விவசாயக் கடன்கள் தள்ளுபடி செய்யப்படும்: மகாராஷ்டிரா மாநில அரசு அறிவிப்பு

அனைத்து விவசாயிகளின் கடன்களையும் தள்ளுபடி செய்யப்படும் என மகாராஷ்டிரா மாநில அரசு அறிவித்துள்ளது.
விவசாயக் கடன்கள் தள்ளுபடி செய்யப்படும்: மகாராஷ்டிரா மாநில அரசு அறிவிப்பு

மும்பை: அனைத்து விவசாயிகளின் கடன்களையும் தள்ளுபடி செய்யப்படும் என மகாராஷ்டிரா மாநில அரசு அறிவித்துள்ளது.

மராட்டிய மாநிலத்தில் இந்தாண்டு நிலவிய கடும் வறட்சி காரணமாக விவசாயிகளுக்கு போதிய விளைச்சல் கிடைக்கவில்லை. இதனால், மாநில அரசானது வறட்சிக்கு உரிய நிவாரணம் வழங்க வேண்டும், வங்கிகளில் பெற்றுள்ள விவசாயக் கடன்களை ரத்து செய்ய வேண்டும் எனக் கோரி மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் போராட்டம் நடத்தி வந்தனர்.

இந்நிலையில், விவசாயிகள் பல்வேறு கோரிக்கைகளை ஆராய்வதற்காக முதல்வர் தேவேந்திர பட்னாவிஸ் தலைமையிலான 6 பேர் கொண்ட குழுவினர் மற்றும் விவசாய சங்கங்கள் தலைவர்களுடன் இன்று பேச்சுவார்த்தை நடைபெற்றது.

பேச்சுவார்த்தைக்கு பின்னர் செய்தியாளர்களிடம் வருவாய் துறை அமைச்சர் சந்திரகாந்த் பாட்டீல் கூறுகையில், சிறு மற்றும் குறு விவசாயிகள் வங்கிகளில் பெற்றுள்ள விவசாயக்கடன்கள் அனைத்தும் தள்ளுபடி செய்து, கடன் நிவாரணத் தொகையை நிர்ணயிக்க ஒரு குழுவை அமைத்து நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்தார்.

இதனையடுத்து, நாளை நடைபெறவிருந்த மாபெரும் விவசாயிகள் போராட்டம் ரத்து செய்யப்பட்டுவதாக விவசாய சங்கங்கள் தெரிவித்துள்ளன.

இதுகுறித்து பேச்சுவார்த்தையில் கலந்துகொண்ட விவசாயிகள் தலைவரும் மக்களவை உறுப்பினருமான ராஜு ஷெட்டி கூறுகையில்,  விவசாயிகளின் கடன் தள்ளுபடிக்கான கோரிக்கைகள் ஏற்க்கப்பட்டு, விவசாய கடன்கள் தள்ளுபடி செய்வதாக அறிவிக்கப்பட்டுள்ளது மகிழ்ச்சியாக உள்ளது.

இதையடுத்து எங்களது போராட்டத்தை தற்காலிகமாக ஒத்திவைக்கிறோம். வரும் ஜூலை 25-ஆம் தேதிக்குள் விவசாயிகளுக்கு திருப்திகரமான முடிவுகள் எடுக்கப்படாவிட்டாலும், நாங்கள் எங்களது போராட்டத்தை மீண்டும் தொடங்குவோம் என்று ஷெட்டி கூறினார்.

மற்றொரு விவசாயிகள் சங்க தலைவர் ரகுநாத் தடா பாட்டீல் கூறுகையில், அனைத்து விவசாயிகள் கடன்களும் தள்ளுபடி செய்யப்படும் என்று அமைச்சர் உறுதி அளித்துள்ளார்.

எங்கள் கோரிக்கைகள் 100 சதவீதம் ஏற்றுக்கொள்ளப்பட்டு விவசாயிகள் கடன்கள் தள்ளுபடி செய்யப்படும் என அறிவித்திருப்பது தீபாவளி கொண்டாட்டங்களைப் போல உள்ளது.

விவசாயிகளுக்கு புதிய கடன் வழங்குவதற்கு அமைச்சரவை குழு தீர்மானித்துள்ளதாகவும் ரகுநாததடா தெரிவித்தார்.

நாளை மற்றும் ஜூன் 13 ஆம் தேதி சாலை மறியல் மற்றும் ரயில் மறியல் போராட்டங்களை திட்டமிட்டிருந்தோம் என்று தெரிவித்த சுயச்சை எம்.எல்.ஏ கத்து, ஜூலை 24 ஆம் தேதிக்குள் இன்று அறிவிக்கப்பட்டுள்ள தீர்மானத்தை நடைமுறைப்படுத்தாவிட்டால், விவசாயிகள் தங்கள் போராட்டத்தை மீண்டும் தொடங்குவார்கள் என தெரிவித்தார்.

கடந்த வாரம், சோலாப்பூர் மாவட்டத்தில் தற்கொலை செய்துகொண்ட ஒரு விவசாயி, முதல்வர் தனது விவசாய நிலத்தை பார்வையிடாவிட்டால், எனது உடல் தகனம் செய்யப்படக்கூடாது என்று எழுதி வைத்துவிட்டு தற்கொலை செய்துகொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com