விவசாயிகள் கடன் தள்ளுபடி: மகாராஷ்டிர அரசு அறிவிப்பு

மகாராஷ்டிரத்தில் விவசாயிகள் வாங்கிய கடன் தள்ளுபடி செய்யப்படுவதாக அந்த மாநிலத்தை ஆளும் முதல்வர் தேவேந்திர ஃபட்னவீஸ் தலைமையிலான அரசு ஞாயிற்றுக்கிழமை அறிவித்தது.
விவசாயிகள் கடன் தள்ளுபடி: மகாராஷ்டிர அரசு அறிவிப்பு

மகாராஷ்டிரத்தில் விவசாயிகள் வாங்கிய கடன் தள்ளுபடி செய்யப்படுவதாக அந்த மாநிலத்தை ஆளும் முதல்வர் தேவேந்திர ஃபட்னவீஸ் தலைமையிலான அரசு ஞாயிற்றுக்கிழமை அறிவித்தது.

மகாராஷ்டிரத்தில் விவசாயிகள் கடனை தள்ளுபடி செய்ய வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, விவசாய சங்கத்தினர் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டிருந்தனர். அவர்களை அந்த மாநில வருவாய்த்துறை அமைச்சர் சந்திரகாந்த் பாட்டீல் தலைமையில் அமைக்கப்பட்ட குழுவினர் ஞாயிற்றுக்கிழமை சந்தித்துப் பேசினர்.
அதைத் தொடர்ந்து, சந்திரகாந்த் பாட்டீல் செய்தியாளர்களிடம் கூறுகையில், "விவசாயிகள் கடனை தள்ளுபடி செய்வதென்று மாநில அரசு முடிவு செய்துள்ளது.
சிறிய அளவில் நிலம் வைத்திருக்கும் விவசாயிகளின் கடன் இன்று (ஞாயிற்றுக்கிழமை) முதல் தள்ளுபடி செய்யப்படும். இதேபோல், தள்ளுபடி செய்யப்பட இருக்கும் தொகையை நிர்ணயிப்பது தொடர்பாக முடிவெடுக்க குழு அமைக்கப்படும்' என்றார்.
விவசாயிகள் போராட்டம் வாபஸ்: பேச்சுவார்த்தையில் சுமுக உடன்பாடு எட்டப்பட்டதையடுத்து, தங்களது போராட்டத்தை விவசாயிகள் திரும்பப் பெற்றுக் கொண்டனர்.
இதுகுறித்து பேச்சுவார்த்தையில் கலந்து கொண்ட விவசாய சங்கத் தலைவரும், மக்களவை எம்.பி.யுமான ராஜூ ஷெட்டி கூறுகையில், "எங்களது பிரச்னைகளுக்கு தீர்வு காணப்பட்டு விட்டது.
திங்கள்கிழமையும், செவ்வாய்க்கிழமையும் நாங்கள் நடத்த திட்டமிட்டிருந்த தர்னா போராட்டங்கள் உள்பட அனைத்து போராட்டத்தையும் தாற்காலிகமாக நிறுத்திக் கொள்வது என்று முடிவு செய்திருக்கிறோம்.
ஜூலை 25-ஆம் தேதிக்குள் நாங்கள் திருப்திபடும் வகையிலான முடிவு எடுக்கப்படவில்லையெனில், மீண்டும் போராட்டத்தில் ஈடுபடுவோம்' என்றார்.
மற்றோர் விவசாய சங்கத் தலைவர் ரகுநாத்தாதா பாட்டீல் கூறுகையில், "அமைச்சர் எங்களிடம் அனைத்து விவசாயக் கடன்களும் தள்ளுபடி செய்யப்படும் என்று வாக்குறுதி அளித்தார்.
எங்களது 100 சதவீத கோரிக்கைகளும் ஏற்கப்பட்டுவிட்டதால், தீபாவளி பண்டிகைபோல் இந்த தருணத்தை நாங்கள் உணர்கிறோம்' என்றார்.
அகமதுநகர் மாவட்டத்தைச் சேர்ந்த விவசாயிகள் கடந்த 1-ஆம் தேதி முதல் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்களுடன் பல்வேறு விவசாய சங்கக் குழுக்களும் சேர்ந்து கொண்டன.
இதையடுத்து, விவசாயிகளுடன் பேச்சுவார்த்தை நடத்துவதற்கு, சந்திரகாந்த் பாட்டீல் தலைமையில் முதல்வர் தேவேந்திர ஃபட்னவீஸ் குழுவை அமைத்தார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com