ம.பி.துப்பாக்கி சூட்டில் உயிரிழந்த விவசாயிகள் குடும்பத்திற்கு ரூ.1 கோடி நிதியுதவி அறிவிப்பு

மத்தியப் பிரதேசத்தில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி விவசாயிகள் நடத்தி வரும் போராட்டத்தில் செவ்வாய்க்கிழமை வன்முறை
மத்தியப் பிரதேச மாநிலம், மன்த்செளர் மாவட்டத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற விவசாயிகள் போராட்டத்தின்போது நிகழ்ந்த வன்முறையால் பாதிக்கப்பட்ட பகுதி.
மத்தியப் பிரதேச மாநிலம், மன்த்செளர் மாவட்டத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற விவசாயிகள் போராட்டத்தின்போது நிகழ்ந்த வன்முறையால் பாதிக்கப்பட்ட பகுதி.

போபால்: மத்தியப் பிரதேசத்தில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி விவசாயிகள் நடத்தி வரும் போராட்டத்தில் நேற்று செவ்வாய்க்கிழமை வன்முறை வெடித்தது. இதில் 5 பேர் உயிரிழந்தனர். பலருக்கு பலத்த காயம் ஏற்பட்டது. துப்பாக்கி சூட்டில் உயிரிழந்த விவசாயிகள் குடும்பத்திற்கு ஒரு கோடி ரூபாய் நிதியுதவி வழங்கப்படும் என அரசு அறிவித்துள்ளது.

விளைபொருள்களுக்கு குறைந்தபட்ச ஆதார விலையை நிர்ணயித்து வழங்கக் கோரி மத்தியப் பிரதேச விவசாயிகள் கடந்த 1-ஆம் தேதி முதல் மாநிலத்தின் பல்வேறு இடங்களில் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

அவர்களது பிரச்னைகளுக்குத் தீர்வு காணும் வகையில் அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டு வருவதாக மாநில முதல்வர் சிவராஜ் சிங் செளஹான் தெரிவித்திருந்தார். இருப்பினும், அரசு அதிகாரிகளுடன் நடைபெற்ற பேச்சுவார்த்தையில் உடன்பாடு எட்டப்படாததால் விவசாயிகள் போராட்டம் நீடித்து வந்தது.

இந்நிலையில், மன்த்செளர் மாவட்டத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற போராட்டத்தின்போது விவசாயிகளுக்கும், போலீஸாருக்கும் இடையே மோதல் ஏற்பட்டதாகத் தெரிகிறது. பிறகு அது வன்முறையாக வெடித்தது.

இதன் தொடர்ச்சியாக வாகனங்கள், கடைகளுக்கு போராட்டக்காரர்கள் தீ வைத்ததாகக் கூறப்படுகிறது. நிலைமையைக் கட்டுப்படுத்த கூடுதல் எண்ணிக்கையில் போலீஸார் வரவழைக்கப்பட்டனர்.

சில மணி நேரங்கள் நீடித்த இச்சம்பவத்தால் அந்தப் பகுதியே கலவரபூமியாகக் காட்சியளித்தது. இதில் 5 பேர் பலியானதாக முதல்கட்டத் தகவல்கள் தெரிவிக்கின்றன. மேலும், சிலர் காயமடைந்ததாகத் தெரிகிறது.

இதையடுத்து, வன்முறை நிகழ்ந்த இடங்களில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. மாவட்டத்தின் பிற பகுதிகளில் 144 தடை உத்தரவு அமல்படுத்தப்பட்டது.

உயிரிழந்த விவசாயிகள் குடும்பத்திற்கு ரூ.10 லட்சமும், காயம் அடைந்தவர்களுக்கு தலா ஒரு லட்சமும் உதவி தொகை வழங்கப்படும் என அரசு ஏற்கனவே அறித்தது.

இந்நிலையில், இரண்டாவது முறையாக நிதியுதவியை அதிகரித்து மாநில அரசு உத்தரவிட்டுள்ளது. இதுகுறித்து அம்மாநில முதல்வர் சிவராஜ் சிங் சவுகான், துப்பாக்கி சூட்டில் உயிரிழந்த விவசாயிகள் குடும்பத்திற்கு ஒரு கோடி ரூபாயும், காயமடைந்தவர்களுக்கு ரூ.5 லட்சமும் நிதியுதவி வழங்கப்படும் எனவும், அவர்களுக்கு இலவச மருத்துவ சிகிச்சை அளிக்கப்படும் என தெரிவித்துள்ளார்.

மேலம், விவசாயிகள் அமைதியாக இருக்கவேண்டும் என கோரிக்கை விடுத்த சிவராஜ் சிங் சவுகான், இப்போதைய சூழ்நிலையை சிலர் மோசமாக்க முயற்சி செய்கிறார்கள் என குற்றம் சாட்டியுள்ளார்.

இந்நிலையில், சுட்டுக் கொல்லப்பட்ட விவசாயிகளின் குடும்பத்திற்கு ஆறுதல் கூறுவதற்காக காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தி மத்திய பிரதேசம் செல்ல உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com