ஜூலை 17-இல் குடியரசுத் தலைவர் தேர்தல்: தேர்தல் ஆணையம் அறிவிப்பு

நாட்டின் 15-ஆவது குடியரசுத் தலைவர் பதவிக்கான தேர்தல் வரும் ஜூலை 17-ஆம் தேதி நடைபெறும் என்று இந்திய தலைமைத் தேர்தல் ஆணையம் புதன்கிழமை அறிவித்தது.
ஜூலை 17-இல் குடியரசுத் தலைவர் தேர்தல்: தேர்தல் ஆணையம் அறிவிப்பு

நாட்டின் 15-ஆவது குடியரசுத் தலைவர் பதவிக்கான தேர்தல் வரும் ஜூலை 17-ஆம் தேதி நடைபெறும் என்று இந்திய தலைமைத் தேர்தல் ஆணையம் புதன்கிழமை அறிவித்தது.
தற்போதைய குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜியின் பதவிக் காலம் வரும் ஜூலை 24-ஆம் தேதியுடன் முடிவடைகிறது. இதையொட்டி, புதிய குடியரசுத் தலைவர் பதவிக்கான தேர்தலை நடத்தும் முன்னேற்பாடுகளை கடந்த ஒரு மாதத்துக்கு முன்பாகவே தேர்தல் ஆணையம் தொடங்கியது. இதையடுத்து, கடந்த வாரம் தில்லியில் தேர்தல் ஆணைய அலுவலகத்தில் மத்திய சட்டம், உள்துறை, பாதுகாப்பு, சுகாதாரம், தொலைத் தொடர்பு உள்ளிட்ட அரசுத் துறைகளின் செயலர்கள், மாநிலத் தலைமைத் தேர்தல் அதிகாரிகள் உள்ளிட்டோருடன் தலைமைத் தேர்தல் ஆணையர் நசீம் ஜைதி ஆலோசனை நடத்தினார். இதைத் தொடர்ந்து, குடியரசுத் தலைவர் தேர்தல் தேதியை ஆணையம் முறைப்படி புதன்கிழமை மாலையில் அறிவித்தது.
15-ஆவது தேர்தல்: இதையொட்டி, தில்லியில் செய்தியாளர்களிடம் தலைமைத் தேர்தல் ஆணையர் நசீம் ஜைதி புதன்கிழமை கூறியது: நாட்டின் 15-ஆவது குடியரசுத் தலைவர் பதவிக்கான தேர்தல் நடைபெறும் தேதியை தேர்தல் ஆணையம் இறுதிப்படுத்தியுள்ளது. இது தொடர்பாக புதன்கிழமை தேர்தல் ஆணையர்களுடன் நடத்திய ஆலோசனையின் முடிவில் தேர்தல் நடத்தும் அட்டவணையை வெளியிட ஆணையம் முடிவு செய்தது.
இதன்படி, குடியரசுத் தலைவர் தேர்தலுக்கான அறிவிக்கை முறைப்படி வரும் 14-ஆம் தேதி வெளியிடப்படும். இந்தத் தேர்தலில் போட்டியிடுவதற்கான வேட்பு மனு தாக்கல் செய்ய ஜூன் 28 கடைசி நாள். வேட்பு மனுக்கள் பரிசீலனை ஜூன் 29-ஆம் தேதியும், மனுக்களை திரும்பப் பெற கடைசி நாள் ஜூலை 1-ஆம் தேதியும் ஆகும். போட்டி இருந்தால் குடியரசுத் தலைவர் தேர்தல் ஜூலை 17-ஆம் தேதி நடத்தப்பட்டு அதில் பதிவான வாக்குகள் ஜூலை 20-ஆம் தேதி எண்ணப்படும் என்றார் நசீம் ஜைதி.
தேர்தல் அதிகாரி நியமனம்: இந்தத் தேர்தலை நடத்தும் பொறுப்பு, மக்களவைச் செயலக செகரட்டரி ஜெனரல் ஷும்ஷெர் கே. ஷெரீஃப் வசம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. 2012-இல் குடியரசுத் தலைவர் தேர்தல் நடைபெற்ற போது, தேர்தலை நடத்தும் பொறுப்பு மாநிலங்களவைச் செயலக செகரட்டரி ஜெனரல் வசம் வழங்கப்பட்டது.
குடியரசுத் தலைவர் தேர்தலில் வாக்களிக்க மக்களவை, மாநிலங்களவை ஆகியவற்றின் அனைத்து உறுப்பினர்கள், மாநில சட்டப்பேரவைகளில் உள்ள உறுப்பினர்கள் தகுதி பெறுகின்றனர். இதில், நாடாளுமன்ற இரு அவை உறுப்பினர்கள் தில்லியில் உள்ள நாடாளுமன்ற கட்டட வளாகத்தில் உள்ள அறையில் அமைக்கப்படும் வாக்குச்சாவடியில் வாக்களிக்க வேண்டும். தவிர்க்க முடியாத காரணத்தால் தில்லிக்கு வர இயலாத எம்.பி.க்கள், தேர்தல் அதிகாரியிடம் வாக்குப்பதிவுக்கு 10 நாள்கள் முன்னதாகவே அனுமதி பெற்று அவர்கள் சார்ந்த மாநிலத்தின் சட்டப்பேரவை வாக்குச்சாவடியில் வாக்குரிமையைச் செலுத்தலாம்.
மாநிலங்களவை செயலக செகரட்டரி ஜெனரலுக்கு உதவியாக மாநிலங்கள், தில்லி மற்றும் புதுச்சேரி ஆகிய யூனியன் பிரதேசங்களில் உள்ள சட்டப்பேரவைகளில் வாக்குப்பதிவை நடத்துவதற்காக உதவித் தேர்தல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர்.
மனு தாக்கல் எப்படி? குடியரசுத் தலைவர் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளரின் வேட்பு மனு தில்லியில் உள்ள தேர்தல் அதிகாரியிடம் அளிக்கப்பட வேண்டும். இந்த வேட்பு மனுவை வேட்பாளர் நேரடியாகவோ அல்லது அவரை முன்மொழியும் அல்லது வழிமொழியும் நபர்கள் சார்பிலோ வேட்பு மனு தாக்கல் செய்ய அறிவிக்கப்பட்டுள்ள கடைசி நாள் வரை விடுமுறை தினம் நீங்கலாக, தினமும் காலை 11 முதல் பிற்பகல் 3 மணி வரை தாக்கல் செய்யலாம். தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர் தமது கையெழுத்திட்ட வேட்பு மனுவுடன், அவரை முன்மொழிந்து 50 நபர்களும், வழிமொழிந்து 50 நபர்களும் மனு தாக்கல் செய்தால் மட்டுமே அவரது வேட்பு மனு பரிசீலனைக்குத் தகுதி பெறும்.
ரூ.15 ஆயிரம் டெபாசிட்: இந்தத் தேர்தலில் போட்டியிடுவதற்கு ரூ.15 ஆயிரம் டெபாசிட் தொகையாகும். இதை பாரத ரிசர்வ் வங்கி அல்லது அரசுக் கருவூலத்தில் செலுத்தி அதற்கான ரசீதுடன் வேட்பு மனுவை தாக்கல் செய்ய வேண்டும். இந்தத் தேர்தலில் யாருக்கு எவ்வளவு வாக்கு மதிப்பு; எம்.பி.க்கள், எம்எல்ஏக்கள் யார்? என்பன போன்ற விவரங்கள் அடங்கிய புத்தகம் தலைமைத் தேர்தல் ஆணையத்தில் உள்ள கவுன்டரில் ரூ. 300-க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஆணையத்தின் இணையதளத்திலும் இந்த விவரங்களை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.
தமிழகத்தில் குடியரசுத் தலைவர் தேர்தலை நடத்தும் உதவி தேர்தல் அதிகாரிகளாக பேரவை கூடுதல் செயலர் கே. பூபதி, அவருக்கு அடுத்த நிலையில் இணைச் செயலர் பி.சுப்ரமணியம் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.
புதுச்சேரியில் பேரவைச் செயலர் ஏ.வின்சென்ட் ராயர், பேரவை விவாதங்கள் பிரிவு ஆசிரியர் எஸ்.புவனேஸ்வரி ஆகியோர் உதவி தேர்தல் அதிகாரிகளாக நியமிக்கப்பட்டுள்ளனர்.

