மண்ணெண்ணெய் மானியம் பெறுவதற்கு ஆதார் எண் கட்டாயம்: மத்திய அரசு அதிரடி

மண்ணெண்ணெய் மானியம், அடல் ஓய்வூதியத் திட்டத்தின் பலன் ஆகியவற்றை பெறுவதற்கும் ஆதார் எண்ணை மத்திய அரசு தற்போது கட்டாயமாக்கியுள்ளது.
மண்ணெண்ணெய் மானியம் பெறுவதற்கு ஆதார் எண் கட்டாயம்: மத்திய அரசு அதிரடி

மண்ணெண்ணெய் மானியம், அடல் ஓய்வூதியத் திட்டத்தின் பலன் ஆகியவற்றை பெறுவதற்கும் ஆதார் எண்ணை மத்திய அரசு தற்போது கட்டாயமாக்கியுள்ளது.
இதுகுறித்து மத்திய அரசு அதிகாரிகள் ஞாயிற்றுக்கிழமை கூறியதாவது:
மண்ணெண்ணெய் மானியத்தை பெறுவோர், அடல் ஓய்வூதியத் திட்டத்தில் இணைந்திருப்போர் தங்களது ஆதார் எண்ணை உடனடியாக பதிவு செய்ய வேண்டும் அல்லது ஆதார் எண் பெறுவதற்காக தங்களது அடையாளங்களை பதிவு செய்ய வேண்டும்.
மண்ணெண்ணெய் மானியத்தை பொறுத்தவரையில், ஆதாரை பெறுவதற்கு அல்லது ஆதாருக்கு அடையாளங்களைப் பதிவு செய்வதற்கு வரும் செப்டம்பர் மாதம் 30-ஆம் தேதியே கடைசி நாளாகும். அடல் ஓய்வூதியத் திட்டத்தை பொறுத்த வரையில், ஆதாரை பெறுவதற்கு இம்மாதம் 15-ஆம் தேதியே கடைசி நாளாகும்.
இந்த 2 திட்டங்களிலும் நடைபெறும் முறைகேடுகள் மற்றும் மானிய பலன்கள் பிறரைச் சென்றடைவதை தடுக்க வேண்டும் என்ற நோக்கத்துடனேயே ஆதாரை கட்டாயமாக்குவது என்ற முடிவு மத்திய அரசால் எடுக்கப்பட்டுள்ளது.
ஆதார் எண் கிடைக்கபெறவில்லையெனில், ரேஷன் அட்டை, ஓட்டுநர் உரிமம், வாக்காளர் அடையாள அட்டை, புகைப்படத்துடன் கூடிய கிசான் விகாஸ் கணக்குப் புத்தகம், கெசட் அதிகாரியால் அளிக்கப்படும் சான்றிதழ், மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதித் திட்டத்தின்கீழ் அளிக்கப்படும் அட்டை ஆகியவை மேற்கண்ட பலன்களை பெறுவதற்கான அடையாள சான்றாக ஏற்றுக் கொள்ளப்படும். இந்த பலன்களை பெறுவதற்கு, ரேஷன் அட்டைகளுடன் ஆதார் எண்ணை இணைக்க வேண்டுமா? வங்கிக் கணக்குடன் ஆதார் எண்ணை இணைக்க வேண்டுமா? என்று இனிமேல்தான் முடிவு எடுக்கப்படவுள்ளது என்று மத்திய அரசு அதிகாரிகள் தெரிவித்தனர்.
வீடுகளில் சமையலுக்கு பயன்படுத்தப்படுவதற்காக மண்ணெண்ணெய்க்கு மாநில அரசுகள், யூனியன் பிரதேச அரசுகளுக்கு மத்திய அரசால் மானியம் வழங்கப்பட்டு வருகிறது. அதுவும், வறுமைக் கோட்டுக்கு கீழ் இருக்கும் குடும்பத்தினர் பயனடைய வேண்டும் என்பதற்காக இந்த மானியத்தை மத்திய அரசு அளிக்கிறது.
அடல் ஓய்வூதியத் திட்டத்தில், 18 வயது முதல் 40 வயது வரையிலான நபர்கள் சேரலாம். அவ்வாறு சேரும் நபர்களுக்கு, அவர்கள் அத்திட்டத்தில் செலுத்தும் தொகையை அடிப்படையாகக் கொண்டு, 60 வயது முதல் மாதந்தோறும் ரூ.1,000 முதல் ரூ.5 ஆயிரம் வரை ஓய்வூதியமாக அளிக்கப்படும். இந்தத் திட்டத்தில் சேரும் பயனாளி ஒருவேளை உயிரிழக்கும்பட்சத்தில், அந்த ஓய்வூதியமானது அந்த நபரின் வாழ்க்கைத் துணைக்கு அளிக்கப்படும். ஒருவேளை பயனாளியும், அவரது வாழ்க்கைத் துணையும் உயிரிழக்கும்பட்சத்தில், வாரிசுதாரர் என்று பயனாளியால் குறிப்பிட்ட நபருக்கு ஓய்வூதிய பலன் சென்றடையும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com