தொண்டர்கள் சந்திப்புக் கூட்டம்!: கட்சியைப் பலப்படுத்த கேரள காங்கிரஸ் புதிய திட்டம்

கேரளத்தில் காங்கிரஸ் தொண்டர்களின் சந்திப்புக் கூட்டங்களை நடத்த அக்கட்சி திட்டமிட்டுள்ளது. 'இந்திரா குடும்ப சந்திப்பு' எனப் பெயரிடப்பட்டுள்ள இந்நிகழ்வை வாக்குச் சாவடி வாரியாக 24,000 பகுதிகளில்

கேரளத்தில் காங்கிரஸ் தொண்டர்களின் சந்திப்புக் கூட்டங்களை நடத்த அக்கட்சி திட்டமிட்டுள்ளது. 'இந்திரா குடும்ப சந்திப்பு' எனப் பெயரிடப்பட்டுள்ள இந்நிகழ்வை வாக்குச் சாவடி வாரியாக 24,000 பகுதிகளில் நடத்த கேரள காங்கிரஸ் முடிவு செய்துள்ளது.
மறைந்த பிரதமர் இந்திரா காந்தியின் பிறந்தநாள் நூற்றாண்டு விழாவைப் போற்றும் விதமாக இந்த நிகழ்வுக்கு இப்பெயர் வைக்கப்பட்டுள்ளது.
இத்தகைய நடவடிக்கைகளின் மூலம் அடுத்து வரும் மக்களவைத் தேர்தலில் கட்சியைப் பலப்படுத்தவும், தோல்விகளால் துவண்டு போய் உள்ள தொண்டர்களை உத்வேகப்படுத்தவும் இயலும் என காங்கிரஸ் தலைவர்கள் தெரிவித்துள்ளனர்.
மத்தியில் பாஜக ஆட்சியமைத்த மூன்று ஆண்டுகளில் காங்கிரஸ் கட்சி தொடர்ந்து பின்னடைவையே சந்தித்து வருகிறது. அண்மையில் நடைபெற்ற பெரும்பாலான தேர்தல்களிலும் அக்கட்சி படுதோல்வியைச் சந்தித்தது. இதனால், நாடு முழுவதும் கட்சியைப் பலப்படுத்த வேண்டிய நிர்பந்தம் காங்கிரஸ் தலைமைக்கு ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில், கேரள காங்கிரஸ் கமிட்டி சார்பில் அதற்கான முன்முயற்சிகள் தற்போது மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. கேரளத்தில் உள்ள காங்கிரஸ் உறுப்பினர்கள் அனைவரையும் ஒருங்கிணைத்து சந்திக்க வைக்கத் திட்டமிடப்பட்டுள்ளது. இந்தச் சந்திப்பு நிகழ்ச்சிகளில் கட்சியின் மூத்த தலைவர்கள், எம்எல்ஏக்கள் மற்றும் எம்.பி.க்களும் பங்கேற்க உள்ளனர்.
இதுதொடர்பாக, கேரள காங்கிரஸ் கமிட்டி பொதுச் செயலாளர் தம்பனூர் ரவி, செய்தியாளர்களிடம் செவ்வாய்க்கிழமை கூறியதாவது:
இந்திரா குடும்ப உறுப்பினர்களின் சந்திப்பு நிகழ்ச்சியானது, காங்கிரஸ் கட்சியை அடிமட்டத்தில் இருந்து பலப்படுத்த வேண்டும் என்பதற்காக நடத்தப்படுகிறது.
இந்தக் கூட்டங்களில் மத்திய பாஜக அரசின் நிர்வாகத் தோல்வி மற்றும் பாசிஸ செயல்பாடுகள் குறித்த ஆவணப் படங்கள், குறும் படங்கள் உள்ளிட்டவை திரையிடப்படும். அதேபோன்று மாநிலத்தை ஆளும் இடதுசாரி முன்னணி அரசின் வன்முறை அரசியல் குறித்தும் காங்கிரஸாருக்கு விளக்கப்படும்.
இதைத் தவிர, கட்சியைப் பலப்படுத்த வேண்டிய தேவை உள்ளிட்டவை குறித்து கூட்டத்தில் எடுத்துரைக்கப்படும். வாக்குச் சாவடி வாரியாக, மொத்தம் 24,417 இடங்களில் இத்தகைய சந்திப்புக் கூட்டங்கள் நடைபெறும். இதன் வாயிலாக அடுத்த மக்களவைத் தேர்தலை வலிமையுடன் சந்திக்கும் நிலையை காங்கிரஸ் கட்சி எட்டிப் பிடிக்கும் என்றார் அவர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com