ரூ.17 ஆயிரம் கோடி நிலுவை நிதியை உடனே வழங்க வேண்டும்: ஜேட்லியிடம் தமிழக அமைச்சர்கள் கோரிக்கை

மத்திய அரசின் நிதியுதவியுடன் தமிழகத்தில் செயல்படுத்தப்பட்ட வளர்ச்சித் திட்டங்களுக்காக செலவிட்ட ரூ.17 ஆயிரம் கோடி நிலுவை நிதியை உடனடியாக வழங்க வேண்டும்
மத்திய நிதியமைச்சர் அருண் ஜேட்லியை தில்லியில் புதன்கிழமை சந்தித்து தமிழக அரசின் கோரிக்கைகள் அடங்கிய மனுவை அளிக்கும் மாநில அமைச்சர்கள் பி. தங்கமணி, சி.வி. சண்முகம்,
மத்திய நிதியமைச்சர் அருண் ஜேட்லியை தில்லியில் புதன்கிழமை சந்தித்து தமிழக அரசின் கோரிக்கைகள் அடங்கிய மனுவை அளிக்கும் மாநில அமைச்சர்கள் பி. தங்கமணி, சி.வி. சண்முகம்,

மத்திய அரசின் நிதியுதவியுடன் தமிழகத்தில் செயல்படுத்தப்பட்ட வளர்ச்சித் திட்டங்களுக்காக செலவிட்ட ரூ.17 ஆயிரம் கோடி நிலுவை நிதியை உடனடியாக வழங்க வேண்டும் என மத்திய நிதியமைச்சர் அருண் ஜேட்லியிடம் தமிழக அமைச்சர்கள் பி.தங்கமணி, சி.வி.சண்முகம் ஆகியோர் கோரிக்கை விடுத்தனர்.
இது தொடர்பாக மத்திய நிதியமைச்சர் அருண் ஜேட்லியை அவரது அமைச்சகத்தில் தமிழக மின்சாரத் துறை அமைச்சர் பி தங்கமணி, தமிழக சட்டத் துறை அமைச்சர் சி.வி. சண்முகம் ஆகியோர் புதன்கிழமை மாலையில் சந்தித்தனர். மக்களவைத் துணைத் தலைவர் தம்பிதுரை, நாடாளுமன்ற அதிமுக குழுத் தலைவர் டாக்டர் பி. வேணுகோபால், துணைத் தலைவர் நவநீதகிருஷ்ணன் ஆகியோர் இச்சந்திப்பின் போது உடனிருந்தனர்.
இச்சந்திப்புக்குப் பிறகு மக்களவைத் துணைத் தலைவர் எம். தம்பிதுரை செய்தியாளர்களிடம் கூறியது: மத்திய அரசு நிதியுதவியுடன் நிறைவேற்ற வேண்டிய பல்வேறு வளர்ச்சித் திட்டங்களுக்காக ஆயிரக்கணக்கான கோடி ரூபாய் நிதியை தமிழக அரசு செலவு செய்துள்ளது. அந்த வகையில் கடந்த மூன்று ஆண்டுகளில் ரூ.17 ஆயிரம் கோடி நிலுவை நிதியை தமிழகத்துக்கு மத்திய அரசு வழங்க வேண்டும். இந்த நிதியை உடனே வழங்குமாறு அருண் ஜேட்லியை தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி சார்பில் தமிழக அமைச்சர்கள் கேட்டுக் கொண்டனர். இதே கோரிக்கையை ஏற்கெனவே பிரதமர் நரேந்திர மோடியிடம் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி அண்மையில் நேரில் வலியுறுத்தினார். இதைத் தொடர்ந்து, அந்த கோரிக்கைகள் மீதான நடவடிக்கையை அறிந்து கொள்வதற்காகவும் மத்திய அரசுக்கு அழுத்தம் கொடுப்பதற்காகவும் தற்போது தமிழக அமைச்சர்கள் அருண் ஜேட்லியை சந்தித்தனர்.
இறைச்சிக்காக மாடுகள் உள்ளிட்ட கால்நடைகளை விற்பனை செய்ய மத்திய அரசு விதித்த கட்டுப்பாடு விவகாரத்தில் தமிழகத்தில் ஆளும் அதிமுக அரசு, மக்களின் உணர்வுகளுக்கு மதிப்பளித்துச் செயல்பட்டு வருகிறது. மாட்டிறைச்சி விவகாரத்தில் மத்திய அரசின் நடவடிக்கையை பெரும்பான்மையான தமிழக மக்கள் எதிர்க்கின்றனர். இந்த விவகாரத்தில் தமிழக அரசின் நிலைப்பாட்டை மாநில முதல்வர் எடப்பாடி பழனிசாமி வெளியிடுவார். சென்னை ஐஐடி வளாகத்தில் மாணவர்கள் மோதல் சம்பவம் தொடர்பாக இரு தரப்பினர் மீதும் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
மத்திய நிதியமைச்சர் அருண் ஜேட்லியுடன் மாநில நிதி விவகாரம் தொடர்பாக மட்டுமே பேசினோம். குடியரசுத் தலைவர் தேர்தல் வேட்பாளர் உள்ளிட்ட பிற அரசியல் விவகாரங்களை விவாதிக்கவில்லை என்றார் தம்பிதுரை.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com