எல்லையில் அத்துமீறல்: இந்திய ராணுவத்தின் பதிலடியில் 5 பாகிஸ்தான் வீரர்கள் பலி

இருநாட்டு எல்லைப் பகுதியில் போர் நிறுத்த ஒப்பந்தத்தை மீறி பாகிஸ்தான் ராணுவம் நடத்திய தாக்குதலுக்கு பதிலடியாக, இந்திய ராணுவம் நடத்திய தாக்குதலில் அந்நாட்டைச் சேர்ந்த 5 வீரர்கள் பலியாகினர்.

இருநாட்டு எல்லைப் பகுதியில் போர் நிறுத்த ஒப்பந்தத்தை மீறி பாகிஸ்தான் ராணுவம் நடத்திய தாக்குதலுக்கு பதிலடியாக, இந்திய ராணுவம் நடத்திய தாக்குதலில் அந்நாட்டைச் சேர்ந்த 5 வீரர்கள் பலியாகினர்.
இந்தியா - பாகிஸ்தான் இடையே தொடர்ந்து பதற்றமான சூழல் நிலவி வரும் நிலையில், இந்தச் சம்பவம் அங்கு மேலும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதையடுத்து, இந்திய எல்லையில் ஏராளமான ராணுவ வீரர்கள் குவிக்கப்பட்டுள்ளனர்.
பாகிஸ்தான் எல்லை அதிரடிப் படையினர் ஜம்மு-காஷ்மீர் எல்லையில் ஊடுருவி, இந்திய ராணுவ வீரர்கள் 2 பேரைக் கொன்று அவர்களின் தலைகளைத் துண்டித்தது. இச்சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. மேலும், பாகிஸ்தானுக்கு தக்க பதிலடி கொடுக்க வேண்டும் என்று நாடு முழுவதிலும் இருந்து கோரிக்கை வலுத்தது.
இந்நிலையில், இந்தச் சம்பவம் நடைபெற்ற இரண்டு வாரங்களில், இந்தியாவுக்குள் பயங்கரவாதிகள் ஊடுருவுவதற்கு உதவி செய்து வந்த பாகிஸ்தானின் ராணுவ நிலைகள் பூண்டோடு அழிக்கப்பட்டதாக பாதுகாப்புத் துறை வட்டாரங்கள் அதிகாரப்பூர்வமாக அறிவித்தன. மேலும், இதுதொடர்பான விடியோ காட்சிகளையும் இந்திய ராணுவம் வெளியிட்டது. இந்த தாக்குதலில் பாகிஸ்தான் ராணுவ வீரர்கள் ஏராளமானோர் கொல்லப்பட்டதாகவும் கூறப்பட்டது.
இதன் தொடர்ச்சியாக, இரு நாட்டு எல்லைப் பகுதியில் இருதரப்பு ராணுவ வீரர்களிடையே அவ்வப்போது துப்பாக்கிச் சண்டைகள் நடைபெற்று வந்த வண்ணம் இருந்தன.
சியாச்சின் அத்துமீறல்: இதுபோன்ற சூழ்நிலையில், இந்தியாவின் கட்டுப்பாட்டுக்குள் இருக்கும் சியாச்சின் மலை சிகரத்தையொட்டிய வான்வெளியில் பாகிஸ்தானின் போர் விமானங்கள் கடந்த மாதம் 24-ஆம் தேதி அத்துமீறி பறந்ததாக அந்நாட்டு ஊடகங்களில் செய்திகள் வெளியாயின. இதனை இந்திய ராணுவம் மறுத்தபோதிலும், இருநாட்டு எல்லைப் பகுதியில் ஒருவித போர் பதற்றத்தை இச்சம்பவம் உருவாக்கியது.
பாகிஸ்தான் தாக்குதல்: இந்நிலையில், ஜம்மு-காஷ்மீர் எல்லையில் அமைந்துள்ள நௌஷேரா, கிருஷ்ண காட்டி, பூஞ்ச் ஆகிய பகுதிகளில் போர் நிறுத்த ஒப்பந்தத்தை மீறி பாகிஸ்தான் ராணுவம் வியாழக்கிழமை அதிகாலை தாக்குதல் நடத்தியது. இயந்திரத் துப்பாக்கிகள், சிறிய ரக பீரங்கிகள், ராக்கெட் லாஞ்சர்கள் ஆகியவற்றின் மூலம் பாகிஸ்தான் ராணுவத்தினர் கண்மூடித்தனமாக தாக்குதல் நடத்தினர். இதில், எல்லையோர சாலைகள் அமைக்கும் ராணுவப் பொறியியல் பிரிவைச் சேர்ந்த ஒருவர் உயிரிழந்தார். எல்லைப் பாதுகாப்புப் படை வீரர் உள்பட இருவர் படுகாயமடைந்தனர்.
இந்தியா பதிலடி: இதையடுத்து, பாகிஸ்தானின் தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக, அந்நாட்டு எல்லையில் உள்ள ராணுவ நிலைகள் மீது இந்தியப் பாதுகாப்புப் படை கடுமையான தாக்குதல் நடத்தியது. இதில், பாகிஸ்தான் ராணுவ வீரர்கள் 5 பேர் உயிரிழந்திருப்பதாகவும், 6 பேர் படுகாயமடைந்துள்ளதாகவும் அந்நாட்டு வெளியுறவுத் துறை தெரிவித்துள்ளது.
மேலும், இந்திய ராணுவத்தின் தாக்குதலில் பட்டால், ஜந்த்ரோத், கோட்லி ஆகிய கிராமங்களைச் சேர்ந்த 3 பேர் உயிரிழந்திருப்பதாகவும் பாகிஸ்தான் தெரிவித்துள்ளது.
பாகிஸ்தான் கண்டனம்: போர் நிறுத்த ஒப்பந்தத்தை மீறி இந்திய ராணுவம் தாக்குதல் நடத்தியதாக கூறி, இந்தியத் துணைத் தூதரை நேரில் அழைத்து பாகிஸ்தான் கண்டனம் தெரிவித்துள்ளது.
இந்த விவகாரம் தொடர்பாக பாகிஸ்தானுக்கான இந்தியத் துணைத் தூதர் ஜே.பி. சிங்கை நேரில் அழைத்து தெற்காசிய மற்றும் சார்க் விவகாரங்களுக்கான பாகிஸ்தான் இயக்குநர் முகமது ஃபைசல் கண்டனம் தெரிவித்துள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com