குடிமைப் பணித் தேர்வு: இணையதளத்தில் அனுமதிச் சீட்டுகள்

ஐஏஎஸ், ஐபிஎஸ் உள்ளிட்ட குடிமைப் பணியிடங்களுக்கான முதல் நிலைத் தேர்வில் பங்கேற்போர் தங்களது அனுமதிச் சீட்டினை இணையவழியே பதிவிறக்கம் செய்து கொள்ளுமாறு மத்திய குடிமைப் பணிகள்

ஐஏஎஸ், ஐபிஎஸ் உள்ளிட்ட குடிமைப் பணியிடங்களுக்கான முதல் நிலைத் தேர்வில் பங்கேற்போர் தங்களது அனுமதிச் சீட்டினை இணையவழியே பதிவிறக்கம் செய்து கொள்ளுமாறு மத்திய குடிமைப் பணிகள் தேர்வாணையம் (யுபிஎஸ்சி) அறிவுறுத்தியுள்ளது.
தேர்வில் பங்கேற்போர் பின்பற்ற வேண்டிய வழிமுறைகளையும் பதிவிறக்கம் செய்து தெளிவுறுமாறும் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.
இந்திய ஆட்சிப் பணி (ஐஏஎஸ்), வெளியுறவுப் பணி (ஐஎஃப்எஸ்) உள்பட பல்வேறு முக்கியப் பொறுப்புகளுக்கான போட்டித் தேர்வை ஆண்டுதோறும் யுபிஎஸ்சி நடத்தி வருகிறது. முதல் நிலைத் தேர்வு, முதன்மைத் தேர்வு, நேர்காணல் ஆகிய மூன்று நிலைகளாகத் தேர்வு நடைபெறுகிறது. கடந்த ஆண்டில் 4.50 லட்சம் பேர் இந்தத் தேர்வுகளில் பங்கேற்றனர். இறுதியில் தகுதியான 1,099 பேர் தேர்வாகினர்.
இந்நிலையில், நிகழாண்டுக்கான குடிமைப் பணி முதல் நிலைத் தேர்வுகள் வரும் ஞாயிற்றுக்கிழமை (ஜூன் 18) நடைபெற உள்ளன. இதற்கான சில அறிவுறுத்தல்களை யுபிஎஸ்சி வழங்கியுள்ளது. அதாவது, தேர்வில் பங்கேற்பவர்கள் தங்களது அனுமதிச் சீட்டினை www.upsconline.nic.in   என்ற வலைதள முகவரியில் பதிவிறக்கம் செய்து கொள்ள வேண்டும் என்றும், தேர்வின்போது பின்பற்றப்பட வேண்டிய வழிமுறைகளை படித்து தெளிவுற வேண்டும் என்றும் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.
யுபிஎஸ்சி-யின் அறிவுறுத்தல்களுக்குப் புறம்பாகச் செயல்படுபவர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், சம்பந்தப்பட்ட நபர் குடிமைப் பணித் தேர்வு எழுத இயலாத நிலை உருவாகும் என்றும் எச்சரிக்கப்பட்டுள்ளது.
தேர்வுக் கூடத்துக்குள் செல்லிடப்பேசி, மடிக் கணினி, ப்ளூ-டூத் போன்ற மின்னணுப் பொருள்களுக்கும், தொலைத் தொடர்பு சாதனங்களுக்கும் அனுமதியில்லை என்று ஏற்கெனவே யுபிஎஸ்சி தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com