மாடுகள் விற்பனை தடை உத்தரவில் தலையிட முடியாது: கேரள உயர் நீதிமன்றம்

இறைச்சிக்காக மாடுகள் விற்கப்படுவதை தடை செய்து மத்திய அரசு பிறப்பித்த உத்தரவில் தம்மால் தலையிட முடியாது என்று கேரள உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

இறைச்சிக்காக மாடுகள் விற்கப்படுவதை தடை செய்து மத்திய அரசு பிறப்பித்த உத்தரவில் தம்மால் தலையிட முடியாது என்று கேரள உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
இறைச்சிக்காக பசு, காளை, எருமை, ஒட்டகம் ஆகிய கால்நடைகளை விற்பனை செய்வதற்கு மத்திய அரசு அண்மையில் தடை விதித்து உத்தரவிட்டது. இதற்கு நாடு முழுவதும் பரவலாக கடும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டு வருகிறது.
இந்தச் சூழலில், மத்திய அரசின் இந்த உத்தரவை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட மனுவை கடந்த செவ்வாய்க்கிழமை விசாரித்த சென்னை உயர் நீதிமன்றம், அந்த உத்தரவுக்கு இடைக்காலத் தடை விதித்தது. மேலும், இந்த மனுவுக்கு மத்திய அரசு 4 வாரங்களுக்குள் பதில் மனு தாக்கல் செய்ய வேண்டும் எனவும் நீதிமன்றம் உத்தரவிட்டது.
இந்நிலையில், மத்திய அரசின் இந்தப் புதிய உத்தரவுக்கு எதிராக கேரள உயர் நீதிமன்றத்தில் ஏ.ஜி. சுனில் என்பவர் மனு தாக்கல் செய்திருந்தார். அந்த மனுவில் கூறப்பட்டுள்ளதாவது:
இறைச்சிக்காக மாடுகள் விற்பனை செய்யப்படுவதற்கு விதிக்கப்பட்ட தடையானது, அரசமைப்புச் சட்டம் உறுதியளிக்கும் அடிப்படை உரிமைகளை தடுக்கும் வகையில் அமைந்துள்ளது.
குறிப்பாக, அரசமைப்புச் சட்டத்தின் 19(1)-ஆவது பிரிவுக்கு எதிராகவும் இந்த உத்தரவை மத்திய அரசு பிறப்பித்திருக்கிறது. எனவே, இந்த உத்தரவை தடை செய்ய வேண்டும் என அந்த மனுவில் தெரிவிக்கப்பட்டிருந்தது.
இந்த மனுவானது, கேரள உயர் நீதிமன்றத் தலைமை நீதிபதி நவநிதி பிரசாத் சிங் தலைமையில் புதன்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது, இருதரப்பு வாதங்களையும் கேட்ட பின்னர் நீதிபதி கூறியதாவது:
மத்திய அரசின் புதிய உத்தரவில், இறைச்சிக்காக மாடுகள் விற்கப்படுவதற்கு மட்டுமே தடை விதிக்கப்பட்டுள்ளது. அதேநேரத்தில், மாட்டிறைச்சியை உண்பதற்கோ, விற்பதற்கோ எந்தத் தடையும் விதிக்கப்படவில்லை. ஆகவே, இந்த உத்தரவானது அரசமைப்புச் சட்டத்தை மீறுவதாக தெரியவில்லை. இதன் காரணமாக, இந்த உத்தரவில் தலையிடுவதற்கான அவசியம் எழவில்லை என்று நீதிபதி தெரிவித்தார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com