சிக்னல் கிடைக்காததால் மரத்தின் மீது ஏறினார் மத்திய இணை அமைச்சர் அர்ஜூன் மேக்வால்

ராஜஸ்தான் மாநிலத்தில் உள்ள தனது பிகானீர் தொகுதிக்குச் சென்ற மத்திய நிதித் துறை இணை அமைச்சர் அர்ஜூன் மேக்வால், செல்போன் சிக்னல் கிடைக்காததால், மரத்தின் மீது ஏறி நின்று பேசிய புகைப்படங்கள் வெளியாகியுள்ளது.
சிக்னல் கிடைக்காததால் மரத்தின் மீது ஏறினார் மத்திய இணை அமைச்சர் அர்ஜூன் மேக்வால்


பிகானீர்: ராஜஸ்தான் மாநிலத்தில் உள்ள தனது பிகானீர் தொகுதிக்குச் சென்ற மத்திய நிதித் துறை இணை அமைச்சர் அர்ஜூன் மேக்வால், செல்போன் சிக்னல் கிடைக்காததால், மரத்தின் மீது ஏறி நின்று பேசிய புகைப்படங்கள் வெளியாகியுள்ளது.

டிஜிட்டல் இந்தியா திட்டம் குறித்து மத்தியில் ஆளும் அரசு பெருமை பேசி வரும் நிலையில், அந்த கனவு எந்த அளவுக்கு நடைமுறையில் இருக்கிறது என்பதை ராஜஸ்தான் மாநிலத்தில் அமைச்சர் நேரடியாகவே உணர்ந்திருப்பார் என்று இந்த புகைப்படத்துக்கு விமரிசனம் முன் வைக்கப்படுகிறது.

தனது நாடாளுமன்றத் தொகுதியின பிகானீர் சென்று தொகுதி மக்களிடம் குறைகளைக் கேட்ட அமைச்சர் அர்ஜூன் மேக்வால், குறைகள் தொடர்பாக நடவடிக்கை எடுக்குமாறு அறிவுறுத்த அரசு அதிகாரிகளை செல்போனில் தொடர்பு கொள்ள முயன்று தோற்றுப் போனார்.

செல்போன் அழைப்புகளை செய்ய முடியாமல் திணறிய அமைச்சருக்கு பொதுமக்களே ஒரு உபாயமும் சொன்னார்கள். அதாவது, எப்போதுமே செல்போன் சிக்னல் எங்களுக்குக் கிடைப்பதில்லை. அதனால், ஆங்காங்கே இருக்கும் மரங்களில் மீது ஏறிதான் செல்போனில் பேசுவதாகவும் கூறி, மரத்தின் மீது ஏறி பேசுமாறு ஆலோசனை வழங்கினர்.

மக்கள் கூறிய யோசனையை அடுத்து என்ன செய்வதென்று தெரியாமல் சற்று நேரம் திகைத்த அமைச்சர், மரத்தின் மீது ஏறவும் முயற்சித்தார். ஆனால் அவரால் முடியவில்லை. உடனடியாக மரத்தின் மீது ஏணி போடப்பட்டது. அதன் மீது ஏறிய அமைச்சர் அங்கிருந்து அரசு அதிகாரிகளுக்கு செல்போனில் பேசினார்.

பிறகு அவர் கீழே இறங்கி வந்ததும் பொதுமக்கள் கைதட்டி ஆரவாரம் செய்தனர். இந்த புகைப்படங்களும் விடியோவும் சமூக தளங்களில் வேகமாகப் பரவி வருகிறது.

கிராமத்தில் குடிநீர் சுத்திகரிப்பு நிலையம் அமைத்துத் தருவதாக உறுதி அளித்திருந்த அமைச்சர், இந்த நிகழ்வுக்குப் பிறகு ஒரு செல்போன் டவரும் அமைத்துத் தர ரூ.13 லட்சம் ஒதுக்குவதாகவும் கூறினார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com