விவசாயக் கடன் தள்ளுபடி: நிதிச் சுமையை மாநிலங்கள்தான் ஏற்க வேண்டும்

விவசாயக் கடன்களை தள்ளுபடி செய்வதால் ஏற்படும் நிதிச் சுமையை சம்பந்தப்பட்ட மாநில அரசுகளே ஏற்க வேண்டும் என்று மத்திய நிதியமைச்சர் அருண் ஜேட்லி தெரிவித்துள்ளார்.
விவசாயக் கடன் தள்ளுபடி: நிதிச் சுமையை மாநிலங்கள்தான் ஏற்க வேண்டும்

விவசாயக் கடன்களை தள்ளுபடி செய்வதால் ஏற்படும் நிதிச் சுமையை சம்பந்தப்பட்ட மாநில அரசுகளே ஏற்க வேண்டும் என்று மத்திய நிதியமைச்சர் அருண் ஜேட்லி தெரிவித்துள்ளார். இந்த விவகாரத்தில் மத்திய அரசு எந்தவிதமான நிதியுதவியும் அளிக்க இயலாது என்றும் அவர் தெளிவுபடுத்தியுள்ளார்.
யோகி ஆதித்யநாத் தலைமையிலான உத்தரப் பிரதேச அரசு, கடந்த சில மாதங்களுக்கு முன்பு ரூ.36,000 கோடி மதிப்பிலான வேளாண் கடனை ரத்து செய்வதாக அறிவித்தது. அதேபோன்று மகாராஷ்டிர முதல்வர் தேவேந்திர பட்னவீஸும் அத்தகைய அறிவிப்பை ஞாயிற்றுக்கிழமை வெளியிட்டார்.
இதற்கு நடுவே, மத்தியப் பிரதேச மாநில விவசாயிகளும் தங்களது பயிர்க்கடனை ரத்து செய்ய வலியுறுத்தி பல்வேறு போராட்டங்களை நடத்தி வருகின்றனர். தமிழக விவசாயிகளும் இந்தக் கோரிக்கையை முன்வைத்து அண்மையில் நூதன போராட்டங்களை நடத்தினர்.
இந்தச் சூழலில், பொதுத் துறை வங்கிகளின் தலைவர்களுடனான ஆலோசனைக் கூட்டம் தில்லியில் திங்கள்கிழமை நடைபெற்றது. இதில் மத்திய நிதியமைச்சர் அருண் ஜேட்லி கலந்து கொண்டு பல்வேறு முக்கிய விவகாரங்கள் தொடர்பாக விவாதித்தார். இக்கூட்டத்துக்குப் பிறகு செய்தியாளர்களைச் சந்தித்த அவர், பல்வேறு கேள்விகளுக்குப் பதிலளித்தார். அப்போது ஜேட்லி கூறியதாவது:
பொதுத் துறை வங்கிகளை ஒருங்கிணைப்பது தொடர்பாக கூட்டத்தில் பிரதானமாக விவாதிக்கப்படவில்லை. இருப்பினும், அந்த நோக்கத்தை அடைவதற்கான நடவடிக்கைகளையே மத்திய அரசும், வங்கிகளும் மேற்கொண்டு வருகின்றன.
வங்கிகளில் நீண்ட காலமாக நிலுவையில் இருக்கும் வாராக் கடன்களை வசூலிப்பதற்காக அண்மையில் அவசரச் சட்டம் பிறப்பிக்கப்பட்டது. அதன் வாயிலாக, ரிசர்வ் வங்கிக்கு கூடுதல் அதிகாரம் அளிக்கப்பட்டுள்ளது. அதாவது, புதிய சட்டத்தின்படி வாராக் கடன்களை வசூலிக்குமாறு வங்கிகளை ரிசர்வ் வங்கி அறிவுறுத்த முடியும். அதைத் தவிர, வேறு சில முக்கிய அம்சங்களும் அதில் இடம்பெற்றுள்ளன.
இந்நிலையில், அவசரச் சட்டத்தில் உள்ள விதிகளின்படி, வாராக் கடன்களை வசூலிக்கும் நடவடிக்கைகளில் ரிசர்வ் வங்கி தீவிரமாகச் செயல்பட்டு வருகிறது. வெகு காலமாக கடனைத் திருப்பிச் செலுத்தாதவர்களின் பட்டியலை ரிசர்வ் வங்கி தயாரித்து வருகிறது. விரைவில் அடுத்த கட்ட நடவடிக்கை குறித்த அறிவிப்பு வெளியாகும்.
விவசாயிகள் பிரச்னையைப் பொருத்தவரை, அவர்கள் பெற்ற பயிர்க் கடனைத் தள்ளுபடி செய்வது சம்பந்தப்பட்ட மாநில அரசுகள் எடுக்க வேண்டிய முடிவு. அதற்கான தொகையை தங்களது கருவூலத்தில் இருந்தே மாநில அரசுகள் வழங்க வேண்டும். இதில், மத்திய அரசு எந்தவிதமான நிதியுதவியும் வழங்க இயலாது என்றார் ஜேட்லி.
மாநில அரசுகளின் விவசாயக் கடன் ரத்து நடவடிக்கைகளால் பணவீக்கம் அதிகரிக்க வாய்ப்புள்ளது என்றும், அதனால் நாட்டின் நிதிச் சூழலும் சுணக்கமடையும் என்றும் ரிசர்வ் வங்கி ஆளுநர் உர்ஜித் படேல் அண்மையில் தெரிவித்திருந்தது நினைவுகூரத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com