நாட்டில் போதிய அளவுக்கு வேலைவாய்ப்புகள் உருவாக்கப்படவில்லை: பிரணாப் முகர்ஜி

நாட்டில் போதிய அளவுக்கு புதிய வேலைவாய்ப்புகள் உருவாக்கப்படவில்லை என்று குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி தெரிவித்தார்.
நாட்டில் போதிய அளவுக்கு வேலைவாய்ப்புகள் உருவாக்கப்படவில்லை: பிரணாப் முகர்ஜி

நாட்டில் போதிய அளவுக்கு புதிய வேலைவாய்ப்புகள் உருவாக்கப்படவில்லை என்று குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி தெரிவித்தார்.
இதுதொடர்பாக தில்லியில் புதன்கிழமை நடைபெற்ற அனைத்து இந்திய மேலாண்மை கூட்டமைப்பின் (ஏஐஎம்ஏ) 75ஆம் ஆண்டு கொண்டாட்ட நிகழ்ச்சியில், அவர் பேசியதாவது:
ஆண்டுதோறும் 1 கோடி பேர் புதிதாக வேலைவாய்ப்புத் தேடி வருகின்றனர். ஆனால், அவர்களுக்கான போதிய புதிய வேலைவாய்ப்புகள் சந்தையில் புதிதாக உருவாக்கப்படவில்லை. புதிதாக தொடங்கப்படும் நிறுவனங்களை சார்ந்தே, இப்பிரச்னைக்கான தீர்வு அமைந்துள்ளது. ஆதலால், சிறிய அளவிலான தொழில்கள் தொடங்குவதற்கு நாம் முக்கியத்துவம் கொடுக்க வேண்டும்.
இந்தியாவில் இளம்தலைமுறையினரும், பணியாற்றும் தொழிலாளர்களும் மிகவும் அதிக எண்ணிக்கையில் உள்ளனர். இது நமது நாட்டுக்கு சில காலம் கூடுதல் சாதகமாக இருக்கும். இளம்தலைமுறையினர், பணியாற்றும் தொழிலாளர் சக்திகளை நாம் ஆக்கப்பூர்வமான பணியில் ஈடுபடுத்த வேண்டும். இல்லையெனில், இவர்கள் மூலம் நமது நாடு உண்மையான பலன் அடைய முடியாது.
நாட்டில் நிர்வாக மேலாண்மை, தொழில்முனைவோர் திறன்களை ஊக்குவிக்க வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது. இதற்காக தொழில்முனைவோர்க்கு சிறப்பான முறையில் செயல்படுவது தொடர்பான பயிற்சியை அளிக்க மேலாண்மை தொடர்பான கல்வியை கொண்டு வர வேண்டிய தேவை ஏற்பட்டுள்ளது.
இளம் தலைமுறையினர் வேலைவாய்ப்புகளை தேடிச் செல்வதை தவிர்த்து, அதிக அளவில் தொழில்களை தொடங்க வேண்டும்; அதிக வேலைவாய்ப்புகளை உருவாக்க வேண்டும் என்றே நாடு எதிர்பார்க்கிறது.
உலகம் வேகமாக மாறி வருகிறது. தொழில்நுட்ப ரீதியிலான மாற்றங்களால் இடையூறுகள் ஏற்படக்கூடும். அப்படி ஏற்படும் இடையூறுகளை சமாளிப்போரே சிறந்த நிர்வாகிகள் ஆவர்.
1900-1950ஆம் ஆண்டுகளில் உலகில் மிகவும் ஏழ்மையான நாடுகளில் இந்தியாவும் ஒன்றாக இருந்தது. ஆனால் தற்போதோ, உலகில் வேகமாக வளர்ச்சியடைந்து வரும் பொருளாதார சக்திகளில் ஒன்றாக இந்தியா திகழ்கிறது என்றார் பிரணாப் முகர்ஜி.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com