ஆதாரை இணைக்காவிட்டால் வங்கிக் கணக்கு முடக்கம்: மத்திய அரசு அறிவிப்பு

வங்கிக் கணக்கு வைத்திருப்பவர்கள் வரும் டிசம்பர் 31-ஆம் தேதிக்குள் ஆதார் எண்ணை வங்கியில் கண்டிப்பாக தெரிவித்தாக வேண்டும்.
ஆதாரை இணைக்காவிட்டால் வங்கிக் கணக்கு முடக்கம்: மத்திய அரசு அறிவிப்பு

வங்கிக் கணக்கு வைத்திருப்பவர்கள் வரும் டிசம்பர் 31-ஆம் தேதிக்குள் ஆதார் எண்ணை வங்கியில் கண்டிப்பாக தெரிவித்தாக வேண்டும். இல்லையென்றால் அவர்களது வங்கிக் கணக்கு முடக்கப்படும் என்று மத்திய அரசு வெள்ளிக்கிழமை அறிவித்துள்ளது.
மேலும், வங்கியில் கணக்கு தொடங்க ஆதார் எண்ணை கட்டாயம் சமர்ப்பிக்க வேண்டுமென்று மத்திய அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.
அனைத்துக்கும் ஆதார்: ரூ.50,000 மற்றும் அதற்கு மேல் வங்கியில் பணப்பரிமாற்றம் செய்பவர்கள் பான் எண்ணுடன் ஆதார் எண்ணையும் சமர்ப்பிக்க வேண்டியது கட்டாயமாகும். ஆதார் எண் இல்லாமல் வங்கிக் கணக்கு தொடங்க வருபவர்கள், குறைந்தபட்சம் ஆதார் அட்டை பெற விண்ணப்பித்தற்காக வழங்கப்படும் எண்ணை அளிக்க வேண்டும். அதன்பிறகு 6 மாதத்துக்குள் ஆதார் எண்ணை அளித்தாக வேண்டும். இந்த அறிவிப்பை மத்திய வருவாய்த் துறை வெளியிட்டுள்ளது.
பான்-ஆதார் இணைப்பு: முன்னதாக, ஒரே நபர் பல்வேறு 'பான்' அட்டைகளைப் பயன்படுத்துவதைத் தடுக்கும் நோக்கில், பான் எண்ணுடன் ஆதார் எண்ணை கண்டிப்பாக இணைக்க வேண்டுமென்று பட்ஜெட்டின்போது மத்திய அரசு அறிவித்தது. மேலும், பான் அட்டைக்கு புதிதாக விண்ணப்பிக்க ஆதார் எண் கட்டாயமாக்கப்பட்டது. இதனை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்கப்பட்ட நிலையில், உச்ச நீதிமன்றமும் மத்திய அரசின் முடிவுக்கு ஆதரவாகத் தீர்ப்பளித்தது. இந்நிலையில், வங்கிக் கணக்கிலும் ஆதார் எண்ணை இணைப்பது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.
சிறு சேமிப்புக் கணக்குகளும் தப்பவில்லை: வங்கிகளில் சிறு சேமிப்புக்காக தொடங்கப்படும் கணக்குகளுக்கான விதிகளையும் மத்திய அரசு கடுமையாக்கியுள்ளது. அதன்படி, உரிய நுகர்வோர் அறிமுகப்படிவம் இல்லாமல் தொடங்கப்படும் சிறு சேமிப்புக் கணக்குகளில் அதிகபட்சம் ரூ.50,000-க்கு மேல் டெபாசிட் செய்ய முடியாது. மேலும், இந்த வகை சிறு சேமிப்புக் கணக்குகளை 'கோர் பேங்கிங்' தொழில்நுட்பம் உள்ள வங்கிக் கிளைகளில் மட்டும்தான் தொடங்க முடியும்.
ஏனெனில், 'கோர் பேங்கிங்' முறையில் செயல்படும் வங்கிக் கிளைகளில்தான் வெளிநாட்டில் இருந்து பணம் வருகிறதா? என்பதையும், ரூ.50,000-க்கும் மேல் பணப்பரிமாற்றம் நடைபெறவில்லை என்பதையும் எளிதாக கண்காணிக்க முடியும்.
