யுபிஎஸ்சி மதிப்பெண் பட்டியல் 15 நாள்களில் வெளியீடு

ஐஏஎஸ், ஐபிஎஸ் உள்ளிட்ட குடிமைப் பணிகளுக்கான தேர்வை எழுதியவர்களின் மதிப்பெண் பட்டியல் இன்னும் 15 நாள்களில் வெளியிடப்படும் என்று மத்திய குடிமைப் பணிகள் தேர்வாணையம்

ஐஏஎஸ், ஐபிஎஸ் உள்ளிட்ட குடிமைப் பணிகளுக்கான தேர்வை எழுதியவர்களின் மதிப்பெண் பட்டியல் இன்னும் 15 நாள்களில் வெளியிடப்படும் என்று மத்திய குடிமைப் பணிகள் தேர்வாணையம் (யுபிஎஸ்சி) அறிவித்துள்ளது.
இதுதொடர்பாக யுபிஎஸ்சி வியாழக்கிழமை வெளியிட்ட அறிக்கையில், ''தேர்வு முடிவுகள் வெளியான நாளில் இருந்து அடுத்த 15 நாள்களில் யுபிஎஸ்சியின் இணையதளத்தில் (www.upsc.gov.in)  மதிப்பெண் பட்டியல் வெளியிடப்படும்'' என்று தெரிவித்துள்ளது.
இதனிடையே, யுபிஎஸ்சி வளாகத்தில் ஆலோசனை மையம் ஒன்றும் அமைக்கப்பட்டுள்ளது. குடிமைப் பணி தேர்வு, பணி நியமனம் ஆகியவை தொடர்பான தகவல்களை மாணவர்கள் நேரடியாகவும், தொலைபேசி வாயிலாகவும் தெரிந்து கொள்வதற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
ஐஏஎஸ், ஐபிஎஸ், ஐஎஃப்எஸ் உள்ளிட்ட குடிமைப் பணிகளுக்குத் தகுதியான நபர்களை மத்திய குடிமைப் பணிகள் தேர்வாணையம், முதனிலைத் தேர்வு, முதன்மைத் தேர்வு, நேர்காணல் ஆகியவற்றை நடத்தி தேர்ந்தெடுக்கிறது.
கடந்த ஆண்டு நடத்தப்பட்ட தேர்வின் முடிவுகளை யுபிஎஸ்சி புதன்கிழமை வெளியிட்டது. இந்தத் தேர்வில், கர்நாடக மாநிலம், கோலாரைச் சேர்ந்த இந்திய வருவாய்த்துறை அதிகாரி (ஐஆர்எஸ்) கே.ஆர்.நந்தினி முதலிடம் பிடித்துள்ளார். ராஜஸ்தான் மாநிலம், பிலானியைச் சேர்ந்த அன்மோல் ஷேர் சிங் பேடி என்பவர் 2-ஆவது இடத்தைப் பிடித்துள்ளார்.
இந்தத் தேர்வில் 846 ஆண்கள், 253 பெண்கள் என மொத்தம் 1,099 பேர் வெற்றி பெற்று, பல்வேறு குடிமைப் பணிகளுக்குப் பரிந்துரை செய்யப்பட்டுள்ளனர். அவர்களில் 500 பேர் பொதுப் பிரிவினர், 347 பேர் மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினர், 163 பேர் தாழ்த்தப்பட்ட வகுப்பினர், 89 பேர் பழங்குடி வகுப்பினர் ஆவர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com