25 பெட்டகங்களில் நகை கொள்ளை: மோடி நகரில் துணிகரம்

உத்தரப் பிரதேச மாநிலம், காஜியாபாத் அருகே உள்ள மோடி நகரில் பொதுத் துறை வங்கியின் கட்டட சுவரில் துளையிட்டு 25 பாதுகாப்புப் பெட்டகங்களில்

உத்தரப் பிரதேச மாநிலம், காஜியாபாத் அருகே உள்ள மோடி நகரில் பொதுத் துறை வங்கியின் கட்டட சுவரில் துளையிட்டு 25 பாதுகாப்புப் பெட்டகங்களில் வைக்கப்பட்டிருந்த நகை உள்ளிட்ட பொருள்களைக் கொள்ளையடித்துச் சென்ற மர்ம நபர்களை போலீஸார் தேடி வருகின்றனர்.

மோடி நகரில் தேசியமயமாக்கப்பட்ட பஞ்சாப் நேஷனல் வங்கியின் கிளை செயல்பட்டு வருகிறது. திங்கள்கிழமை காலை இவ்வங்கியின் ஊழியர்கள் வழக்கம் போல அலுவலகத்திற்கு வந்தனர். பின்னர், வங்கியைத் திறந்து முக்கியப் பொருள்கள் வைக்கப்பட்டிருக்கும் பாதுகாப்புப் பெட்டக அறைக்கு பணியில் ஈடுபடச் சென்றனர்.

அங்குக் கட்டடத்தின் சுவர் துளையிடப்பட்டிருந்தது. அறையின் பாதுகாப்புப் பெட்டகங்களின் பூட்டு உடைக்கப்பட்டு பொருள்கள் கொள்ளையடிக்கப்பட்டிருந்தது தெரிய வந்தது. இதைக் கண்டு ஊழியர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.

இக்கொள்ளை தொடர்பாக, வங்கியின் மேலாளர் அசோக் ஸ்ரீவாஸ்தவ் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதில் 11 பாதுகாப்புப் பெட்டகங்களின் பூட்டு உடைக்கப்பட்டு பொருள்கள் திருடப்பட்டிருப்பதாகத் தெரிவித்திருந்தார்.

இதையடுத்து, போலீஸார் சம்பந்தப்பட்ட வங்கியில் நேரடி விசாரணை நடத்தினர். அப்போது, 25 பாதுகாப்புப் பெட்டகங்களில் பொருள்கள் கொள்ளையடிக்கப்பட்டிருப்பது தெரிய வந்தது. வங்கி அலுவலக விடுமுறை நாளில் கொள்ளையர்கள் இக்கொள்ளையில் ஈடுபட்டிருக்கலாம் என போலீஸாருக்கு சந்தேகம் எழுந்துள்ளது.

இது குறித்து மூத்த காவல் கண்காணிப்பாளர் எச்.என். சிங் கூறியதாவது: பாதுகாப்பு பெட்டகத்தில் வைக்கப்பட்டுள்ள பொருள்களின் விவரங்கள் குறித்து வங்கியின் வாடிக்கையாளர்கள் தகவல்கள் ஏதும் அளிக்காததால் எவ்வளவு பணம், நகைகள் கொள்ளையடிக்கப்பட்டுள்ளன என்பது குறித்த விவரம் சரியாகத் தெரியவில்லை.

இது தொடர்பாக விசாரணை நடத்தி வருகிறோம். வங்கிக் கட்டடத்தின் பக்கவாட்டில் துளையிட்டு கொள்ளையர்கள் வங்கிக்குள் புகுந்து கொள்ளையில் ஈடுபட்டுள்ளனர். வங்கியின் வளாகத்தில் பாதுகாவலர்கள் யாரும் பணியில் ஈடுபடுத்தப்படவில்லை.

வங்கியில் இருந்த எச்சரிக்கை ஒலி எழுப்பும் கருவியும் செயல்படவில்லை. வங்கியில் பொருத்தப்பட்டிருந்த ஆறு கண்காணிப்பு கேமராக்களில் ஐந்து செயல்படவில்லை. வங்கி மேலாளரிடம் இது தொடர்பாக விசாரணை நடத்தப்பட்டு வருகிறது என்றார் அவர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com