குடியரசுத் தலைவர் பதவி தேர்தல்: உத்தவ் தாக்கரேயிடம் நேரில் ஆதரவு கோரினார் அமித் ஷா

குடியரசுத் தலைவர் பதவிக்கான தேர்தலில் சிவசேனைத் தலைவர் உத்தவ் தாக்கரேயிடம் பாஜக தேசியத் தலைவர் அமித் ஷா ஞாயிற்றுக்கிழமை நேரில் ஆதரவு கோரினார்.
மும்பையில் சிவசேனைத் தலைவர் உத்தவ் தாக்கரேவை ஞாயிற்றுக்கிழமை சந்தித்த பாஜக தேசியத் தலைவர் அமித் ஷா. உடன், மகாராஷ்டிர முதல்வர் தேவேந்திர ஃபட்னவீஸ், உத்தவ் தாக்கரேவின் மகன் ஆதித்யா தாக்கரே
மும்பையில் சிவசேனைத் தலைவர் உத்தவ் தாக்கரேவை ஞாயிற்றுக்கிழமை சந்தித்த பாஜக தேசியத் தலைவர் அமித் ஷா. உடன், மகாராஷ்டிர முதல்வர் தேவேந்திர ஃபட்னவீஸ், உத்தவ் தாக்கரேவின் மகன் ஆதித்யா தாக்கரே

குடியரசுத் தலைவர் பதவிக்கான தேர்தலில் சிவசேனைத் தலைவர் உத்தவ் தாக்கரேயிடம் பாஜக தேசியத் தலைவர் அமித் ஷா ஞாயிற்றுக்கிழமை நேரில் ஆதரவு கோரினார்.
இதுகுறித்து சிவசேனை கட்சி வட்டாரத் தகவல்கள் கூறியதாவது: சிவசேனைத் தலைவர் உத்தவ் தாக்கரேயை அவரது இல்லத்தில் அமித் ஷா ஞாயிற்றுக்கிழமை காலை சந்தித்தார். அவருடன் மகாராஷ்டிர மாநில முதல்வரும், பாஜக மூத்த தலைவருமான தேவேந்திர ஃபட்னவீஸும் உடனிருந்தார்.
இதைத் தொடர்ந்து, தலைவர்கள் தனி அறையில் ஆலோசனை நடத்தினர். காலை 10 மணிக்குத் தொடங்கிய ஆலோசனை சுமார் 75 நிமிடங்களுக்கு நீடித்தது. இந்த ஆலோசனையின்போது, குடியரசுத் தலைவர் பதவிக்கான தேர்தலில் பாஜகவுக்கு கூட்டணிக் கட்சியான சிவசேனை ஆதரவு தர வேண்டும் என்று அமித் ஷா கேட்டுக் கொண்டார்.
குடியரசுத் தலைவர் பதவிக்கான வேட்பாளர் குறித்து உத்தவ் தாக்கரேயிடம் அமித் ஷா கூறும்போது, அந்தப் பதவிக்கான மத்திய பாஜக கூட்டணி அரசின் வேட்பாளரை பிரதமர் நரேந்திர மோடி தேர்வு செய்வார் என்று அமித் ஷா தெரிவித்தார். இதற்கு உத்தவ் தாக்கரே, குடியரசுத் தலைவர் பதவிக்கான வேட்பாளரின் பெயரை பாஜக வெளியிட்டதும், அவருக்கு ஆதரவு அளிப்பது குறித்து சிவசேனை முடிவு செய்யும் என்று பதிலளித்தார் என்று சிவசேனை கட்சி வட்டாரத் தகவல்கள் தெரிவித்தன.
தலைவர்களின் சந்திப்பு குறித்து, பாஜக வட்டாரங்கள் கூறுகையில், 'வேட்பாளர் யார் என்று தெரிந்து கொள்ள விரும்புவதாகவும், அப்போதுதான் அவருக்கு ஆதரவு அளிப்பது குறித்து முடிவு எடுக்க முடியும் என்றும் உத்தவ் தாக்கரே தெரிவித்து விட்டார். எனினும், பாஜகவுக்கு சிவசேனை ஆதரவு அளிக்கும் என்று நாங்கள் நம்புகிறோம்' என்றன. உத்தவ் தாக்கரேயின் இல்லத்துக்கு, மகாராஷ்டிர மாநில பாஜக தலைவர் ராவ் சாஹேப் தான்வே, சிவசேனை மூத்த எம்.பி. சஞ்சய் ரௌத் ஆகியோரும் சென்றிருந்தனர். ஆனால், ஆலோசனையில் அவர்கள் கலந்து கொள்ளவில்லை.
பாஜகவின் மிகவும் நெருங்கிய கூட்டணி கட்சியாக பல ஆண்டுகளாக இருந்துவரும் சிவசேனை கட்சி, குடியரசுத் தலைவர் பதவிக்கு நடைபெற்ற கடந்த 2 தேர்தல்களிலும் காங்கிரஸ் வேட்பாளர்களையே (பிரதீபா பாட்டீல், பிரணாப் முகர்ஜி) ஆதரித்தது. இந்த முறை, குடியரசுத் தலைவர் பதவிக்கு இந்தியாவில் பசுமைப் புரட்சிக்கு வித்திட்ட விஞ்ஞானி எம்.எஸ். சுவாமி நாதனின் பெயரை அக்கட்சி பரிந்துரைத்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com