பெட்ரோல்-டீசல் விலைகள் நாள்தோறும் நிர்ணயிக்கப்படுவதை எதிர்த்து வேலை நிறுத்தம்

பெட்ரோல்-டீசல் விலைகளை நாள்தோறும் நிர்ணயிப்பதென்ற எண்ணெய் நிறுவனங்களின் முடிவை எதிர்த்து, வரும் 16-ஆம் தேதி வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடப் போவதாக பெட்ரோல் விற்பனை

பெட்ரோல்-டீசல் விலைகளை நாள்தோறும் நிர்ணயிப்பதென்ற எண்ணெய் நிறுவனங்களின் முடிவை எதிர்த்து, வரும் 16-ஆம் தேதி வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடப் போவதாக பெட்ரோல் விற்பனை நிலைய டீலர்களில் ஒருபிரிவினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

புதுச்சேரி, உதய்ப்பூர், விசாகப்பட்டினம் உள்ளிட்ட 5 நகரங்களில் பெட்ரோல்-டீசல் விலைகளை நாள்தோறும் நிர்ணயிக்கும் நடைமுறையை எண்ணெய் நிறுவனங்கள் சோதனை முயற்சியாக கடந்த மாதம் தொடங்கின. இதையடுத்து, நாடு முழுவதும் வரும் 16-ஆம் தேதி முதல் இந்த நடைமுறையை செயல்படுத்த எண்ணெய் நிறுவனங்கள் முடிவு செய்துள்ளன. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடப் போவதாக அனைத்து இந்திய பெட்ரோலிய வர்த்தகர்கள் கூட்டமைப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது. இதுகுறித்து அந்த அமைப்பு வெளியிட்டிருக்கும் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது:
ஏற்கெனவே சோதனை முயற்சியாக இந்தத் திட்டம் செயல்படுத்தப்பட்ட 5 நகரங்களைச் சேர்ந்த பெட்ரோல் விற்பனை நிலைய டீலர்கள் முதலீட்டுக்கே நஷ்டம் ஏற்பட்டு விட்டதாக தெரிவிக்கின்றனர். அன்றாடம் விலை நிர்ணயத்தின்போது காணப்படும் ஏற்ற இறக்கத்தினால், முந்தைய தினத்தில் வாங்கும் பெட்ரோலியப் பொருட்களுக்கு பெரும் இழப்பு ஏற்படுவதாக அவர்கள் வேதனைப்படுகின்றனர்.
நாட்டில் உள்ள 50 சதவீத பெட்ரோல் விற்பனை நிலையங்கள், மாதத்துக்கு சராசரியாக 30 கிலோ லிட்டர்தான் பெட்ரோல்-டீசலை விற்கின்றன. லாரியில் கொண்டு வரப்படும் 18 கிலோ லிட்டர் பெட்ரோல்-டீசலை இருப்பு வைத்து, அதை விற்பதற்கு 7 முதல் 10 நாள்கள் பிடிக்கும். அப்படியிருக்கும்போது அன்றாடம் அவற்றின் விலைகளை நிர்ணயிக்கும்போது, தொடர்ந்து விலை சரிந்தால், அவர்களின் முதலுக்கே அழிவு ஏற்படும். அதேபோல், பெட்ரோல்-டீசலை விற்பனை நிலையங்களுக்கு லாரிகள் கொண்டு வருவதற்கே 2 முதல் 3 நாள்கள் ஆகும். அந்நாள்களில் பெட்ரோல்-டீசல் விலைகளை நாள்தோறும் நிர்ணயிக்கும்போது, விலை சரிவு ஏற்படும்பட்சத்தில் டீலர்கள் பெரும் இழப்பை சந்திக்க வேண்டியிருக்கும்.
இதுபோன்ற காரணங்களுக்காக, நாள்தோறும் பெட்ரோல்-டீசல் விலைகளை நிர்ணயிக்கும் எண்ணெய் நிறுவனங்களின் முடிவை நாங்கள் எதிர்க்கிறோம். மேலும், எங்களின் எதிர்ப்பை வெளிப்படுத்தும் வகையில், வரும் 16-ஆம் தேதி வேலைநிறுத்தத்தில் ஈடுபடவுள்ளோம். அன்றைய தினத்தில் பெட்ரோல்-டீசலை வாங்கவோ அல்லது பெட்ரோல்-டீசலை விற்பனை செய்யவோ மாட்டோம் என்று அந்த அறிக்கையில் அனைத்து இந்திய பெட்ரோலிய வர்த்தகர்கள் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com