குடியரசுத் தலைவர் தேர்தல் பொது வேட்பாளர்: எதிர்க்கட்சி துணைக் குழு விரைவில் ஆலோசனை

குடியரசுத் தலைவர் தேர்தலில் பொது வேட்பாளரை முன்னிறுத்துவது குறித்து முடிவெடுப்பதற்கான எதிர்க்கட்சித் துணைக் குழுவின் கலந்தாலோசனைக் கூட்டம் அடுத்த சில நாள்களில் நடைபெற உள்ளது.

குடியரசுத் தலைவர் தேர்தலில் பொது வேட்பாளரை முன்னிறுத்துவது குறித்து முடிவெடுப்பதற்கான எதிர்க்கட்சித் துணைக் குழுவின் கலந்தாலோசனைக் கூட்டம் அடுத்த சில நாள்களில் நடைபெற உள்ளது.

பொது வேட்பாளராகக் களமிறக்குவதற்குத் தகுதியுடைய தலைவர்கள் எவர்? என்பது குறித்தும் அப்போது ஆலோசிக்கப்பட உள்ளது.
குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜியின் பதவிக் காலம் அடுத்த சில வாரங்களில் நிறைவடைகிறது. இதையடுத்து அதற்கான தேர்தல் ஜூலை 17-ஆம் தேதி நடைபெறும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
இந்த சூழலில் பாஜகவுக்கு எதிராக பொது வேட்பாளர் ஒருவரை களமிறக்க எதிர்க்கட்சிகள் திட்டமிட்டு வருகின்றன. இதற்காக காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி தலைமையில் எதிர்க்கட்சித் தலைவர்கள் கூட்டம் அண்மையில் நடைபெற்றது. இதில், 17 கட்சிகளைச் சேர்ந்த தலைவர்கள் பங்கேற்றனர். அனைத்து கட்சியாலும் ஏற்றுக் கொள்ளப்படும் வேட்பாளரை பாஜக முன்னிறுத்தத் தவறினால் எதிர்க்கட்சிகள் சார்பில் பொது வேட்பாளர் களமிறக்கப்படுவார் என்று அக்கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.
இதனிடையே, பாஜக சார்பில் அத்வானி, முரளி மனோகர் ஜோஷி உள்ளிட்ட மூத்த தலைவர்களில் ஒருவர் வேட்பாளராக முன்னிறுத்தப்படலாம் என செய்திகள் வெளியாகின. ஆனால், பாபர் மசூதி இடிப்பு வழக்கில் அவர்களுக்கு எதிராக மீண்டும் விசாரணை நடத்தப்பட்டு வருவதால், வேறு ஒருவரை வேட்பாளராக்க பாஜக தலைமை திட்டமிட்டு வருவதாகத் தெரிகிறது.
இந்தச் சூழலில், எதிர்க்கட்சிகளின் பொது வேட்பாளரை முடிவு செய்வதற்கான துணைக் குழு ஒன்று அமைக்கப்பட்டது. மாநிலங்களவை எதிர்க்கட்சித் தலைவர் குலாம் நபி ஆசாத், ஐக்கிய ஜனதா தள மூத்த தலைவர் சரத் யாதவ், ராஷ்ட்ரீய ஜனதா தளத் தலைவர் லாலு பிரசாத் உள்ளிட்டோர் அக்குழுவில் இடம்பெற்றுள்ளனர்.
அவர்களைத் தவிர, திரிணமூல் காங்கிரஸ், சமாஜவாதி, இடதுசாரி கட்சிகள், தேசியவாத காங்கிரஸ், பகுஜன் சமாஜ், திமுக உள்ளிட்ட கட்சிகளைச் சேர்ந்த தலைவர்களும் அந்தக் குழுவில் இடம்பெற்றுள்ளனர்.
அடுத்த சில நாள்களில் அவர்கள் அனைவரும் பொது வேட்பாளராக எவரை முன்னிறுத்தலாம் என்பது குறித்து ஆலோசிக்க உள்ளனர்.
குடியரசுத் துணைத் தலைவர் வேட்பாளருக்கான பெயர்களும் அப்போது பரிசீலிக்கப்படும் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com