விவசாயிகள் பிரச்னை: மகாராஷ்டிர அமைச்சரவைக் கூட்டத்தை புறக்கணித்த சிவசேனை அமைச்சர்கள்

மகாராஷ்டிர மாநிலத்தில், விவசாயிகளின் பிரச்னை குறித்து விவாதிப்பதற்காக புதன்கிழமை நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தை கூட்டணியில் இடம்பெற்றுள்ள சிவசேனைக் கட்சியின் அமைச்சர்கள் புறக்கணித்து விட்டனர்.

மகாராஷ்டிர மாநிலத்தில், விவசாயிகளின் பிரச்னை குறித்து விவாதிப்பதற்காக புதன்கிழமை நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தை கூட்டணியில் இடம்பெற்றுள்ள சிவசேனைக் கட்சியின் அமைச்சர்கள் புறக்கணித்து விட்டனர்.
ஆனால், அந்தக் கூட்டத்தை சிவசேனை அமைச்சர்கள் புறக்கணிக்கவில்லை என்று பாஜகவைச் சேர்ந்த சில அமைச்சர்கள் கூறினார்கள்.
இதுதொடர்பாக, மாநில நிதியமைச்சர் சுதிர் முங்கண்டிவார் கூறுகையில், ""அமைச்சரவைக் கூட்டத்தில் பங்கேற்காமல் இருப்பதற்கு சிவசேனை அமைச்சர்கள் அனுமதி கோரினர்; அவர்களுக்கு முதல்வர் தேவேந்திர பட்னவீஸ் அனுமதி கொடுத்துவிட்டார்'' என்றார்.
இதேபோல் பாஜகவைச் சேர்ந்த மற்றொரு அமைச்சரான சந்திரகாந்த் பாட்டீல் கூறியதாவது:
சிவசேனை அமைச்சர்கள், அமைச்சரவைக் கூட்டத்தைப் புறக்கணித்து விட்டதாகக் கூறுவது தவறு.
சிவசேனைத் தலைவர் உத்தவ் தாக்கரே ஊரில் இல்லாததால், அவருடைய அனுமதியின்றி கூட்டத்தில் பங்கேற்கப் போவதில்லை என்று அவர்கள் கூறிவிட்டனர் என்றார் அவர்.
அமைச்சரவைக் கூட்டத்துக்கு முன்னதாக, சிவசேனை அமைச்சர்கள் அனைவரும், அக்கட்சியைச் சேர்ந்தவரும், தொழில் துறை அமைச்சருமான சுபாஷ் தேசாயின் அலுவலக இல்லத்தில் ஆலோசனை நடத்தினர்.
உண்மையான விவசாயிகள் யார்?: இதனிடையே, விவசாயிகளின் போராட்டம் தொடர்பாக, உண்மையான விவசாயிகளிடம் மட்டுமே பேச்சுவார்த்தை நடத்தத் தயாராக இருப்பதாக மாநில அரசு கூறியிருப்பதை சிவசேனைக் கட்சித் தலைவர் உத்தவ் தாக்கரே விமர்சனம் செய்துள்ளார்.
அப்படியானால், உண்மையான விவசாயிகள் யார்? அவர்கள் உங்களது அமைச்சரவையில் இருக்கிறார்களா? என்று சிவசேனைக் கட்சியின் நாளிதழான "சாம்னா'வில் எழுதியுள்ள தலையங்கக் கட்டுரையில் அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.
கடந்த ஆண்டு நல்ல விளைச்சல் கிடைத்தபோதிலும், மத்திய அரசின் ரூபாய் நோட்டு வாபஸ் நடவடிக்கையால், விளைபொருள்களுக்கு போதிய விலை கிடைக்கவில்லை; இதனால், விவசாயிகளுக்கு மிகப்பெரிய அளவில் பாதிப்பு ஏற்பட்டுவிட்டது என்றும் அந்தத் தலையங்கத்தில் அவர் குறிப்பிட்டுள்ளார்.
எம்எல்ஏ வீட்டுக்குப் பூட்டு: இதனிடையே, போராட்டத்தின் ஒரு பகுதியாக, பீட் மாவட்டத்தில் பாஜக எம்எல்ஏ ஆர்.டி.தேஷ்முக்கை அவரது வீட்டுக்குள் வைத்து விவசாயிகள் பூட்டு போட்டனர்.
அதையடுத்து, ஆளும் கட்சி எம்எல்ஏக்களின் இல்லத்துக்கு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டது.
விவசாயக் கடன் ரத்து எப்போது?: முன்னதாக, ""வரும் அக்டோபர் 31-ஆம் தேதிக்குள் விவசாயிகள் கடன்கள் ரத்து செய்யப்படும்; அதன்படி, 5 ஏக்கர் வரை நிலம் வைத்துள்ள 1.07 கோடி விவசாயிகள் பயன்பெறுவர்'' என்று மகாராஷ்டிர முதல்வர் தேவேந்திர பட்னவீஸ் செவ்வாய்க்கிழமை கூறினார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com