றிவிட்டு புதிதாக கட்டப்பட்ட அடுக்குமாடி குடியிருப்புகளை ஒதுக்குவதில் முறைகேடு நடைபெற்றிருப்பதாகவும், அதில் பாபா சித்திக்கிற்கு தொடர்பிருப்பதாகவும் நீதிமன்றத்தில் வழக்குத் தொடுக்கப்பட்டது. இதை விசாரித்த நீதிமன்றம், பாபா சித்திக் மீது வழக்குப்பதிவு செய்யும்படி பாந்த்ரா போலீஸுக்கு உத்தரவிட்டது. இதையேற்று, பாபா சித்திக் மீது கடந்த 2014-ஆம் ஆண்டில் போலீஸார் வழக்குப்பதிவு செய்தனர். இதை அடிப்படையாகக் கொண்டு, சித்திக் உள்ளிட்டோருக்கு எதிராக சட்டவிரோத பணப்பரிவர்த்தனை சட்டத்தின்கீழ் அமலாக்கத் துறையும் தனியே வழக்குப்பதிவு செய்தது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com