காஷ்மீரை இந்தியா ஆக்கிரமித்துள்ளதா? காங்கிரஸூக்கு வெங்கய்ய நாயுடு கண்டனம்

ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தை "இந்திய ஆக்கிரமிப்பு காஷ்மீர்' என்று வரைபடத்தில் குறிப்பிட்ட காங்கிரஸ் கட்சிக்கு மத்திய செய்தி ஒலிபரப்புத் துறை அமைச்சர் வெங்கய்ய நாயுடு கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
காஷ்மீரை இந்தியா ஆக்கிரமித்துள்ளதா? காங்கிரஸூக்கு வெங்கய்ய நாயுடு கண்டனம்

ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தை "இந்திய ஆக்கிரமிப்பு காஷ்மீர்' என்று வரைபடத்தில் குறிப்பிட்ட காங்கிரஸ் கட்சிக்கு மத்திய செய்தி ஒலிபரப்புத் துறை அமைச்சர் வெங்கய்ய நாயுடு கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
மத்தியில் பாஜக அரசு மூன்று ஆண்டுகள் ஆட்சியை நிறைவு செய்துள்ள நிலையில், மத்திய அரசின் செயல்பாடுகளை குறைகூறி லக்னெளவில் காங்கிரஸ் சார்பில் கூட்டம் நடத்தப்பட்டது. இதில், மத்திய அரசின் செயல்பாடுகளை விமர்சித்து கையேடு ஒன்றும் வெளியிடப்பட்டது. அதில், உள்ள இந்திய வரைபடத்தில் ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தை "இந்திய ஆக்கிரமிப்பு காஷ்மீர்' என்று சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
ஹைதராபாதில் செய்தியாளர்களிடம் ஞாயிற்றுக்கிழமை பேசிய வெங்கய்ய நாயுடு இது தொடர்பாக கூறியதாவது:
நமது சொந்த மாநிலமான ஜம்மு-காஷ்மீரை நாமே ஆக்கிரமித்து வைத்துள்ளதாக காங்கிரஸ் கட்சி கூறியுள்ளது. பாஜக தலைமையிலான மத்திய அரசின் மூன்றாண்டு கால சாதனைகளை நாட்டு மக்கள் கொண்டாடி வருகின்றனர். இந்த நேரத்தில், காஷ்மீர் பாகிஸ்தானுக்கு சொந்தமானது என்றும், அதனை நமது நாடு ஆக்கிரமித்து வைத்துள்ளதுபோலவும் காங்கிரஸ் சார்பில் வரைபடம் வெளியிடப்பட்டுள்ளது.
காஷ்மீரை பாகிஸ்தானுக்கு கொடுத்தால்தான் நாம் அமைதியாக வாழ முடியும் என்பதுதான் காங்கிரஸ் கட்சியின் கருத்து என்பதை இதன் மூலம் தெரிந்து கொள்ள முடிகிறது.
நமது தேசிய ஒருமைப்பாட்டையும், இறையாண்மையையும் பாதுகாக்க இதுவரை நூற்றுக்கணக்கான ராணுவ வீரர்கள் எல்லையில் வீரமரணமடைந்துள்ளனர். அவர்களுக்கு காங்கிரஸ் அளிக்கும் மரியாதை இதுதான். இதுபோன்ற மனநிலையில் செயல்படும் காங்கிரûஸ நாட்டு மக்கள் ஒருபோதும் மன்னிக்க மாட்டார்கள்.
அவசரநிலை காலத்தை மறந்துவிட்டார்களா? பிரதமர் மோடி ஒற்றைக் கலாசாரத்தை திணிக்க முயற்சிப்பதாக காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தி கூறியுள்ளார். அனைத்து முடிவுகளை மோடி தன்னிச்சையாக எடுப்பதாக எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டுகின்றன.
முன்பு காங்கிரஸ் தலைமையிலான ஆட்சியில் இந்திரா காந்தி பிரதமராக இருந்தபோது அவர் அமல்படுத்திய அவசரநிலையை முழுமையாக அவர்கள் மறந்துவிட்டனர் என்று தெரிகிறது. இந்த தேசத்தின் மிகவும் இருண்ட காலம் அது. இந்திராதான் இந்தியா, இந்தியா என்றால் இந்திரா என்ற நிலையை ஏற்படுத்த அவர் முயற்சித்தார். கம்யூனிஸ்ட் கட்சியினர் தாங்கள் ஆட்சி செய்த மாநிலங்களிலும், காங்கிரஸ் ஆட்சியிலும் நடந்த கொடுமைகளை முற்றிலும் மறந்துவிட்டது வேடிக்கையாக இருக்கிறது.
பிரதமர் மோடி தங்கள் வாழ்க்கை முழுமையாக மாற்றுவார் என்ற நம்பிக்கையில் மக்கள் அவருக்கு முழு அதிகாரத்தையும் தேர்தல் மூலம் வழங்கியுள்ளனர். அவரது துணிச்சலான முடிவுகளாலும், நிர்வாகத் திறனாலும் நாட்டில் ஊழல் ஒழிக்கப்பட்டுள்ளது என்றார் வெங்கய்ய நாயுடு.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com