66 பொருட்களுக்கு ஜிஎஸ்டி வரிவிகிதம் குறைப்பு: அருண்ஜேட்லி அறிவிப்பு

66 பொருட்களுக்கு ஜிஎஸ்டி வரிவிகிதம் குறைக்கப்பட்டுள்ளதாக மத்திய நிதி அமைச்சர் அருண்ஜேட்லி தெரிவித்துள்ளார்.
66 பொருட்களுக்கு ஜிஎஸ்டி வரிவிகிதம் குறைப்பு: அருண்ஜேட்லி அறிவிப்பு

புதுதில்லி: 66 பொருட்களுக்கு ஜிஎஸ்டி வரிவிகிதம் குறைக்கப்பட்டுள்ளதாக மத்திய நிதி அமைச்சர் அருண்ஜேட்லி தெரிவித்துள்ளார்.

சரக்கு மற்றும் சேவை வரியான ஜிஎஸ்டி அடுத்த மாதம் முதல் அமல்படுத்தப்படவுள்ளது. இந்நிலையில் தற்போது அறிவிக்கப்பட்டுள்ள ஜிஎஸ்டி வரி விகிதங்களுக்கு பல்வேறு தரப்பினர் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

இதையடுத்து. அவற்றுக்கு தீர்வு காணும் வகையில் 18 துறைகள் சார்ந்த குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. நிதி அமைச்சர்  அருண்ஜேட்லி தலைமையில் நடைபெற்ற இன்றைய ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தில் சில முக்கிய வரிவிகித முடிவுகள் எடுக்கப்பட்டன.

கூட்டத்திற்குப் பின்பு செய்தியாளர்களிடம் அமைச்சர் அருண்ஜேட்லி கூறுகையில், 133 பொருட்களின் வரி விகிதம் தொடர்பாக பரிந்துரைகள் பெறப்பட்டதாகவும், அவை முறையாக பரிசீலிக்கப்பட்ட பின் 66 பொருட்களுக்கான வரி விகிதங்கள் குறைக்கப்பட்டுள்ளது.

மேலும், 100 ரூபாய்க்கு மேல் விற்கப்படும் அனைத்து சினிமா டிக்கெட்டுகளுக்கு 28 சதவீத வரி என்பதில் மாற்றமில்லை என்று தெரிவித்த அவர், 100 ரூபாய்க்கு கீழ் விலை உள்ள டிக்கெட்டுகளுக்கு 8 சதவீதம் வரி குறைக்கப்பட்டுள்ளதாக கூறினார்.

அகர் பத்தி, இன்சுலின் போன்றவற்றுக்கான வரி 12 சதவீதத்தில் இருந்து 5 சதவீதமாகவும், கணினி பிரிண்டர்கள், பள்ளி பைகள் உள்ளிட்டவற்றுக்கு 28 சதவீதத்தில் இருந்து 18 சதவீதமாக வரி குறைக்கப்பட்டுள்ளது. உள்ளாடைகள், முந்திரிப் பருப்பு மீதான வரி 12 சதவீதத்திலிருந்து 5 சதவீதமாக குறைக்கப்பட்டுள்ளதாக அருண்ஜேட்லி கூறினார்.  

இதனையடுத்து வரும் ஜூன் 18 ஆம் தேதி அடுத்த ஜிஎஸ்டி கூட்டத்தில், லாட்டரி டிக்கெட்டுகள், இ-வழி ரசீதுகள் உள்ளிட்ட பொருட்கள் மீதான வரி விகிதம் நிர்ணயிக்கப்படவுள்ளது.

ஹைபிரிட் கார்களுக்கான ஜிஎஸ்டி வரியின் மீதான மறுபரிசீலனை விவகாரத்தில் மாநிலங்களின் கருத்துகளைக் கேட்டறிந்த பிறகு முடிவெடுக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com