எதிர்க்கட்சிகள் குழுத் தலைவராகிறார் சோனியா

குடியரசுத் தலைவர் தேர்தலில் எதிர்க்கட்சிகள் சார்பில் பொதுவான வேட்பாளரை முன்னிறுத்துவது குறித்து இன்னும் முடிவு எட்டப்படாத நிலையில்
எதிர்க்கட்சிகள் குழுத் தலைவராகிறார் சோனியா

குடியரசுத் தலைவர் தேர்தலில் எதிர்க்கட்சிகள் சார்பில் பொதுவான வேட்பாளரை முன்னிறுத்துவது குறித்து இன்னும் முடிவு எட்டப்படாத நிலையில், இந்த விவகாரத்தில் அந்தக் கட்சிகளை வழிநடத்தும் தலைவராக அகில இந்திய காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி விரைவில் தேர்வு செய்யப்படவுள்ளார்.
குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜியின் பதவிக் காலம் வரும் ஜூலை 24-ஆம் தேதியுடன் முடிவடைகிறது. இதையடுத்து, புதிய குடியரசுத் தலைவரைத் தேர்வு செய்வதற்கான தேர்தல் வரும் ஜூலை 17-ஆம் தேதி நடத்தப்படும் என்று தேர்தல் ஆணையம் புதன்கிழமை அறிவித்தது. இந்தத் தேர்தலை நடத்தும் பொறுப்பை, மக்களவைச் செயலக செகரட்டரி ஜெனரல் அனூப் மிஸ்ராவின் வசம் தேர்தல் ஆணையம் ஒப்படைத்துள்ளது.
இந்நிலையில், குடியரசுத் தலைவர் தேர்தலில் மத்தியில் ஆளும் பாஜக கூட்டணி அரசு அனைத்து அரசியல் கட்சிகளாலும் ஏற்றுக் கொள்ளக் கூடிய வேட்பாளரை நிறுத்தினால், எதிர்க்கட்சிகள் தரப்பில் யாரையும் நிறுத்தத் தேவையில்லை என்று கடந்த மாதம் நடைபெற்ற எதிர்க்கட்சிகளின் தலைவர்கள் கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டது.
பாஜக திட்டம்: இருப்பினும், குடியரசுத் தலைவர் தேர்தலில் ஆர்எஸ்எஸ் பின்புலம் மிக்க ஒருவரை முன்னிறுத்தும் வாய்ப்பை பாஜக தலைமை தீவிரமாகப் பரிசீலித்து வருகிறது. இந்நிலையில், வேட்பாளரை முன்னிறுத்தும் நடவடிக்கையில் எதிர்க்கட்சிகளை வழிநடத்தும் தலைவராக யார் இருப்பது என்ற குழப்பத்தில் அரசியல் கட்சிகளின் தலைமை இருந்தன.
கடந்த மாதம் நடைபெற்ற எதிர்க்கட்சிகளின் தலைவர்கள் கூட்டத்தின்போது, திரிணமூல் காங்கிரஸ், சமாஜவாதி கட்சி, பகுஜன் சமாஜ் கட்சி, இடதுசாரிக் கட்சிகள், திமுக, ராஷ்ட்ரிய ஜனதா தளம் உள்ளிட்ட 17 கட்சிகளின் தலைவர்கள், தில்லியில் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி இல்லத்தில் கூடி ஆலோசனை நடத்தினர். இந்நிலையில், இந்தக் கட்சிகளின் தலைவர்கள் வெவ்வேறு மாநிலங்களில் இருப்பதால், அவர்களை ஒருங்கிணைப்பது, கூட்டங்களை நடத்துவது போன்றவற்றில் நடைமுறை சிக்கல் எழுந்துள்ளது.
குலாம் யோசனை: இதையடுத்து, எதிர்க்கட்சிகள் குழுவின் தலைவராக சோனியா காந்தியை தேர்வு செய்து அவரது வழிகாட்டுதலின்படி குடியரசுத் தலைவர் தேர்தல் விவகாரத்தை அணுகலாம் என்று காங்கிரஸ் தலைவர்கள் முடிவு செய்தனர்.
இது குறித்து தில்லியில் அண்மையில் நடைபெற்ற காங்கிரஸ் காரியக் கமிட்டி கூட்டத்தில் மாநிலங்களவை எதிர்க்கட்சித் தலைவரும் காங்கிரஸ் மூத்த தலைவருமான குலாம் நபி ஆசாத் முன்வைத்த யோசனையை காங்கிரஸ் தலைவர்கள் ஏற்றுக் கொண்டனர். இதைத் தொடர்ந்து, மற்ற எதிர்க்கட்சிகளை தொடர்பு கொண்டு குலாம் நபி ஆசாத் பேசிய போது, அவரது யோசனையை அனைத்து தலைவர்களும் ஏற்றுக் கொண்டதாக காங்கிரஸ் வட்டாரங்கள் தெரிவித்தன.
இதையடுத்து, சோனியா காந்தியை எதிர்க்கட்சிகள் குழுத் தலைவராக தேர்வு செய்யும் அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. உடல் நலக் குறைவால் வெளியில் நடைபெறும் அரசியல் நிகழ்வுகளில் பங்கேற்பதை சோனியா காந்தி தவிர்த்து வருகிறார். இந்நிலையில், குடியரசுத் தலைவர் வேட்பாளர் தேர்வு விவகாரத்தில் இழுபறி நீடிப்பதால், பிரச்னைக்கு தீர்வு காண்பதற்காக எதிர்க்கட்சிகளின் குழுத் தலைவராக செயல்பட சோனியா ஒப்புக் கொண்டுள்ளதாகத் தெரிகிறது.
ராகுல் நழுவல்: முன்னதாக, அரசியல் கட்சிகளின் தலைவர்களை ஒருங்கிணைக்கும் பொறுப்பை காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தியிடம் ஒப்படைக்கலாம் என்று அக்கட்சியின் உயர்நிலைக் குழுக் கூட்டத்தில் யோசனை தெரிவிக்கப்பட்டது. ஆனால், கோடை விடுமுறைக்காக விரைவில் வெளிநாடு செல்லப் போவதாக ராகுல் தரப்பில் கூறியதால், அதிருப்தியடைந்த தலைவர்கள் பின்னர் குலாம் நபி ஆசாத் யோசனைப்படி சோனியாவை எதிர்க்கட்சிகள் குழுத் தலைவராகத் தேர்வு செய்ய ஏற்றுக் கொண்டதாக காங்கிரஸ் வட்டாரங்கள் தெரிவித்தன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com