ஐ.டி. நிறுவனங்களில் ஆள் குறைப்பு: பெங்களூரில் வீடுகளின் வாடகை சரிவு

தகவல் தொழில்நுட்பத் துறையில் ஆள்குறைப்பு நடவடிக்கையால் பெங்களூரில் வீடுகளின் வாடகை 10 சதவீதம் சரிந்துள்ளது.
ஐ.டி. நிறுவனங்களில் ஆள் குறைப்பு: பெங்களூரில் வீடுகளின் வாடகை சரிவு

தகவல் தொழில்நுட்பத் துறையில் ஆள்குறைப்பு நடவடிக்கையால் பெங்களூரில் வீடுகளின் வாடகை 10 சதவீதம் சரிந்துள்ளது.
பூங்கா நகரம் என்று புகழ் பெற்றிருந்த பெங்களூரு, பன்னாட்டு தகவல் தொழில்நுட்ப நிறுவனங்களின் பெருக்கத்தால் இந்தியாவின் சிலிகான் பள்ளத்தாக்கு என்று உலக அளவில் பெயர் பெற்றது.
இந்த நிறுவனங்களில் வேலை செய்வதற்கு நாட்டின் பல்வேறு பகுதிகளில் மட்டுமல்லாது, வெளிநாடுகளில் இருந்தும் லட்சக்கணக்கானோர் பெங்களூரில் குடியேறி வந்தனர். இதன்காரணமாக, பெங்களூரில் வீடுகள், கட்டடங்கள் கட்டும்பணி அதிகரித்தது. மேலும், ரியல் எஸ்டேட் மற்றும் கட்டுமானத் தொழில் வேகமாக வளர்ச்சி அடைந்தது.
தகவல் தொழில்நுட்ப நிறுவனத்தில் பணிபுரிபவர்கள் தாராளமாக வாடகைகளை அளித்து குடியிருந்து வந்தனர். இதன்காரணமாக, பெங்களூரின் புறநகர் வேகமாக வளர்ச்சி அடைந்து, நகரின் பரப்பு விறுவிறுவென விரிவானது.
இந்த நிலையில், உலக பொருளாதார மந்தநிலை காரணமாக தகவல் தொழில்நுட்ப நிறுவனங்கள் கடும் சிக்கலில் உள்ளன. செலவைக் குறைத்து, நஷ்டத்தைத் தவிர்க்க முடிவு செய்துள்ள தகவல் தொழில்நுட்ப நிறுவனங்கள், ஆள் குறைப்பில் ஈடுபட்டு வருகின்றன.
பெங்களூரில் உள்ள தகவல் தொழில்நுட்ப நிறுவனங்களில் பணியாற்றுவோரில் சுமார் 3 லட்சம் பேர் ஜூன் 30-ஆம் தேதிக்குள் வேலை இழக்கலாம் என்று தெரிய வந்துள்ளது. இதன் தாக்கம் ரியல் எஸ்டேட் மட்டுமல்லாது வாடகை சந்தையிலும் உணரத் தொடங்கியுள்ளது.
ஆள் குறைப்பு நடவடிக்கையால் பெங்களூரில் வீடுகளின் வாடகை சராசரியாக 10 சதவீதம் குறைந்துள்ளது. மாரத்தஹள்ளி மற்றும் ஒயிட்பீல்டு போன்ற இடங்களில் இரு படுக்கை அறை, வரவேற்பு அறை, சமையலறை கொண்ட வீடு ரூ.30 ஆயிரம் முதல் ரூ.32 ஆயிரம் வாடகைக்கு விடப்பட்டு வந்தது. தற்போது இது ரூ.26-28 ஆயிரமாக சரிந்துள்ளது.
இதுகுறித்து ரியல் எஸ்டேட் அதிபரி அமித்குமார் குப்தா கூறுகையில், தகவல் தொழில்நுட்ப நிறுவனங்களில் ஆள்குறைப்பு நடவடிக்கையால், வாடகைக்கு வீடு தேடுவோரின் எண்ணிக்கை கணிசமாக குறைந்துவிட்டது.
தகவல் தொழில்நுட்ப நிறுவனங்களில் ஆள் குறைப்பு மட்டுமல்லாது, பெங்களூருக்கு குடியேறுவோரின் எண்ணிக்கையிலும் சரிவு ஏற்பட்டுள்ளதால் வாடகை வீடுகள் காலியாக உள்ளன. வாடகைத் தொகையும் வீழ்ச்சியடைந்துள்ளது என்றார்.
இதுகுறித்து அஸ்செட்ஸ் பிராபர்ட்டி குழுமத்தின் இயக்குநர் அக்ஷய் திவானி கூறுகையில், நடுத்தர விலை கொண்ட வீடுகளை வாங்கும் தகவல் தொழில்நுட்ப ஊழியர்கள் வேலை இழந்து வருவதால், ரியல் எஸ்டேட் தொழில் சரிவை நோக்கி பயணித்து வருகிறது.
தற்போதைக்கு நிலைமை மோசமடையவில்லை என்றாலும், ஆள் குறைப்பு நடவடிக்கை தொடர்ந்தால் எங்கள் நிலைமை மிகவும் மோசமான நிலையை அடையும் என்பதில் சந்தேகமில்லை.
இந்த பிரச்னையைச் சமாளிக்க உயர் மதிப்புள்ள வீடுகள் விற்பனையில் கவனம் செலுத்துவது தவிர, நடுத்தர விலை கொண்ட வீடுகளுக்கு நல்ல விலைவை நிர்ணயித்து விற்பதுதான். இதுவும் பலனளிக்காவிட்டால் வீடுகளின் எண்ணிக்கை பெருகி, தொழில் நசிந்துவிடும். அதிகப்படியான தள்ளுபடிகளைத் தந்து வீடுகளை விற்க நேர்ந்தால் எங்களின் லாபம் குறையும் என்றார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com