பத்திரப் பதிவு வழிகாட்டி மதிப்பு 33 % குறைப்பு

பத்திரப் பதிவுக்கான வழிகாட்டி மதிப்பை 33 சதவீத அளவுக்கு குறைத்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
பத்திரப் பதிவு வழிகாட்டி மதிப்பு 33 % குறைப்பு

பத்திரப் பதிவுக்கான வழிகாட்டி மதிப்பை 33 சதவீத அளவுக்கு குறைத்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
இதற்கான முடிவு முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி தலைமையில் வியாழக்கிழமை நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் எடுக்கப்பட்டது.
இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்ட அறிவிப்பு: அதிமுக சார்பில் 2016-ஆம் ஆண்டில் வெளியிடப்பட்ட தேர்தல் அறிக்கையில் பத்திரப் பதிவுக்கான வழிகாட்டி மதிப்பு நிர்ணயிக்கும் முறை சீரமைக்கப்படும் என்று மறைந்த முதல்வர் ஜெயலலிதா அறிவித்திருந்தார்.
இதைக் கருத்தில் கொண்டு பதிவுத் துறைத் தலைவர் தலைமையிலான மதிப்பீட்டுக் குழு இப்போது மாநிலத்தில் நடைமுறையில் உள்ள சந்தை மதிப்பு வழிகாட்டியை அனைத்து இனங்களுக்கும் வெள்ளிக்கிழமை (ஜூன் 9) முதல் 33 சதவீத அளவுக்குக் குறைத்து உத்தரவிட்டுள்ளது.
உடனடியாக நடைமுறை: வழிகாட்டி மதிப்புக் குறைப்பு உத்தரவானது வெள்ளிக்கிழமை (ஜூன் 9) முதல் உடனடியாக நடைமுறைக்கு வருகிறது. இந்த சந்தை வழிகாட்டி மதிப்பைக் குறைப்பதால் அரசுக்கு வருவாய் இழப்பு ஏற்படும். இந்த வருவாய் இழப்பை ஈடு செய்யவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
பதிவுக் கட்டணம் உயர்வு: அதன்படி, விற்பனை, பரிமாற்றம், தானம் மற்றும் குடும்ப உறுப்பினர்கள் அல்லாத நபர்களுக்காக எழுதிக் கொடுக்கப்படும் ஏற்பாடு போன்ற ஆவணங்களுக்கான பதிவுக் கட்டணம் 4 சதவீதமாக நிர்ணயிக்கப்படும். இந்தப் பதிவுக் கட்டண உயர்வும் வெள்ளிக்கிழமை (ஜூன் 9) முதலே நடைமுறைக்கு வரும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.
எப்படி கணக்கிடப்படும்? வழிகாட்டி மதிப்பானது கடந்த 2012-ஆம் ஆண்டு ஏப்ரல் 1 ஆம் தேதி முதல் உயர்த்தி அறிவிக்கப்பட்டது. இதனால், நிலம் மற்றும் வீட்டு விற்பனைகள் குறைந்து, பதிவுக் கட்டணங்கள் மூலமான வருவாய் அரசுக்கு பெருமளவு சரிந்தது. ரியல் எஸ்டேட் தொழிலிலும் தேக்க நிலை ஏற்பட்டது.
தேர்தல் அறிக்கையில் அறிவித்தபடி...: இதைத் தொடர்ந்து, கடந்த 2016-ஆம் ஆண்டு அதிமுக தேர்தல் அறிக்கையில் வழிகாட்டி மதிப்பு குறைக்கப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது. இந்த அறிவிப்பைச் செயல்படுத்தும் வகையில் வழிகாட்டி மதிப்பில் 33 சதவீதம் குறைக்கப்பட்டுள்ளது.
உதாரணமாக ஒரு சதுர அடி நிலத்துக்கான வழிகாட்டி மதிப்பு 100 ரூபாயில் 33 ரூபாய் குறைக்கப்பட்டு 67 ரூபாயாக நிர்ணயிக்கப்படும். தமிழகத்தில் பதிவுத் துறையானது ஒன்பது மண்டலங்களாகப் பிரிக்கப்பட்டுள்ளது. சென்னை, கோவை, கடலூர், மதுரை, சேலம், தஞ்சாவூர், திருநெல்வேலி, திருச்சி, வேலூர் ஆகிய மண்டலங்களில் தெருக்கள் வாரியாக குறைக்கப்பட்ட வழிகாட்டி மதிப்பு விவரங்கள் பதிவுத் துறையின் இணையதளத்தில் (www.tnreginet.net) வெளியிடப்படும் என பதிவுத் துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
தமிழக அரசின் இந்த நடவடிக்கையால் நிலம்-மனைகள் வாங்குவது, விற்பது போன்ற பணிகள் விறுவிறுப்படையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

அங்கீகாரம் இல்லாத மனைகளைப் பதிவு செய்வது எப்படி?

அங்கீகாரம் இல்லாத மனைகளைப் பதிவு செய்வது தொடர்பாக தெளிவான வழிகாட்டுதல்களை தமிழக அரசு வழங்க வேண்டும் என பரவலாக கோரிக்கை எழுந்துள்ளது.
இதுகுறித்து பதிவுத்துறை வட்டாரங்கள் கூறியதாவது: அங்கீகாரம் இல்லாத மனைகளை முறைப்படுத்துவது தொடர்பான சட்டத் திருத்த மசோதா பேரவையில் வரவிருக்கும் கூட்டத் தொடரில் தாக்கல் செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. நீதிமன்ற நடவடிக்கைக்கு உட்படாத அம்சங்கள் இந்த சட்டத் திருத்த மசோதாவில் குறிப்பிடப்படும் பட்சத்தில் அங்கீகாரம் இல்லாத மனைகளின் நிலை குறித்துத் தெரியவரும்.
அங்கீகாரம் இல்லாத மனைகளைப் பதிவு செய்வது குறித்த முடிவுகளை எடுக்கும் வரையில் வழிகாட்டு மதிப்பைக் குறைப்பதால் ரியல் எஸ்டேட் தொழிலில் பெரிய அளவுக்கு வளர்ச்சி ஏற்படாது எனவும் கருத்துகள் எழுந்துள்ளன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com