இந்த வகை சிறு சேமிப்புக் கணக்குகளையும் ஓராண்டு வரை மட்டுமே ஆதார் எண்ணை அளிக்காமல் பயன்படுத்த முடியும். அதன் பிறகு ஆதார் எண்ணை சமர்ப்பிக்க வேண்டும். அல்லது குறைந்தபட்சம் ஆதார் பெற விண்ணப்பம் செய்ததற்கான எண்ணை அளிக்க வேண்டும்.
காரணம் என்ன?: ரூபாய் நோட்டு வாபஸ் நடவடிக்கைக்குப் பிறகு வங்கிப் பணப்பரிமாற்றத்தை மத்திய அரசு தீவிர கண்காணிப்பின்கீழ் கொண்டு வந்துள்ளது. கருப்புப் பணம் வைத்திருப்பவர்களும், பயங்கரவாத அமைப்புகளுக்கு நிதிப் பரிமாற்றம் செய்பவர்களும் அதிக அளவில் போலியான சேமிப்புக் கணக்குகளை பயன்படுத்துவதாக சந்தேகிக்கப்படுகிறது. எனவே, அதனைத் தடுக்கும் நோக்கில் மத்திய அரசு புதிய கட்டுப்பாடுகளை விதித்துள்ளது.
தொழில் நிறுவனங்களுக்கும் கட்டாயம்: வங்கிக் கணக்கு தொடங்க ஆதார் எண்ணை சமர்ப்பிக்க வேண்டும் என்பது தனிநபர்களுக்கு மட்டுமல்லாது தொழில் நிறுவனங்கள், கூட்டாண்மை நிறுவனங்களுக்கும் பொருந்தும்.
நிறுவனங்களின் பெயரில் வங்கிக் கணக்கு தொடங்க வேண்டும் என்றால் அந்த நிறுவனத்தின் மேலாளர் அல்லது நிறுவனம் சார்பில் பணப் பரிமாற்றத்தில் ஈடுபடும் அதிகாரம் அளிக்கப்பட்டுள்ள ஊழியரின் ஆதார் எண்ணை வங்கியில் சமர்ப்பிக்க வேண்டும்.
ஆதார் கட்டாயமாவது ஏன்? வங்கிக் கணக்கு தொடங்க ஆதார் எண் கட்டாயமாக்கப்பட்டுள்ளதன் மூலம், போலியான வங்கிக் கணக்கு தொடங்கப்படுவது முற்றிலுமாக தடுக்கப்பட்டு விடும். ஏனெனில், கைவிரல் ரேகை, கண் கருவிழிப்படலம் ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டு அளிக்கப்படும் ஆதார் எண்ணை போலியாக உருவாக்க முடியாது.
போலி வங்கிக் கணக்குகள் ஒழியும்: உள்நாட்டில் கருப்புப் பணம் உருவாவதைத் தடுப்பதே இந்த நடவடிக்கையின் முக்கிய நோக்கமாகும். வங்கி மூலம் பணப் பரிமாற்றத்தில் ஈடுபடும் அனைவருமே ஆதார் எண்ணை அளித்துவிட்டால், சட்டவிரோதமாக பணப் பரிமாற்றம் நடைபெறுவது குறையும். பெரும்பாலான கருப்புப் பண முதலைகள், போலியான பெயர்களில் வங்கிக் கணக்குகளை உருவாக்கி அவற்றை கருப்புப் பணப் பரிமாற்றத்துக்கு பயன்படுத்தி வருகின்றனர். அந்த வங்கிக் கணக்குகளுக்கு ஆதார் அட்டையை சமர்ப்பிக்க முடியாது என்பதால் அவை முடங்கிவிடும்.
இதனால் கருப்புப் பணம் ஒழிக்கப்படுவது மட்டுமின்றி பயங்கரவாத அமைப்புகளுக்கு நிதி செல்வதும் தடுக்கப்படும். வெளிநாடுகளில் இருந்து யாருக்கு எவ்வளவு பணம் வருகிறது என்பதையும் எளிதாகக் கண்காணிக்க முடியும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com