7 ஆண்டுகளுக்குப் பிறகு மனிதர்கள் விண்ணுக்கு அனுப்பப்படுவர்: இஸ்ரோ தலைவர் ஏ.எஸ்.கிரண்குமார்

ஏழு ஆண்டுகளுக்குப் பிறகு, மனிதர்களை இஸ்ரோ விண்ணுக்கு அனுப்பும் என்று அதன் தலைவர் ஏ.எஸ்.கிரண்குமார் கூறினார்.
ஜிசாட் -19 செயற்கைக்கோள் மாதிரியுடன் இஸ்ரோ தலைவர் கிரண்குமாருடன் மகிழ்ச்சியைப் பரிமாறிக்கொள்ளும் விஞ்ஞானிகள்.
ஜிசாட் -19 செயற்கைக்கோள் மாதிரியுடன் இஸ்ரோ தலைவர் கிரண்குமாருடன் மகிழ்ச்சியைப் பரிமாறிக்கொள்ளும் விஞ்ஞானிகள்.

ஏழு ஆண்டுகளுக்குப் பிறகு, மனிதர்களை இஸ்ரோ விண்ணுக்கு அனுப்பும் என்று அதன் தலைவர் ஏ.எஸ்.கிரண்குமார் கூறினார்.
ஸ்ரீ ஹரிகோட்டா, சதீஷ் தவண் விண்வெளி ஆய்வு மையத்தில் இருந்து ஜிஎஸ்எல்வி மார்க் 3 டி1 ராக்கெட் திங்கள்கிழமை மாலை வெற்றிகரமாக விண்ணில் ஏவப்பட்டது.
இதையடுத்து நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில், இஸ்ரோ தலைவர் கிரண்குமார் கூறியதாவது: ஜிஎஸ்எல்வி மார்க் 3 டி1 ராக்கெட் ரூ. 300 கோடி செலவில், 15 ஆண்டுகளாக உருவாக்கப்பட்டது. இந்தத் தொழில்நுட்பத்தின் மூலம், எதிர்காலத்தில் இந்திய விண்வெளி நிபுணர்களை விண்ணிற்கு அழைத்துச் செல்ல முடியும்.
இந்தத் திட்டத்துக்காக மத்திய அரசிடமிருந்து ரூ.12,500 கோடியை கேட்கத் திட்டமிட்டுள்ளோம். மத்திய அரசு இதற்கு ஒப்புதல் அளித்தால், 7 ஆண்டுகள் கழித்து இந்திய விண்வெளி வீரர்களை இஸ்ரோ விண்ணிற்கு அனுப்பும்.
கிரையோஜெனிக் எஞ்ஜின் தொழில்நுட்பம் மிகவும் சிக்கல்கள் நிறைந்தது. இதன் காரணமாக ராக்கெட் ஏவப்படுவதற்கு முன் 200 முறை பலகட்ட சோதனைகளை விஞ்ஞானிகள் மேற்கொள்கின்றனர்.
ஜிஎஸ்எல்வி மார்க் 3 ராக்கெட் தொழில்நுட்பம் ஒரு தொடக்கமே. இந்தத் தொழில்நுட்பம் வளர வளர மிக அதிக எடை கொண்ட செயற்கைக்கோளை நம்மால் அனுப்ப முடியும். வரும் 28 -ஆம் தேதி (ஜூன் 28) ஏரியன் ராக்கெட் மூலம், பிரஞ்ச் கயானாவில் இருந்து 3,425 கிலோ எடை கொண்ட ஜிசாட் -18 செயற்கைக்கோள் விண்ணுக்கு அனுப்பப்படும். அடுத்த 10 ஆண்டுகளில் ஜிஎஸ்எல்வி மார்க் 3 ராக்கெட் உலக அளவில் முக்கிய இடத்தைப் பிடிக்கும். வெளிநாடுகளில் உருவாக்கப்படும் அதிக எடைக்கொண்ட செயற்கைக்கோள்களை அனுப்ப இஸ்ரோவை அணுகுவர். அடுத்த 5 ஆண்டுகளில் 70 செயற்கைக்கோள்களை விண்ணில் செலுத்த இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
ராக்கெட் ஏவுவதற்கான செலவைக் குறைக்க வடிவம், தொழில்நுட்ப மாற்றம், எடை குறைப்பு உள்ளிட்ட முயற்சிகளை இஸ்ரோ மேற்கொண்டு வருகிறது. குறிப்பாக, பூமியைக் கண்காணிக்கும் செயற்கைக்கோள்களின் எடையைக் குறைப்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. ஆதித்யா மற்றும் சந்திரயான் -2 செயற்கைக்கோள்களை தயாரிக்கும் பணி மும்முரமாக நடைபெற்று வருகிறது என்றார் கிரண்குமார்.

இஸ்ரோவின் பாகுபலி- மார்க் 3!
அதிக எடை கொண்ட செயற்கைக்கோள்களை தாங்கிச் செல்லும் மிக பலமான ராக்கெட்டான ஜிஎஸ்எல்வி மார்க் 3 ராக்கெட்டை இஸ்ரோவின் பாகுபலி என விஞ்ஞானிகள் செல்லமாக அழைக்கின்றனர்.
இஸ்ரோவின் முதல் ராக்கெட்டான எஸ்எல்வி - 3 உயரம் 22.7 மீட்டர், 40 கிலோ எடுத்துச் செல்லும் திறன் கொண்டதாக இருந்தது. இதற்கு அடுத்து ஏஎஸ்எல்வி ராக்கெட் 23.5 மீட்டர் உயரமும் 150 கிலோ எடை கொண்ட செயற்கைக்கோள்களை எடுத்துச் சென்றது.
அதன் பின், இஸ்ரோ தனது முயற்சியில் ஒரே பாய்ச்சலாக பிஎஸ்எல்வி ராக்கெட்டுகளைத் தயாரித்தது. அவை 44 மீட்டர் உயரமும், 1860 கிலோ எடை கொண்ட செயற்கைக்கோள்களை எடுத்துச் செல்லும் திறனுடன், பல்வேறு சாதனைகளைப் படைத்தது.
இதற்கடுத்து ஜிஎஸ்எல்வி மார்க் 2 ராக்கெட்டுகளைத் தயாரித்தது. இது இஸ்ரோவின் தயாரிப்பிலேயே 49 மீட்டர் உயரம் கொண்டதாக வடிவமைக்கப்பட்டது.
2,200 கிலோ எடை கொண்ட செயற்கைக்கோளை கொண்டு செல்லும் வகையில் நவீனப்படுத்தப்பட்டது. இப்போது ஜிஎஸ்எல்வி மார்க் 3 ராக்கெட்டை வடிவமைத்து வெற்றிகரமாக விண்ணில் செலுத்தியுள்ளது. இது மார்க் 2 ராக்கெட்டைவிட உயரத்தில் குறைவு அதாவது இதன் உயரம் 43.43 மீட்டர்தான். ஆனால், 4 ஆயிரம் கிலோ வரை எடைகொண்ட செயற்கைக்கோளை விண்ணில் நிலை நிறுத்தும் திறனைப் பெற்றுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com