கர்நாடகத்தில் இன்று முழு அடைப்பு: தமிழக பஸ்கள் எல்லையில் நிறுத்தம்!

பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து, கர்நாடகத்தில் இன்று திங்கள்கிழமை நடக்கும் முழு அடைப்பையொட்டி, தமிழக பேருந்துகள்

பெங்களூரு: பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து, கர்நாடகத்தில் இன்று திங்கள்கிழமை நடக்கும் முழு அடைப்பையொட்டி, தமிழக பேருந்துகள் எல்லையிலேயே நிறுத்தப்பட்டுள்ளன.

மகதாயி நதிநீர் பங்கீடு, கலசா-பண்டூரி கால்வாய் திட்டங்களை அமல்படுத்துதல், மகாராஷ்டிர ஏகிகரன சமிதியினரை மாநிலத்தை விட்டு வெளியேற்றுதல், பயிர்க்கடனைத் தள்ளுபடி செய்தல், மேக்கேதாட்டு அணை திட்டத்தை அமல்படுத்த எதிர்ப்புத் தெரிவிக்கும் தமிழகத்துக்கு கண்டனம் தெரிவித்தல், பெமல் நிறுவனத்தை தனியார்மயமாக்குவதற்கு கண்டனம் தெரிவித்தல் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இன்று திங்கள்கிழமை (ஜூன் 12) காலை 6 மணி முதல் மாலை 6 மணி வரை போராட்டம் நடத்த கன்னட சலுவளிக் கட்சியின் தலைவர் வாட்டாள் நாகராஜ் தலைமையிலான கன்னட அமைப்புகளின் கூட்டமைப்பு அழைப்பு விடுத்துள்ளது. இதற்கு கர்நாடக மாநில விவசாயிகள் சங்கத்தினரும் ஆதரவு தெரிவித்துள்ளனர்.

இந்த முழு அடைப்புக்கு போராட்டத்துக்கு கர்நாடக ரக்‌ஷன வேதிகே தலைவர் நாராயண கவுடா உள்பட 60-க்கும் மேற்பட்ட கன்னட சங்கங்கள் அங்கம் வகிக்கும் கர்நாடக கன்னட சங்கங்களின் கூட்டமைப்பு எதிர்ப்புத் தெரிவித்துள்ளது. இருந்தாலும், திட்டமிட்டப்படி முழு அடைப்பு போராட்டம் நடைபெறும் என்று அவர் அறிவித்தார்.

பெங்களூரு டவுன் ஹாலில் இருந்து கன்னட அமைப்புகளின் கூட்டமைப்பு சார்பில் ஊர்வலம், சட்டப்பேரவை முற்றுகைப் போராட்டம் நடக்கவிருக்கிறது.

தமிழகத்தில் இருந்து கர்நாடகம் வழியாக வட இந்தியா செல்லும் வாகனங்கள் கர்நாடகத்துக்குள் அனுமதிக்கப்பட மாட்டாது என்று போராட்டக்காரர்கள் அறிவித்துள்ளனர்.

சட்டப்பேரவைக் கூட்டம் நடந்து வருவதால், விதானசெளதாவை சுற்றி 2 கி.மீ. சுற்றளவுக்கு 144 தடையுத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ள நிலையில், போராட்டத்தில் ஈடுபடுவோர் கைது செய்யப்பட வாய்ப்பு இருக்கிறது.

தனியார் பள்ளி, கல்லூரிகளுக்கு நிலைமைக்கேற்ப விடுமுறை விடலாம் என்று கர்நாடக மாநில தனியார் பள்ளி நிர்வாகங்களின் சங்கம் அறிவித்துள்ளது.

திரையரங்குகள் மூடப்பட்டிருக்கும். படப்பிடிப்புப் பணிகள் முழுமையாக ரத்து செய்யப்பட்டுள்ளன. பெங்களூரு பல்கலைக்கழகத்தின் தேர்வுகள் ரத்து செய்யப்பட்டுள்ளன.

இதையடுத்து இன்று காலை முழு அடைப்புப் போராட்டம் தொடங்கியது. இதையடுத்து தமிழக பேருந்துகள், கர்நாடக எல்லையில் நிறுத்தப்பட்டன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com