யாருக்கு ஆதரவு?: வெங்கய்ய நாயுடுவுடன் தம்பிதுரை ஆலோசனை

குடியரசுத் தலைவர் தேர்தலில் யாருக்கு ஆதரவு அளிப்பது என்பது குறித்து தில்லியில் மத்திய தகவல் ஒலிபரப்புத் துறை அமைச்சர் வெங்கய்ய நாயுடுவுடன் மக்களவைத் துணைத் தலைவர் மு.தம்பிதுரை
தில்லியில் மத்திய தகவல் ஒலிபரப்புத் துறை அமைச்சர் வெங்கய்ய நாயுடுவை வெள்ளிக்கிழமை சந்தித்த பிறகு செய்தியாளர்களிடம் பேசும் மக்களவைத் துணைத் தலைவர் மு.தம்பிதுரை.
தில்லியில் மத்திய தகவல் ஒலிபரப்புத் துறை அமைச்சர் வெங்கய்ய நாயுடுவை வெள்ளிக்கிழமை சந்தித்த பிறகு செய்தியாளர்களிடம் பேசும் மக்களவைத் துணைத் தலைவர் மு.தம்பிதுரை.

குடியரசுத் தலைவர் தேர்தலில் யாருக்கு ஆதரவு அளிப்பது என்பது குறித்து தில்லியில் மத்திய தகவல் ஒலிபரப்புத் துறை அமைச்சர் வெங்கய்ய நாயுடுவுடன் மக்களவைத் துணைத் தலைவர் மு.தம்பிதுரை வெள்ளிக்கிழமை ஆலோசனை நடத்தினார்.
குடியரசுத் தலைவர் தேர்தலில் மத்தியில் ஆளும் பாஜக கூட்டணி சார்பில் யாரை வேட்பாளராக முன்னிறுத்தலாம் என்பது குறித்து பாஜக மேலிடம் தீவிரமாக ஆலோசனை நடத்தி வருகிறது. இந்நிலையில், இந்த விவகாரத்தில் கூட்டணிக் கட்சிகளுடனும் பிற அரசியல் கட்சிகளுடனும் ஆலோசனை நடத்துவதற்காக மத்திய அமைச்சர்கள் ராஜ்நாத் சிங், வெங்கய்ய நாயுடு, அருண் ஜேட்லி ஆகியோர் அடங்கிய குழுவை பாஜக தேசிய தலைவர் அமித் ஷா நியமித்துள்ளார்.
இந்தக் குழுவினர் தில்லியில் அகில இந்திய காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியை வெள்ளிக்கிழமை சந்தித்துப் பேசினர்.
இந்நிலையில், வெங்கய்ய நாயுடுவை அவரது இல்லத்தில் மக்களவைத் துணைத் தலைவரும், அதிமுக "அம்மா' கட்சியின் மூத்த தலைவருமான மு.தம்பிதுரை வெள்ளிக்கிழமை சந்தித்துப் பேசினார். சுமார் 20 நிமிடங்கள் இச்சந்திப்பு நடைபெற்றது.
இதுகுறித்து பின்னர் தம்பிதுரையிடம் செய்தியாளர்கள் கேட்டதற்கு, "வெங்கய்ய நாயுடு எனது நண்பர். அவரை அரசியல் ரீதியாக சந்திக்கவில்லை' என்றார்.
இதையடுத்து, குடியரசுத் தலைவர் தேர்தலில் தமிழகத்தில் ஆளும் அதிமுக அம்மா கட்சியின் ஆதரவு யாருக்கு வழங்கப்படும் என செய்தியாளர்கள் கேட்டதற்கு, "எம்ஜிஆர் காலத்தில் இருந்தே மத்தியில் ஆளும் அரசுடன் அதிமுக இணக்கமாக இருந்துள்ளது.
தற்போதும் ஆளும் பாஜக கூட்டணி அரசுடன் அதிமுக இணக்கமாக உள்ளது. குடியரசுத் தலைவர் தேர்தலில் யார் வேட்பாளராக முன்னிறுத்தப்படுவார்கள் என்பதை மத்தியில் ஆளும் பாஜக இன்னும் அறிவிக்கவில்லை. வேட்பாளர் அறிவிக்கப்பட்டவுடன் அதிமுக அம்மா கட்சித் தலைவர்கள் கூடி ஆலோசனை நடத்துவர். அதன் பிறகு இந்த விஷயத்தில் முடிவு எடுக்கப்படும்' என்றார்.
இதையடுத்து, செய்தியாளர்களிடம் வெங்கய்ய நாயுடு கூறுகையில், "குடியரசுத் தலைவர் தேர்தல் தொடர்பாக ஒவ்வொரு அரசியல் கட்சித் தலைவர்களிடமும் பொதுவான வேட்பாளரை முன்னிறுத்துவது பற்றி பேசி வருகிறோம். அந்த வகையில் தம்பிதுரையுடனும் பேசினேன்' என்றார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com