மார்க்சிஸ்ட் தலைமையகத்துக்குள் நுழைந்து சீதாராம் யெச்சூரியை தாக்க முயற்சி

தில்லியில் உள்ள மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தலைமையகத்துக்குள் நுழைந்து அக்கட்சியின் பொதுச் செயலாளர் சீதாராம் யெச்சூரியை 2 பேர் தாக்க முயன்றனர்.
மார்க்சிஸ்ட் தலைமையகத்துக்குள் நுழைந்து சீதாராம் யெச்சூரியை தாக்க முயற்சி

தில்லியில் உள்ள மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தலைமையகத்துக்குள் நுழைந்து அக்கட்சியின் பொதுச் செயலாளர் சீதாராம் யெச்சூரியை 2 பேர் தாக்க முயன்றனர். அவர்கள் 2 பேரையும் தில்லி போலீஸார் பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தில்லியில் உள்ள மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தலைமையகத்தின் முதல்தளத்தில், அக்கட்சியின் பொலிட் பீரோ கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவு குறித்து விளக்குவதற்காக செய்தியாளர்கள் சந்திப்புக்கு புதன்கிழமை ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. அதன்படி, சீதாராம் யெச்சூரி செய்தியாளர்களைச் சந்திக்க வந்தார்.
அப்போது 2 பேர், "மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அழிக', "ஹிந்து சேனை வாழ்க' என்று கோஷமிட்டபடி வந்தனர். பின்னர், சீதாராம் யெச்சூரியை அவர்கள் இருவரும் தாக்க முயற்சித்ததாகத் தெரிகிறது. அப்போது அங்கிருந்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர், 2 பேரையும் தடுத்து நிறுத்தியதுடன், சரமாரியாக அடித்து உதைத்தனர். பின்னர் 2 பேரையும் தில்லி போலீஸாரிடம் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் ஒப்படைத்தனர்.
சீதாராம் யெச்சூரியை தாக்க முயற்சித்த 2 பேரும் எந்த அமைப்பைச் சேர்ந்தவர்கள் என்று உறுதியாகத் தெரியவில்லை. அதேநேரத்தில், அவர்கள் 2 பேரும் ஆர்எஸ்எஸ் அமைப்பைச் சேர்ந்தவர்கள் என்றும், செய்தியாளர்கள் போல் வந்து சீதாராம் யெச்சூரியின் செய்தியாளர் சந்திப்பை வெற்றியடையாமல் தடுப்பதே அவர்களின் நோக்கமாக இருந்தது என்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி குற்றம்சாட்டியுள்ளது.
ஆர்எஸ்எஸ் மீது யெச்சூரி குற்றச்சாட்டு: இந்தச் சம்பவம் குறித்து சீதாராம் யெச்சூரி செய்தியாளர்களிடம் பேசியபோது, ஆர்எஸ்எஸ் அமைப்பு மீது குற்றச்சாட்டுகளை தெரிவித்தார். அப்போது அவர் கூறுகையில், "வன்முறை, தீவிரவாதம் இல்லாமல், தனது அரசியல் செல்வாக்கை ஆர்எஸ்எஸ் அமைப்பால் அதிகரிக்க முடியாது. இத்தகைய தந்திரங்களுக்கு இந்திய மக்கள் கடந்த காலத்தில் தகுந்த பதில் அளித்துள்ளனர். அதுபோல் மீண்டும் பதில் அளிப்பார்கள்' என்றார்.
சுட்டுரையில் சீதாராம் யெச்சூரி வெளியிட்ட பதிவில், "ஆர்எஸ்எஸ் ரௌடிகள் மூலம் எங்களை அமைதிப்படுத்த நடக்கும் முயற்சிகளுக்கு அடிபணிய மாட்டோம்; இது இந்தியாவின் உயிரைக் காக்க நடக்கும் போராட்டமாகும். இதில் நாங்கள் வெற்றி பெறுவோம்' என்று குறிப்பிட்டுள்ளார்.
முன்னதாக, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொலிட்பீரோ கூட்டத்தில் கேரள முதல்வர் பினராயி விஜயனும் கலந்து கொண்டிருந்தார். அவருக்கு பசுப் பாதுகாவலர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்திருந்ததால், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொலிட்பீரோ கூட்டத்துக்கு தில்லி போலீஸார் பாதுகாப்பை பலப்படுத்
தியிருந்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com