திட்டமிட்டபடி ஜூலை 1-இல் ஜிஎஸ்டி அமல்

ஏற்கெனவே திட்டமிட்டபடி ஜூலை 1-ஆம் தேதி முதல் ஜிஎஸ்டி வரி அமல்படுத்தப்படும் என்று மத்திய நிதியமைச்சர் அருண் ஜேட்லி உறுதிபடத் தெரிவித்தார்.
தில்லியில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தில் பங்கேற்ற மத்திய நிதியமைச்சர் அருண் ஜேட்லி, இணையமைச்சர் சந்தோஷ் கங்க்வார்
தில்லியில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தில் பங்கேற்ற மத்திய நிதியமைச்சர் அருண் ஜேட்லி, இணையமைச்சர் சந்தோஷ் கங்க்வார்

ஏற்கெனவே திட்டமிட்டபடி ஜூலை 1-ஆம் தேதி முதல் ஜிஎஸ்டி வரி அமல்படுத்தப்படும் என்று மத்திய நிதியமைச்சர் அருண் ஜேட்லி உறுதிபடத் தெரிவித்தார். இதன் மூலம் ஜிஎஸ்டி வரி நடைமுறைக்கு வருவது சிறிது காலம் ஒத்திவைக்கப்படலாம் என்ற யூகங்கள் முடிவுக்கு வந்துள்ளன.
ஏ.சி. ஹோட்டல்களுக்கான ஜிஎஸ்டி வரி சிறிது குறைக்கப்பட்டுள்ளது. மாநில அரசுகள் நடத்தும் லாட்டரிக்கு 12 சதவீத வரியும், அரசு அனுமதியுடன் தனியார் நடத்தும் லாட்டரிக்கு 28 சதவீத வரியும் விதிக்க தில்லியில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டது.
தில்லியில் மத்திய நிதியமைச்சர் அருண் ஜேட்லி தலைமையில் ஜிஎஸ்டி கவுன்சிலின் 17-ஆவது கூட்டம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. இதன் பிறகு செய்தியாளர்களிடம் ஜேட்லி கூறியதாவது:
திட்டமிட்டபடி ஜூலை 1-ஆம் தேதி முதல் ஜிஎஸ்டி வரி அமல்படுத்தப்படும். இதில் எவ்வித மாற்றமும் இல்லை. அதே நேரத்தில், அதற்கு சரியாகத் தயாராகாத நிலை இருப்பதாகக் கூறப்படுவதால், சில விதிவிலக்குகள் அளிக்கப்படுகின்றன.
இருமாதம் அவகாசம்: அதன்படி, ஜிஎஸ்டி அறிமுகப்படுத்தப்பட்ட முதல் இரு மாதங்கள் (ஜூலை, ஆகஸ்ட்) மட்டும் நிறுவனங்கள் சற்று தாமதமாக ஜிஎஸ்டி வரிக் கணக்கை தாக்கல் செய்யலாம். அதன்படி ஜூலை மாதத்துக்கான வரிக் கணக்கை ஆகஸ்ட் 10-ஆம் தேதிக்கு பதிலாக செப்டம்பர் 5-ஆம் தேதி வரை தாக்கல் செய்யலாம். ஆகஸ்ட் மாதத்துக்கான வரிக் கணக்கை செப்டம்பர் 20-ஆம் தேதி வரை தாக்கல் செய்யலாம். செப்டம்பர் மாதத்துக்கான வரிக் கணக்கை சரியான நேரத்தில் தாக்கல் செய்ய வேண்டும்.
ஜிஎஸ்டி கவுன்சிலின் அடுத்த கூட்டம், ஜூன் 30-ஆம் தேதி, அதாவது ஜிஎஸ்டி அறிமுகப்படுத்தப்படுவதற்கு முந்தைய நாள் நடைபெறும் என்றார் ஜேட்லி.
வீடு வாங்குபவர்களுக்கு பலன்: சில கட்டுமான நிறுவனங்கள் வீடுகளை முன்பதிவு செய்து ஏற்கெனவே பாதிப் பணத்தைக் கட்டியிருப்பவர்களிடம், ஜூலை 1-ஆம் தேதிக்குள் முழுப் பணத்தை செலுத்த வேண்டும் என்று வலியுறுத்துவதாகவும், இல்லையென்றால் கூடுதல் வரி செலுத்த வேண்டியிருக்கும் என்று கூறப்படுகிறதே? என்று செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர்.
இதற்கு பதிலளித்த ஜேட்லி, 'இது தவறானது. ஜிஎஸ்டி அமலுக்குப் பிறகு கட்டுமான நிறுவனங்களுக்கு ஏற்கெனவே கட்டிய சில வரிகள் திரும்பக் கிடைக்கும். இதனை வீடு வாங்குபவர்களுக்கு கட்டுமான நிறுவனங்கள் திருப்பி அளிக்க வேண்டும். இல்லையென்றால் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்' என்றார்.
அடுக்குமாடிக் குடியிருப்புகள், வணிக வளாகங்கள் கட்டுமானத்துக்கு 12 சதவீத ஜிஎஸ்டி வரி வசூலிக்கப்படவுள்ளது. இப்போது 11 சதவீத வரி உள்ளது. ஜிஎஸ்டிக்குப் பிறகு 1 சதவீதம் வரி கூடினாலும், கட்டுமான நிறுவனங்கள் சில இனங்களில் தாங்கள் செலுத்திய வரிகளைத் திரும்பப் பெற ஜிஎஸ்டி-யில் வழிவகை உள்ளது. எனவே, அவற்றின் பயனை வீடுகளை வாங்குவோருக்கு கண்டிப்பாக அளிக்க வேண்டும்.
ஏ.சி. ஹோட்டல்களுக்கு சலுகை: இதற்கு முன்பு ஒருநாளுக்கு ரூ.5000-க்கு மேல் வாடகை வசூலிக்கும் ஏ.சி. ஹோட்டல்களுக்கு 28 சதவீத ஜிஎஸ்டி விதிக்கப்பட்டிருந்தது. இப்போது ஒருநாள் வாடகை ரூ.7,500-க்கும் அதிகமான வாடகை உள்ள ஹோட்டல்களுக்கு மட்டும் 28 சதவீத வரி ஏன்று மாற்றி அமைக்கப்பட்டுள்ளது. ரூ.2,500 முதல் ரூ.7,500 வரை வாடகை வசூலிக்கும் ஏ.சி. ஹோட்டல்களுக்கு 18 சதவீதம் மட்டுமே ஜிஎஸ்டி வசூலிக்கப்படும்.
லாட்டரிக்கு 12 சதவீத வரி: லாட்டரிச் சீட்டுகளைப் பொருத்தவரையில் மாநில அரசுகள் நடத்தும் லாட்டரிகளுக்கு 12 சதவீத வரியும், அரசு அங்கீகாரத்துடன் தனியார் நடத்தும் லாட்டரிகளுக்கு 28 சதவீத வரியும் விதிக்கப்படும்.
புதிய வரி விதிப்பு முறையைக் காரணமாகக் கூறி வர்த்தகர்கள், கொள்ளை லாபம் ஈட்டும் முயற்சிகளைத் தடுக்கும் விதிமுறைகளுக்கும் ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தில் ஒப்புதல் அளிக்கப்பட்டது.
முன்னதாக, இம்மாதத் தொடக்கத்தில் நடைபெற்ற ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தில் இன்சுலின், சினிமா டிக்கெட், புத்தகப் பை உள்ளிட்ட 66 பொருள்களுக்கான ஜிஎஸ்டி குறைக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com