வாங்கிய லஞ்சத்தை திருப்பி அளிக்கும் அதிகாரிகள்!

ஆந்திரப் பிரதேசத்தில் அரசின் புதிய திட்டத்தின் மூலம், மக்களிடம் இருந்து லஞ்சமாகப் பெற்ற பணத்தை அதிகாரிகளும், ஊழியர்களும் திருப்பிக் கொடுத்து வருகின்றனர்.
வாங்கிய லஞ்சத்தை திருப்பி அளிக்கும் அதிகாரிகள்!

ஆந்திரப் பிரதேசத்தில் அரசின் புதிய திட்டத்தின் மூலம், மக்களிடம் இருந்து லஞ்சமாகப் பெற்ற பணத்தை அதிகாரிகளும், ஊழியர்களும் திருப்பிக் கொடுத்து வருகின்றனர்.

சமீபத்திய கணக்கெடுப்பின்படி, அதிக ஊழல் நடைபெறும் மாநிலங்களின் பட்டியலில் கர்நாடகத்துக்கு அடுத்த இடத்தில் ஆந்திரப் பிரதேசம் உள்ளது. இந்த நிலையில், மாநிலத்தில் லஞ்சம், ஊழல் ஆகியவற்றை ஒழிப்பதற்காக, புதிய திட்டம் ஒன்றை மாநில முதல்வர் சந்திரபாபு நாயுடு தொடங்கியுள்ளார்.
அதன்படி, அரசு சேவைகளையும், சலுகைகளையும் பெறுவதற்கு அரசு ஊழியர்களுக்கு லஞ்சம் கொடுத்திருந்தால், "1100' என்ற எண்ணைத் தொடர்புகொண்டு பொதுமக்கள் தங்களது குறைகளைத் தெரிவிக்கலாம்.
அந்த அழைப்பு மையத்தில் பணியாற்றும் 700க்கும் மேற்பட்ட ஊழியர்கள், புகாருக்குள்ளான அதிகாரிகளைத் தொடர்பு கொண்டு விசாரிக்கிறார்கள். அப்போது, லஞ்சம் வாங்கியது உண்மையெனில், அந்தப் பணத்தை மக்களிடம் திருப்பிக் கொடுப்பதற்கு அறிவுறுத்தப்படுகிறார்கள்.
பின்னர், பொதுமக்களைத் தேடிச் சென்று வாங்கிய லஞ்சப் பணத்தை அதிகாரிகள் திருப்பிக் கொடுத்து விடுகிறார்கள்.
இதுகுறித்து முதல்வர் சந்திரபாபு நாயுடு சமீபத்தில் கூறியதாவது:
கடந்த சில தினங்களில் இதுவரை 12 பேர், வாங்கியிருந்த லஞ்சப் பணத்தைப் பொதுமக்களுக்குத் திருப்பிக் கொடுத்துள்ளனர். கர்னூல் மாவட்டத்தில், கடந்த சில தினங்களுக்கு முன், வெவ்வேறு காரணங்களுக்காக, 10 பேரிடம் இருந்து வாங்கியிருந்த லஞ்சப் பணத்தை ஊராட்சி செயலர் ஒருவர் திருப்பிக் கொடுத்தார். இதேபோன்று கடப்பா, கிருஷ்ணா மாவட்டங்களில் பொதுமக்களிடம் இருந்து லஞ்சம் வாங்கிய இடைத்தரகர்கள், அந்தப் பணத்தைத் திருப்பிக் கொடுத்துள்ளனர்.
சில நேரங்களில், குறிப்பிட்ட ஒரு அதிகாரிக்கு களங்கம் ஏற்படுத்தும் வகையில், அவர் மீது லஞ்சப் புகார் வருகிறது. இதுபோன்ற சமயங்களில் முறையான விசாரணை நடத்திய பிறகே நடவடிக்கை எடுப்போம் என்று சந்திரபாபு நாயுடு கூறினார். இதனிடையே, லஞ்சத்தை ஒழிப்பதற்காக, தொடங்கப்பட்டுள்ள புதிய திட்டம் குறித்து அரசின் தகவல் தொடர்புத் துறை ஆலோசகர் பி.பிரபாகர் கூறியதாவது:
அரசின் "1100 அழைப்பு மைய சேவைக்கு மக்களிடையே நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. சமூகத்தைத் தூய்மையாக்க இதுவொரு நல்ல முயற்சியாகும். பீதியடைந்துள்ள அரசு அதிகாரிகள், பொதுமக்களிடம் இருந்து லஞ்சமாகப் பெற்ற பணத்தைத் திருப்பிக் கொடுத்து வருகிறார்கள் என்றார் அவர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com