ஜூலை 20-இல் வாக்கு எண்ணிக்கை

  • தேர்தல் அறிவிக்கை நாள் ஜூன் 14
  • வேட்பு மனு தாக்கல் கடைசி நாள் ஜூன் 28
  • வேட்பு மனு பரிசீலனை ஜூன் 29
  • மனுவை திரும்பப் பெற கடைசி நாள் ஜூலை 1
  • தேர்தல் நாள் ஜூலை 17
  • வாக்கு எண்ணிக்கை ஜூலை 20

ரகசிய வாக்குப்பதிவு

குடியரசுத் தலைவர் தேர்தலில் வாக்குச்சீட்டு முறையுடன் கூடிய ரகசிய வாக்குப்பதிவு நடைபெறும் என்று தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. தேர்தல் நாளில் வாக்குச்சீட்டை திறந்து யாருக்கு வாக்களித்தோம் என்ற விவரத்தை எம்.பி, எம்.எல்.ஏ.க்கள் காண்பிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. வாக்குச்சீட்டில் வேட்பாளருக்கு ஆதரவான குறியீட்டை தேர்தல் ஆணையம் வழங்கும் பேனா மூலமே மேற்கொள்ள வேண்டும்.

கொறடா உத்தரவு கிடையாது

இந்தத் தேர்தலில் எம்.பி., எம்.எல்.ஏ.க்களுக்கு அவர்கள் சார்ந்த கட்சிகள் "கொறடா உத்தரவு' பிறப்பிக்க முடியாது என்று தேர்தல் ஆணையம் தெளிவுபடுத்தியுள்ளது. ஒரு வேளை தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர் தமக்கு சாதகமாக வாக்களிக்க லஞ்சம் வழங்கினாலோ அல்லது வாக்காளர்களை ஈர்க்கும் முயற்சியில் ஈடுபட்டு அது நிரூபிக்கப்பட்டாலோ தேர்தலை ரத்து செய்ய ஆணையத்துக்கு அதிகாரம் உண்டு என்று தேர்தல் ஆணையம் கூறியுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com